இராமாயணம் - கணையாழியின் கதை
இராமன் கணையாழியை சீதையை காணச் சென்ற அனுமானிடம் கொடுத்து அனுப்பினான். சீதை அதைக் கண்டு மகிழ்ந்தாள். பின் , திரும்பி வந்த அனுமன் அந்த கணையாழியை இராமனிடம் திருப்பி தந்ததாக தெரியவில்லை.
பதிநான்கு வருடம் முடிந்து இராமன் அயோத்தி வர வேண்டும். வரவில்லை. பரதன் தீயில் விழுந்து உயிரை விடுவேன் என்று துணிகிறான்.
எங்கே பரதன் தீயில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்வானோ என்று பயந்து அனுமானை அனுப்புகிறான்.
அனுமன் நந்தியம்பதியை அடைந்து, பரதனை கண்டு, இராமன் வரும் செய்தியை சொல்லி அவனிடம் கணையாழியை காண்பிக்கிறான்.
பரதன் கணையாழியை கண்டு அடைந்த மகிழ்ச்சியை கம்பன் விவரிக்கிறான்....
பாடல்
மோதிரம் வாங்கித்தன் முகத்தின் மேலணைத்து
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோஎனா
ஓதினர் நாணுற ஓங்கினான் தொழும்
தூதனை முறைமுறை தொழுது துள்ளுவான்
பொருள்
மோதிரம் வாங்கித் = கணையாழியை வாங்கி
தன் முகத்தின் மேலணைத்து = தம் முகத்தின் மேல் அணைத்து. அணைத்து என்பது இனிய பத பிரயோகம்.
ஆதரம் பெறுவதற்கு ஆக்கையோ = இராமன் நினைவாகவே பரதன் விரதம் பூண்டு இருந்தான். ஊன் உறக்கம் மறந்து, உடல் மெலிந்து காணப் பட்டான். இராமன் வந்தால், அவன் அன்பை பெரும் அளவிற்க்கு இவன் உடல் தாங்குமா என்று எல்லோரும் நினைத்தார்கள். அந்த சந்தோஷத்திலேயே இவன் உயிரை விட்டு விடுவான்
எனா ஓதினர் = என்று கூறியவர்கள்
நாணுற = வெட்கப் படும்படி
ஓங்கினான் = மகிழ்ச்சியில் உயர்ந்து பூரித்து எழுந்தான்
தொழும் தூதனை = தன்னிடம் தொழுது நின்ற தூதனான அனுமானை
முறைமுறை தொழுது துள்ளுவான் = மீண்டும் மீண்டும் தொழுது துள்ளுவான்
கணையாழி கடைசியில் பரதனிடம் வந்து சேர்ந்தது. இராமாயணத்தில், அதன் பின் அந்த கணையாழி வேறு எங்கும் போக வில்லை.
கணையாழி இரண்டாம் முறையாக உயிர் காத்தது....
அது சரி, அந்த கணையாழி இன்றும் பல்வேறு விதத்தில் இன்றும் நம்மிடம் நிலவி வருகிறது...அது எது தெரியுமா ?
நாளை அதைப் பற்றி சிந்திப்போம்....
அருமையான பாடல். இருவரும் ஒருவரை ஒருவர் தொழுதனராம்!! உடல் நைந்ததும், பூரித்ததும் இனிமை.
ReplyDeleteஇன்னும் கணையாழியின் கதை கேட்க ஆவலாய் உள்ளேன்.
கணையாழியை அனுமன் கொடுத்தபின் சீதையே அதை வைத்திருந்தாள். அதற்கு பதிலாக தனது சூடாமணியை கொடுத்தனுப்பினாள். அதை ஸ்ரீ ராமன் கிஷ்கிந்தையில் பெற்றுக்கொண்டான். அது என்னாயிற்று? ஏதாவது பாடலுண்டா?
ReplyDelete