கந்தரனுபூதி - சும்மா இரு
(இதன் முந்தைய பதிவுகளின் வலைதள விவரங்களை இந்தப் பதிவின் இறுதியில் பகிர்ந்து இருக்கிறேன். தேவை இருப்பின், அவற்றையும் வாசித்துக் கொள்ளலாம்)
கந்தரனுபூதியில் மிகவும் மேற்கோள் காட்டப்பட்ட பாடல் என்று இன்று நாம் காண இருக்கும் பாடலைச் சொல்லலாம்.
அருணகிரிநாதர் அழகில், பெண்கள் பால் நாட்டம் உள்ளவர். பல பெண்களின் தொடர்பு இருந்தது. அதனால் உடலில் நோய் வந்து சேர்ந்தது. அழகு அழிந்தது.
அழகும் போனதால், பெண்கள் அவரை வெறுக்கத் தொடங்கினார்கள். நோய் செய்யும் வருத்தம் ஒரு புறம். வாழ்க்கை வெறுத்துப் போய், தற்கொலை செய்ய நினைத்து, திருவண்ணாமலை கோவில் கோபுரத்தில் ஏறி குதித்து விட்டார்.
விழும் போது, முருகன் அவரை கையில் ஏந்திக் கொண்டான்.
"முருகா, என்னை காத்தாய். எனக்கு உபதேசம் தந்தருள்வாய்" என்று வேண்டினார்.
முருகனும் உபதேசம் செய்தான்.
நாம் நினைப்போம், ஒரு நாலைந்து நாள் செய்திருப்பார் என்று. எவ்வளவு இருக்கிறது சொல்ல.
வேதம், இதிகாசம், புராணம், ஆகமம், என்று எவ்வளவு இருக்கிறது.
அதெல்லாம் இல்லை.
முருகன் இரண்டே இரண்டு வரி உபதேசம் செய்தான்.
"சும்மா இரு"
"சொல் அற"
அவ்வளவுதான்.
மிக எளிதாக இருக்கிறதே என்று நினைப்போம்.
சும்மா இருக்கணும். அவ்வளவு தானே. இது என்ன பெரிய விடயமா என்று நினைப்போம்.
உடம்பு சும்மா இருந்தால் கூட, எண்ணங்கள் ஓடிக் கொண்டே இருக்கும். என்னணம் என்றால் வார்த்தைகள். நம் சிந்தனை எல்லாம் வார்த்தைகள் தான்.
வார்தைகள் இல்லாமல் சிந்திக்க முடியுமா?
சும்மா இரு. சொல் அற என்றால் சொல்லை அறவே விட்டு விட வேண்டும். மனதில் கூட சொல் ஓடக் கூடாது.
தனக்கு தானேயும் பேசிக் கொள்ள கூடாது.
நடக்கிற காரியமா?
ஒரு நாள் WA பார்க்காமல் இருக்க முடியுமா? அரட்டை அடிக்காமல் இருக்க முடியுமா?
பாடல்
செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இரு சொல்லற வென்றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே
பொருள்
(pl click the above link to continue reading)
செம்மான் மகளைத் = சிவந்த மானின் வயிற்றில் இருந்து பிறந்த மகளான வள்ளியை
திருடுந் திருடன் = அவளுடைய தாய் தந்தைக்குத் தெரியாமல் திருடிய திருடன்
பெம்மான் = பெரியவனான
முருகன் = முருகன்
பிறவான் இறவான் = பிறப்பும், இறப்பும் இல்லாதவன். முருக ஜெயந்தி உண்டா?
சும்மா இரு = சும்மா இரு
சொல்லற = சொல் அற
வென்றலுமே = என்று சொன்னவுடன்
அம்மா = வியப்பு. இது எப்படி முடியும் என்ற வியப்பு
பொரு ளொன்று மறிந்திலனே = அதன் பொருள் ஒன்றும் அறியாமல் இருக்கிறேனே
அம் + மா + பொருள் = அந்தப் பெரிய பொருள் என்று உரை செய்வாரும் உண்டு.
ஆன்மீக பாதையின் முதல் அடி பேச்சைக் குறைப்பது. எதற்கு எடுத்தாலும் ஒரு தர்க்கம், மறு பேச்சு, எதிர்ப்பு, என்று மனம் சதா காலமும் சத்தம் போட்டுக் கொண்டே இருந்தால், அது எங்கே வளவது.
சத்தத்தை, இரைச்சலை குறைக்க வேண்டும்.
செயல் மாண்டு அடங்க வேண்டும்.
பின்னால் ஒரு பாடலில் "செயல் மாண்டு அடங்க" என்று சொல்ல இருக்கிறார்:
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.
மனதை, வாக்கை சலனம் அற்று இருக்க பழக்குங்கள்.
"சித்த விருத நிரோதம்" - சித்ததில் வரும் சலனங்களை நிறுத்துவது தான் யோகாவின் நோக்கம் என்பார் பதஞ்சலி
[
மெய்யியல் - பகுதி 1
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/1.html
மெய்யியல் - பகுதி 2
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/2.html
மெய்யியல் - பகுதி 3
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/3.html
மெய்யியல் - பகுதி 4
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/4.html
மெய்யியல் - பகுதி 5
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/5.html
மெய்யியல் - பகுதி 6
https://interestingtamilpoems.blogspot.com/2022/09/6.html
மெய்யியல் - பகுதி 7
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/7.html
நின்று தயங்குவதே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_14.html
வள்ளி பதம் பணியும்
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_20.html
விடுவாய் வினையா வையுமே
https://interestingtamilpoems.blogspot.com/2022/10/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post.html
பரிசென் றொழிவேன்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_7.html
எதிரப் படுவாய்
https://interestingtamilpoems.blogspot.com/2022/11/blog-post_26.html
மெய்ப் பொருள் பேசியவா
https://interestingtamilpoems.blogspot.com/2022/12/blog-post_11.html
]
No comments:
Post a Comment