Saturday, September 10, 2022

திருக்குறள் - அழுக்காறாமை - உய்த்துவிடும்

 

  திருக்குறள் - அழுக்காறாமை -   உய்த்துவிடும்  


என்ன முயற்சி செய்தாலும், பொறாமை வரத்தானே செய்கிறது. பொறாமை நம்மை கேட்டுக் கொண்டா வருகிறது? அதுபாட்டுக்கு வந்து உட்கார்ந்து கொள்கிறது. என்ன செய்வது? 


பொறாமை வந்து விட்டால் என்ன ஆகும்? அதனால் என்ன தீமை? பொறாமை பட்டு மற்றவர்களைப் போல நானும் முன்னேறுவேன், இல்லையெனில் பொறாமை பட்டுக் கொண்டே இருப்பேன். இதனால் யாருக்கு என்ன நட்டம்? 


வள்ளுவர் சொல்கிறார் 


"நீ பொறாமை கொண்டால் யாருக்கும் ஒரு தீமை விளையுமா இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உனக்கே பெரிய தீமை வருமே. அது பரவாயில்லையா? 


என்ன தீமை தெரியுமா?   


இந்தப் பிறவியில் உன்னிடம் உள்ள செல்வம் அனைத்தையும் அழித்து, பின் மறு பிறவியில் உன்னை நரகத்தில் கொண்டு போய் தள்ளிவிடும்...இம்மைக்கும் மறுமைக்கும் துன்பம் தரும் ஒன்று உனக்குத் தேவையா?" என்று வள்ளுவர் கேட்கிறார். 


பாடல் 


அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்துவிடும்


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_10.html


(Pl click the above link to continue reading) 


அழுக்காறு = பொறாமை 


எனஒரு = என்ற ஒரு 


பாவி = பாவி 


திருச்செற்றுத் = செல்வதை (திரு) அழித்து (செற்று )


தீயுழி = தீயில் 


உய்த்துவிடும் = தள்ளிவிடும் 


தீயில் தள்ளுவது என்றால் இந்தப் பிறவியில் ஏதோ தீயில் தள்ளுவது அல்ல. இறந்த பின், நரகத்தில் உள்ள தீயில் தள்ளிவிடும். 


அது எப்படி செல்வதை அழிக்கும், நரகத்தில் தள்ளும்?


என்னிடம் கொஞ்சம் செல்வம் இருக்கிறது. அதை நான் இன்பமாக அனுபவிக்க முடியும். ஆனால், அடுத்தவனிடம் என்னைவிட அதிகம் செல்வம் இருக்கிறதே என்ற பொறாமை வந்துவிட்டால் என்ன நிகழும்?


அவனை விட அதிகம் சொத்து சேர்க்க வேண்டும் என்ற ஆசை வரும். இருக்கிற பணத்தை செலவழிக்க மனம் வராது. நல்ல வீடு, கார், உடை, குடும்பத்தோடு பயணம், நல்ல உணவு என்று ஒன்றிலும் செலவு செய்ய மனம் வராது. பணம் இருந்தும், பணம் இல்லாத ஏழையைப் போல தரித்திரன் போல இருப்பான். 


இருக்கு,, ஆனால் இல்லை. 


இன்னும் சில பேர் என்ன செய்வார்கள் என்றால், மற்றவனுக்கு நான் ஒன்றும் குறைச்சல் இல்லை என்று காட்ட கடன் வாங்கி செலவழிக்க நினைப்பார்கள். அதிக வட்டிக்கு கடன் வாங்கி, பின் வட்டி கட்டியே இருக்கிற செல்வம் அழியும். 


வேறு சிலரோ, இப்படி வேலைக்கு போய் சம்பாதித்தால் காரியம் ஆகாது என்று குறுக்கு வழியில் சம்பாதிக்க நினைப்பார்கள். இலஞ்சம் போன்றவற்றில் ஈடுபட்டு, மானம் போய், இருக்கிற வேலையும் போய், செல்வம் எல்லாம் கரைந்து அவதிப் படுவார்கள். 


வேறு சிலரோ, தொழில் தொடங்கினால் அதிகம் சம்பாதிக்கலாம் என்று தெரியாத தொழில் இறங்கி நட்டப்பட்டு முதல் இழப்பார்ர்கள். 


இன்னும் கொஞ்சம் பேர், இந்த மாதிரி வங்கிகளில் போட்டு வைத்தால் நிறைய வட்டி கிடைக்காது என்று அதிக வட்டி தரும் நிருவனங்களி ல் பணத்தைப் போட்டு முதல் இழப்பார்கள். 


காரணம் என்ன, மற்றவன் தன்னைவிட அதிகம் சேர்த்து விட்டானே என்ற பொறாமையால் வந்த பதற்றம். 


இருக்கிற பணமும் போகும். "திரு செற்று" 


இன்னும் சிலர் ஒரு படி மேலே போய், தவறான வழியில் சென்று பணம் சம்பாதிக்க நினைப்பார்கள். சட்டத்துக்கு, நீதிக்கு புறம்பான செயல்களை செய்து பணம் சம்பாதித்து விடலாம். அந்தப் பணத்தைக் கொண்டு தண்டனையில் இருந்தும் தப்பி விடலாம். 


நரகம் என்று  ஒன்று இருக்கிறது. இங்கே தப்பலாம். அங்கே முடியாது என்கிறார் வள்ளுவர். 


பொறாமையால் எவ்வளவு துன்பம். 


தேவையா? 


பொறாமை என்பது ஒரு குணம். ஆனால் வள்ளுவர் "அழுக்காறு எனஒரு பாவி" என்கிறார். பாவி என்றால் ஒரு ஆள். குணம் எப்படி ஆள் ஆக முடியும்?


ஒரு திருடன், கொள்ளைக்காரன், அயோக்கியன் நமக்கு என்னவெல்லாம் தீமை செய்யக் கூடுமோ, அதை எல்லாம் இந்த பொறாமை நமக்குச் செய்யும் என்பதால் பொறாமையை "பாவி" என்று உருவகம் செய்தார். 


ஒரு மோசமான கொள்ளைக்காரன் என்ன செய்வான்? 


நம்மை அடித்து, துன்புறுத்தி, நம் செல்வத்தை எல்லாம் பறித்துக் கொண்டு நம்மையும், நம் குடும்பத்தையும் நடுத் தெருவில் நிறுத்தி விடுவான் அல்லவா? அதையேதான் இந்த பொறாமையும் செய்யும் என்கிறார். 



(இந்த அதிகாரத்தின் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம் 


முன்னுரை:  அழுக்காறாமை என்றால் பொறாமை கொள்ளாமை. பிறர் ஆக்கம் கண்டு பொறுத்துக் கொள்ளும் தன்மை இல்லாமை.  பிறர் ஆக்கம் கண்டு பொறாமை என்பார் பரிமேலழகர். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/07/blog-post_31.html


குறள்  எண் 161:

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து

அழுக்காறு இலாத இயல்பு

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post.html


குறள்  எண் 162:  (பாகம் 1)


விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/1.html


குறள்  எண் 162:  (பாகம் 2)

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்



குறள்  எண் 162:: அறனாக்கம்

அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்

பேணாது அழுக்கறுப் பான்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_16.html


குறள்  எண் 163: அல்லவை செய்யார்


அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்

ஏதம் படுபாக்கு அறிந்து

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_22.html


குறள்  எண் 164: அது சாலும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_26.html


குறள்  எண் 165: இன்றிக் கெடும்

https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_31.html


குறள்  எண் 166: காட்டி விடும் 

https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_24.html





)


No comments:

Post a Comment