திருவாசகம் - திரு அம்மானை - பெண் சுமந்த பாகத்தன் - பாகம் 1
திருவாசகத்தில் உள்ள அத்தனை பாடல்களும் உள்ளத்தை உருக்குபவைதான் என்றாலும், சில பாடல்கள் ஒரு முறை படித்தவுடனேயே நாக்கில் ஒட்டிக் கொண்டு சொல்லும் போதெல்லாம் ஏதோ செய்யும்.
அப்படிப்பட்ட பாடல்களில் இன்று நாம் காண இருக்கும் பாடலும் ஒன்று.
பாடலுக்கு முன்னுரை சொல்வதைவிட நேரடியாக பாடலையே வாசித்து விடலாம்.
பாடல்
பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன், பெம்மான், பெருந்துறையான்,
விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்து ஈசன்,
கண் சுமந்த நெற்றிக் கடவுள், கலி மதுரை
மண் சுமந்த கூலி கொண்டு, அக் கோவால் மொத்துண்டு
புண் சுமந்த பொன் மேனி பாடுதும் காண்; அம்மானாய்!
பண்கள் அமைந்த பாடல்களால் தன்னை துதிப்பவர்களுக்கு அவர்கள் வேண்டும் பரிசுகளை தந்து அருள் செய்பவன். பெண்ணை பாகமாகக் கொண்டவன். பெரியவன். திருபெருந்துறையில் உறைபவன். வானாளாவிய புகழ் கொண்டவன். நெற்றிக் கண் உடையவன். மதுரையில் மண் சுமந்து, பாண்டிய மன்னனால் அடிபட்டு உடம்பில் புண் கொண்டவன். பொன் போன்ற நிறத்தை உடையவன்.
இப்படி எல்லாம் பொருள் சொன்னால் அது திருவாசகத்துக்கு செய்யும் தீமை ஆகும்.
எப்படிச் சொல்வது? எப்படிச் சொல்வது?
பாண்டிய மன்னன் பொருள் கொடுத்து குதிரை வாங்கி வரும்படி மாணிக்கவாசகரிடம் சொன்னான். அவரோ, குதிரை வாங்காமால் அந்தப் பணத்தில் கோயில் கட்டிவிட்டார். சினம் கொண்ட பாண்டியன் அவரை சிறையில் போட்டு விட்டான். பின் சிவனே குதிரை கொண்டு வந்து கொடுத்தார். பாண்டியன் மணிவாசகரை விடுவித்தான். ஆனால், சிவன் கொண்டு வந்த குதிரைகள் எல்லாம் நரிகளாகி ஓடிவிட்டன. இதனால் கோபம் கொண்ட பாண்டியன், மணிவாசகரை மீண்டும் பிடித்து வந்து வைகை ஆற்றில், சுடு மணலில் நிற்க வைத்தான். சிவன் வைகையில் வெள்ளம் வரச் செய்தார். வெள்ளம் கரையை உடைத்து கொண்டு ஊருக்குள் வந்து விடும் போல் இருந்தது. வீட்டுக்கு ஒரு ஆள் அனுப்பி கரையை உறுதிச் செய்ய பாண்டியன் உத்தரவு போட்டான்.
மதுரையில் வந்தி என்ற பிட்டு விக்கும் கிழவிக்கு யாரும் இல்லை. அவளாலும் வேலை செய்ய முடியாது. சிவன், கூலி ஆள் போல் வந்து, வந்தியிடம் "உனக்கு பதில் நான் போகிறேன், கூலிக்கு பதில் உதிர்ந்த புட்டுகளை தா" என்று வாங்கிக் கொண்டு சென்றார். போன ஆள் வேலை செய்யாமால் தூங்கிக் கொண்டு இருக்கவே, அது கண்டு பாண்டியன் வந்திருக்கும் கூலித் தொழிலாளி சிவன் என்று அறியாமல் அவர் முதுகில் பிரம்பால் அடித்தான்.
அதுவரை கதை.
எல்லோரும் அறிந்தது.
அது ஒரு புறம் இருக்கட்டும்.
(pl click the above link to continue reading)
சில சமயம் வீட்டில் சின்னப் பிள்ளை தவழ்ந்து தவழ்ந்து சென்று அருகில் உள்ள அடுப்பில் கை வைக்க போய் விடும், அல்லது fan ஐ இழுத்து விடப் போகும்....அதைக் கண்டு பதறிப் போய் தாய் ஓடி வந்து பிள்ளையை சட்டென்று இழுத்து "ஒரு இடத்துல இருக்க மாட்டியா" என்று பதற்றத்தில் ஒரு அடி போட்டு விடுவாள். அவளுக்கு ஆதங்கம். பிள்ளை ஆபத்தில் மாட்டிவிடுவானே என்ற பயம்.
கொஞ்ச நேரம் கழித்து பதற்றம் எல்லாம் தணிந்த பின், பிள்ளை அது பாட்டுக்கு தூங்கும். அம்மா அருகில் சென்று பார்ப்பாள். முதுகில் அவள் கை பட்டு அடித்தஇடம் சிவந்து இருக்கும். அவளுக்குத் தாங்காது. அதை மெல்ல தடவிக் கொடுப்பாள்.பெரிய அடி ஒன்றும் இல்லை. பிள்ளை அதை மறந்து தூங்கிக் கொண்டு இருக்கும்.
ஆனால், அவள் மனம் தாங்காது.
பிள்ளைக்கு ஒரு சின்ன துன்பம் என்றாலும் அவளால் பொறுக்க முடியாது.
அவ்வளவு அன்பு. பாசம். காதல்.
சிவன் முதுகில் பாண்டியன் ஒரு அடிதான் அடித்தான். அதில் ஒன்றும் பெரிதாக புண் வந்திருக்காது. இருந்தும் மணி வாசகருக்கு தாங்கவில்லை.
"புண் சுமந்த பொன் மேனி"
என்று உருகுகிறார்.
இதன் தொடர்ச்சியை நாளைய பதிவில் காண்போம்
(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
முன்னுரை:பா
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html
அறைகூவி, வீடு அருளும்
வாரா வழியருளி
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html
அந்தம் இலா ஆனந்தம்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_19.html
தாய்போல் தலையளித்திட்டு
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_24.html
கல்லைப் பிசைந்து கனி ஆக்கி
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_28.html
காட்டாதன எல்லாம் காட்டி
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/blog-post_18.html
தாயான தத்துவனை
)
No comments:
Post a Comment