Wednesday, April 23, 2014

கம்ப இராமாயணம் - எளிமை ஆனாய்

கம்ப இராமாயணம் - எளிமை ஆனாய் 


போரில் இராவணன் இறந்து கிடக்கிறான். அவன் மேல் விழுந்து அழுகிறான் வீடணன்.

சீதை மேல் கொண்ட காதல் எவ்வளவு பெரிய இராவணனை எவ்வளவு கீழிறங்கி வர வைத்து சாதாரண ஆளாக ஆக்கி விட்டது. கடைசியில் ஒன்றும் இல்லாமால் வெறும் போர்க்  களத் தரையில் கிடக்கிறான்.

காதலுக்கு அவன் கொடுத்த விலை அது.

வீடணன் ஏதேதோ நினைக்கிறான்.

இராவணன் ஒரு முறை சூர்பனகையின் கணவனை ஒரு போரில் கொன்று விட்டான். அதற்கு பழி தீர்க்கத்தான் சூர்பனகை சீதை மேல் காதலை இராவணனிடம் ஊட்டி, இராமனின் பகையைத்  ,தேடித் தந்து, இராமன் இராவணனை கொல்லும்படி செய்தாளோ என்று நினைக்கிறான் வீடணன். சூர்பனகை பழி தீர்த்துக் கொண்டாள் என்று நினைக்கிறான். உன்னை பார்க்க எல்லோரும் அஞ்சி நடுங்குவார்களே. இன்று நீ யார் முகத்தை பார்க்கிறாய் என்று அவலத்தின் உச்சியில் நின்று புலம்புகிறான் வீடணன்.


பாடல்

''கொல்லாத மைத்துனனைக் கொன்றாய்'' என்று அது குறித்துக் கொடுமை சூழ்ந்து, 

பல்லாலே இதழ் அதுக்கும் கொடும் பாவி நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! 

நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார், நம்பி! நம்மோடு 

எல்லாரும் பகைஞரே; யார் முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 



பொருள்


''கொல்லாத மைத்துனனைக் = கொல்லத் தகாத மைத்துனனை 

 கொன்றாய்''  = (இராவணா நீ ) கொன்றாய்

என்று = என்று

அது குறித்துக் = அதை மனதில் குறி கொண்டு

கொடுமை சூழ்ந்து = கொடுமை மனதில் சூழ

பல்லாலே = தன்னுடைய பெரிய பற்களால் 

இதழ் அதுக்கும் = இதழை கடிக்கும் (கோபத்தில் )

கொடும் பாவி = கொடுமையான பாவியான சூர்பனகை

நெடும் பாரப் பழி தீர்ந்தாளே! = பாரமான நீண்ட பழியைத் தீர்த்துக் கொண்டாளோ ?


நல்லாரும் = நல்லவர்களும்

தீயாரும் = தீயவர்களும்

நரகத்தார் = நரகத்தில் உள்ளவர்களும்

துறக்கத்தார் = சொர்க்கத்தில் இருப்பவர்களும்

நம்பி! = சகோதரனே

நம்மோடு எல்லாரும் பகைஞரே; = நமக்கு எல்லோரும் பகைவர்களே

யார் முகத்தே விழிக்கின்றாய்? = இன்று நீ யார் முகத்தில் விழிப்பாய்

எளியை ஆனாய்! = எவ்வளவு பெரிய ஆளாக இருந்து இன்று எவ்வளவு சாதாரண ஆளாக   மாறி விட்டாய்

1 comment:

  1. மனதை உருக்குகின்றன இந்தப் புலம்பல் பாடல்கள்.

    நன்றி.

    ReplyDelete