அபிராமி அந்தாதி - என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்
ஒரு பெண்ணை காதலிப்பவன் அவனுடைய காதலியை காணாமல் எப்படி தவிப்பான்.
காலையில் எழுந்தவுடன், அவள் இந்நேரம் எழுந்திருப்பாளா , பல் விளக்கி இருப்பாளா, குளித்து, கல்லூரிக்குப் போக தயாராகி இருப்பாளா, இப்போது மதியம் உணவு உண்டிருப்பாளா , இப்ப வீட்டுக்கு வந்திருப்பாள், இப்ப படித்துக் கொண்டிருப்பாள், இப்ப படுக்கப் போய் இருப்பாள், இப்ப தூங்கி இருப்பாள் என்று எந்நேரமும் அவள் நினைவாகவே இருப்பான் அல்லவா ?
பட்டரும் அதே போல அபிராமியின் நினைவாகவே இருக்கிறார்...எந்நேரமும் அவள் நினைவுதான் அவருக்கு.
நிற்கும் போதும்,
படுத்து இருக்கும் போதும்,
ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நடந்து செல்லும் போதும்
அவளையே நினைத்துக் கொண்டிருக்கிறார்.
"நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை"
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று மணிவாசகர் சொன்ன மாதிரி சதா சர்வ காலமும் அவள் நினைப்பே.
அன்பு, காதல் , பக்தி எல்லாம் படித்து விளங்காது. அது ஒரு அனுபவம். அனுபவம் இருந்தால் புரியும். இல்லை என்றால் அது என்னவென்றே விளங்காது.
பக்தியை புத்தகத்தில் தேடக் கூடாது.
"எழுதா மறையின் ஒன்றும் அரும் பொருளே" என்கிறார் பட்டர்.
எழுதாத வேதம் அவள் பாதங்கள். சொல்லி விளங்க வைக்க முடியாது. ஒருவர் பெற்ற அனுபவத்தை எழுத்தில் இறக்கி வைக்க முடியாது.
நினைக்க நினைக்க அவர் மனத்தில் ஆனந்தம் பொங்குகிறது.
பாடல்
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!
பொருள்
நின்றும் = நிற்கும் போதும்
இருந்தும் = உட்கார்ந்து இருக்கும் போதும்
கிடந்தும் = படுத்து கிடக்கும் போதும்
நடந்தும் = நடக்கும் போதும்
நினைப்பதுன்னை = நான் நினைப்பது உன்னைத்தான்
என்றும் வணங்குவது = நான் எப்போதும் வணங்குவது
உன்மலர்த்தாள்! = உன் மலர் போன்ற திருவடிகளைத்தான்
எழுதா மறையின் = எழுதாத வேதத்தின்
ஒன்றும் அரும் பொருளே! = ஒன்றான அரிய பொருளே . "போற்றி என் வாழ் முதலாகிய பொருளே" என்பார் மணிவாசகர்.
அருளே! = அருள் வடிவானவளே
உமையே! = தூய்மையானவளே
இமயத்து அன்றும் பிறந்தவளே! = பர்வத இராஜனுக்கு மகளாக பிறந்தவளே
அழியாமுத்தி ஆனந்தமே! = அழியாத முக்தியும் ஆனந்தமும் ஆனவளே
சொல்லித் தெரியாது காமம்.
சொன்னாலும் தெரியாது காதல்.
பக்தியும் அப்படித்தான்
உணர்ந்து பாருங்கள்.
அருமையான பாடல்.
ReplyDeleteபக்தி எல்லாம் உணரக் கொடுத்து வைக்கவில்லை!
எழுதா மறை உன் மலர் தாள்
Deleteஇந்த ஒரு வரி போதும்
பட்டர் மன நிலை புரிவதற்கு. நன்றி RS. இந்த அருமையான பாடலை எங்களுக்கு புரிய வைத்ததற்கு.