Tuesday, December 3, 2013

நன்னெறி - கதிர் வரவால் பொங்கும் கடல்

நன்னெறி - கதிர் வரவால் பொங்கும் கடல் 


கடுமையாக பேசி காரியம் சாதிக்க முடியாது. கோபப் பட்டு, கடுமையான சொற்களை கூறி , மிரட்டி காரியம்  சாதிக்க முடியாது.

சூரியன் மிகப் பெரியதுதான், மிகுந்த சக்தி வாய்ந்ததுதான் ஆனால் கடல் சூரியனின் கதிருக்கு பொங்காது. குளிர்ந்த கதிரை வீசும் நிலவின் கதிருக்கு கடல் பொங்கும்.

மக்கள் இனிய சொல்லுக்கு தலை சாய்ப்பார்கள்.....


பாடல்

இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய் 
அதிர்வளையாய் பொங்காது அழல்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல். 

பொருள் 

இன்சொலா லன்றி = இன் சொல்லால் அன்றி
இருநீர் வியனுலகம் = இரண்டு நீரைக் கொண்ட இந்த பெரிய உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே = வன்மையான சொற்களால் என்றும் மகிழாது
பொன்செய் = பொன்னால் செய்யப்பட்ட
அதிர்வளையாய் = அதிரும் வளையலை அணிந்த பெண்ணே
பொங்காது  அழல் கதிரால் = அனல் வீசும் கதிரால் பொங்காது
தண்ணென் = குளிர்ந்த
கதிர்வரவால் = கதிர்களை வீசும் நிலவின் வரவால்
பொங்குங் கடல் = பொங்கும் கடல்

இனிய சொற்களை பேசிப் பழகுங்கள். உலகம் உங்கள் சொல்லுக்கு தலை ஆட்டும்.

(மூணாபில் படித்த பாடல்...ஞாபகம் இருக்கிறதா ?...:))


2 comments:

  1. எனக்கு முதல் இரண்டு வரி நினைவு இருந்தது, மற்றது மறந்துவிட்டது! நல்ல பாடல், பழைய ஞாபகம்! நன்றி.

    ReplyDelete
  2. சிறப்பு.... 2001 முதல் 2006 வரை 5ம் வகுப்பில் இருந்தது|

    ReplyDelete