Saturday, March 31, 2012

திரு வாசகம் - திரு தெள்ளேணம்

தெள்ளேணம் எனபது ஒரு இசைக் கருவி. தோற்க் கருவி. அதை தட்டி தட்டி
பாடுவார்கள். அப்படி "தெள்ளேணம் கொட்டாமோ" என்று மாணிக்க வாசகர் பத்து பாடல்கள்
பாடி உள்ளார். அதில் இருந்து சில.

----------------------------------------------------------------------------------------------------
உருகிப் பெருகி உளங்குளிர முகந்துகொண்டுபருகற் கினிய பரங்கருணைத்
தடங்கடலைமருவித் திகழ்தென்னன் வார்கழலே நினைந்தடியோம்திருவைப் பரவிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.
-----------------------------------------------------------------------------------------------------


பதம் பிரித்த பின்


----------------------------------------------------------------------------------------------------------
உருகி பெருகி உள்ளம் குளிர முகந்து கொண்டு
பருகர்க் இனிய பரங் கருணை தடங் கடலை
மருவி திகழ் தென்னன் வார் கழலே நினைந்து அடியோம்
திருவை பரவி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
----------------------------------------------------------------------------------------------------------


உருகி = உள்ளம் உருகி

பெருகி = அன்பினாலும், பக்தியாலும் உடல் பூரித்து

உள்ளம் குளிர = உள்ளம் குளிர

முகந்து கொண்டு = தண்ணீரை முகந்து

பருகர்க் இனிய = குடிப்பதற்கு இனிமையான

பரங் கருணை = மேலான கருணை உடைய

தடங் கடலை = அலைகளை கொண்ட கடலை

மருவி = சேர்ந்து

திகழ் தென்னன் = பெருமை உடைய, சிறப்பு உடைய தென் நாட்டை சேர்ந்தவனான
சிவனின்

வார் கழலே = நீண்ட திருவடியை

நினைந்து அடியோம் = நினைத்து அடியவர்களாகிய நாம்

திருவை பரவி = அவனைப் புகழ்ந்து (திரு = உயர்வு, சிறப்பு, செல்வம்
)

நாம் தெள்ளேணம் கொட்டாமோ = நாம் தெள்ளேணம் கொட்டாமோ

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


நாம் எல்லாம் கடல் பார்த்து இருக்கிறோம். அதில் உள்ள தண்ணீர் எப்படி
இருக்கும் ? ஒரே உப்பாய் இருக்கும். வாயில் வைக்க முடியுமா ? ஆனால் அந்த கடலே
குடிக்க இனிமையான நீரால் நிறைந்து இருந்தால் எப்படி இருக்கும் ? இறைவனின் அருள்
அப்படி அளவற்றதாய் கடல் நிறைந்த நல்ல தண்ணீரைப் போல இருக்குமாம்.


இன்னொரு அர்த்தம்.


நமக்குத் தான் கடல் நீர் உப்பாக இருக்கிறது.
அதில் உள்ள மீனுக்கு அது ஒண்ணும் கஷ்டமாய் இல்லை. அந்த நீரை குடித்து, சுவாசித்து
உயிர் வாழ்கிறது. அது போல் இறைவனின் கருணையில் மூழ்கி திளைக்கும் பக்தர்களுக்கு
அந்த நீர் வாழ்வாதாரம். அந்த கடலில் மூழ்காமல் கரையில் நின்று கொண்டு தர்க்கம்
பண்ணி கொண்டு இருப்பவர்களுக்கு அது உப்பு நீர்.
சொலறத சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்.

2 comments:

  1. இரத்தினசாமி - நல்ல முயற்சி. தொடர்ந்து எழுது. நமது குழுமத்தில் எழுதும் தமிழ் சார்ந்த எல்லாவற்றையும் இங்கேயும் பதிவு செய்தால், மற்றவர்களுக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்கும்.
    அன்புடன்
    பாலாஜி

    ReplyDelete
  2. நன்றி.

    நீங்கள் பட்ட துன்பம் இந்த உலகமும் படட்டும் என்ற உயர்ந்த நோக்கில் ஆரம்பிக்கப்பட்டது இந்த blog ...:)

    ReplyDelete