இராமாயணம் - வினையின் வழி
இராமன் பிறக்கப் போகும் அயோத்தி நகரைப் பற்றி கம்பன் வர்ணித்துக் கொண்டே செல்கிறான். முதலில் மழை வளம் பற்றிப் பாடுகிறான். அந்த மேகம் எப்படி சிவனைப் போல சென்று திருமாலைப் போல கறுத்து வந்தது என்று கூறியதைப் பார்த்தோம்.
அந்த மழை மலையின் மேல் பொழிந்து ஆறாக பெருகி வருகிறது.
எப்படி வருகிறது என்று சொல்கிறான் கம்பன் இந்தப் பாடலில்.
அதற்கு முன்.....
நம் வாழ்க்கை ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எப்படி இருந்தது ? இப்போது எப்படி இருக்கிறது. இப்படி இருக்கும் என்று நாம் நினைத்துப் பார்த்தோமா ?
நினைக்காததை எல்லாம் விதி நடத்திவிட்டுப் போய் விடுகிறது.
நல்லதும் நடந்திருக்கும், அல்லாததும் நடந்திருக்கும்.
இன்னும் பத்து பதினைந்து வருடத்தில் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியுமா ? விதி எதை எப்படி மாத்துமோ யாருக்குத் தெரியும் ?
விதியை ஏன் இங்கே சொல்கிறேன் என்றால், சரயு நதி போகும் வழியில் உள்ள இடத்தை எல்லாம் தலை கீழாக மாற்றி போட்டுவிட்டுப் போய் விடுகிறது.
விதி, வாழ்கையை மாற்றுவதைப் போல.
பாடல்
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,
மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப்
பொரு அரு மருதம் ஆக்கி,
எல்லை இல் பொருள்கள்
எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல் உறு கதியில் செல்லும்
வினை எனச் சென்றது அன்றே.
பொருள்
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி = முல்லை நிலத்தை குறிஞ்சி நிலமாக்கி
மருதத்தை முல்லை ஆக்கிப் = மருத நிலத்தை முல்லை நிலமாக்கி
புல்லிய நெய்தல் தன்னைப் = மென்மையான நெய்தல் நிலத்தை
பொரு அரு மருதம் ஆக்கி = உயர்ந்த மருத நிலமாகச் செய்து
எல்லை இல் பொருள்கள் = எல்லை இல்லாத பொருள்கள்
எல்லாம் = எல்லாம்
இடை தடுமாறும் நீரால் = இடத்தை விட்டு தடுமாறி நீரால்
செல் உறு கதியில் செல்லும் = செல்கின்றன கதியில் செல்லும்
வினை எனச் சென்றது அன்றே = வினையைப் போலச் சென்றது
முல்லையை குறிஞ்சி ஆக்குகிறது. மருத நிலத்தை முல்லை நிலமாக்குகிறது. நெய்தல் நிலத்தை மருதமாக்குகிறது.
வேலை கிடைக்காது என்று நினைத்திருப்போம். கிடைத்து விடும். கிடைத்த வேலை நிலைக்கும் என்று நினைத்திருப்போம், ஏதோ காரணத்தால் கை விட்டுப் போய் விடும். திருமணம், குழந்தைகள், அவர்களின் படிப்பு, துணையின் உடல் நலம், உடன் பிறப்புகளின் நிறம் மாற்றம் என்று விதி எப்படியெல்லாம் வாழ்கையை மாற்றிப் போடுகிறது.
பாடலின் உள் அர்த்தத்தை பார்பதற்கு முன்னால் , அது என்ன முல்லை, குறிஞ்சி, நெய்தல், மருதம்....என்று பார்ப்போம்.
தமிழர்கள் தாங்கள் வாழும் நிலத்தை பிரித்தார்கள்.
எப்படி பிரித்தார்கள் தெரியுமா ?
ஆற்றின் கரையில் தான் நாகரிகம் பிறக்கிறது.
ஆறு எங்க தொடங்குகிறதோ அங்கிருந்து தொடங்கி அதன் போக்கிலேயே போய் நிலத்தை பிரித்தார்கள்.
ஆறுகள் பொதுவாக மலையில் தான் பிறக்கும் - எனவே முதல் நிலம் குறிஞ்சி. மலையும் மலை சார்ந்த இடமும்.
பின் ஆறு மலையில் இருந்து இறங்கி கரடு முரடான காட்டின் வழி வரும். எனவே அடுத்த இடம் முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்.
பின் அது வேகம் குறைந்து நிதானமாக நிலத்தில் ஓடத் தொடங்கும். அது மருதம். வயலும் வயல் சார்ந்த இடமும்.
பின் ஓடிப் போய் கடலில் சேரும். அது நெய்தல். கடலும், கடல் சார்ந்த இடமும்.
இப்படி ஆற்றின் ஓட்டத்தின் கூடவே தாங்கள் வாழும் நிலத்தைப் பிரித்தார்கள்.
சரி, பாலை ஒன்று ஒரு நிலம் உண்டே, அது எங்கே ?
பாலை என்பது ஒரு தனி இடம் இல்லை.
குறிஞ்சியும் முல்லையும் தம்முள் திரிந்து பாலை என்றோர் படிவம் கொள்ளும் என்றார்கள்.
அது ஏன் குறிஞ்சியும் முல்லையும் மட்டும் பாழ் பட்டு பாலை என்றோர் படிவம் கொள்ள வேண்டும் ? ஏன் மருதமும் நெய்தலும் பாழ் பட்டு பாலையாகக் கூடாதா என்றால் .....
மருத நிலத்தில் விவசாயிகள் தங்களுக்கு வேண்டிய நீரை ஏரி , குளம் என்று தேக்கி வைப்பார்கள். எனவே அது பாலையாக மாறாது.
அதே போல நெய்தல் நிலத்தில் கடல் செடிகள் - நாணல், கடல் பாசி போன்ற தாவரங்கள் வளரும் எனவே அவையும் பாலையாக மாறாது.
எவ்வளவு நுணுக்கமாக ஆராய்ந்து நிலத்தை பிரித்திருக்கிறார்கள் !
சரி, இந்த பாடலில் அப்படி என்ன அர்த்தம் இருக்கிறது ?
மழை பொழிந்தது. ஆற்றில் நீர் வந்தது என்று சொல்லி விட்டுப் போக வேண்டியதுதானே.
இதை அதாக மாற்றியது,இதை இதாக மாற்றியது என்று ஏன் இந்தப் பீடிகை ?
பின்னால் இராமனின் வாழ்க்கையில் இப்படி எல்லாம் சம்பவங்கள் நிகழப் போகின்றன.
இரவில், சும்மா இருந்தவனைக் கூப்பிட்டு , சகரவர்த்தி பட்டத்தை ஏற்றுக் கொள் என்று சொன்ன தசரதன், மறு நாள் காலையில் மாண்டு போய் விட்டான். சக்ரவர்த்தியாக வேண்டிய இராமன் கானகம் போனான். எங்கோஇருந்த பரதன், சக்ரவர்த்தியாக்கப்பட்டான். அவனும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. இராமனின் பாதுகைகள் முடி சூட்டிக் கொண்டன.
யார் நினைத்திருப்பார்கள் இப்படி எல்லாம் நடக்கும் என்று.
விதி விளையாடிப் விட்டுப் போய் விட்டது.
வரும் வாழ்க்கைக்கு கட்டியம் கூறுகிறான் கம்பன்.
விதியை யாரே மாற்ற வல்லார் ?
( மேலும் படிக்க http://interestingtamilpoems.blogspot.in/2016/04/blog-post_17.html )
Abaaram!!!
ReplyDeleteவிதியின் விளையாட்டை முன்னமே சொல்லி வைத்தது மிகவும் அருமை. Foreshadowing.
ReplyDelete