பழமொழி - தாம் தர வாரா நோய்
பழமொழி என்பது அனுபவத்தின் சாரம். பட்டு , தெளிந்து சொன்னது. பழைய மொழிதானே , இந்த காலத்துக்கு ஒத்து வருமா என்று நினைத்து ஒதுக்கி விடக் கூடாது. ஆராய்ந்து பார்த்து அதில் நல்லது இருந்தால் எடுத்துக் கொள்வதில் ஒன்றும் தவறு இல்லை அல்லவா.
ஏதாவது துன்பம் வந்தால், எனக்கு மட்டும் ஏன் இப்படி துன்பம் வருகிறது, நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன், எனக்கே இந்த மாதிரி துன்பங்கள் ஏன் வருகிறது என்று நொந்து கொள்பவர்கள் பலர்.
ஏதோ தாங்கள் ஏதோ தவறே செய்யாதவர்கள் போல.
"தாஅம் தரவாரா நோய்." என்கிறது பழமொழி.
அப்படினா என்ன ?
நாமே நமக்கு துன்பம் செய்து கொள்வது அல்லாமல் வேறு யாரும் நமக்கு துன்பம் செய்வது இல்லை
என்று அர்த்தம்.
அது சரியா என்று யோசித்துப் பார்ப்போம்.
பெரியவர்கள், படித்தவர்கள், அறிஞர்கள் சொல்வதை கேட்டிருக்க மாட்டோம். எனக்குத் தெரியாதா என்று மனம் போன வழியில் சென்றிருப்போம். அது எங்கெங்கோ இழுத்துக் கொண்டு போய் , இறுதியில் துன்பத்தில் தள்ளி விடும்.
தவறான வழியில் செல்பவர்கள் தங்களுக்கு தாங்களே துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறார்கள்.
"வந்திருப்பவன் சாதாரணமான ஆள் இல்லை. அவன் கேட்கும் மூன்றடி நிலத்தை தானமாக கொடுக்காதே " என்று குருவான சுக்கிராச்சாரியார் கூறினார். "நான் எவ்வளவு பெரிய அரசன். எனக்குத் தெரியாத " என்று குரு வார்த்தையை மீறி மூன்றடி நிலம் தானம் கொடுக்க ஒத்துக் கொண்டான் மாவலி சக்ரவர்த்தி. இருந்த சொத்தெல்லாம் இழந்து, பாதாளத்தில் அழுந்தினான் .
பெரியவர் சொல் கேளாமல், எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கில் சென்றதனால் தேடிக் கொண்ட வினை அது.
பாடல்
ஆஅம் எனக்கெளி தென்றுலகம் ஆண்டவன்
மேஎந் துணையறியான் மிக்குநீர் பெய்திழந்தான்
தோஓ முடைய தொடங்குவார்க் கில்லையே
தாஅம் தரவாரா நோய்.
பொருள்
ஆஅம் = ஆம்
எனக்கெளி தென்றுலகம் = எனக்கு எளிது என்று உலகம்
ஆண்டவன் = ஆண்டவன் (மாவலி)
மேஎந் துணையறியான் = மேவும் துணை அறியான்
மிக்குநீர் = மிகுந்த நீர்
பெய்திழந்தான் = பெய்து இழந்தான்
தோஓ முடைய = குற்றம் உள்ள காரியங்களை
தொடங்குவார்க் கில்லையே = தொடங்குவார்க்கு இல்லையே
தாஅம் = தாமே
தர = தருவதைத் தவிர
வாரா நோய் = (வேறு) நோய் வராது . (நோய் = துன்பம்)
நல்லவர்களை, படித்தவர்களை , அனுபவம் உள்ளவர்களை துணையாகக் கொள்ள வேண்டும்.
அவர்கள் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.
எல்லாம் எனக்குத் தெரியும் என்ற ஆணவ போக்கு துன்பத்தில் முடியும்.
பழைய மொழி தான். சிந்தித்துப் பார்ப்போம். சரி என்றால் எடுத்துக் கொள்வோம்.
"யார் என்ன சொன்னாலும், கடைசியில் நாம் யோசித்து எடுப்பதே முடிவு. அதனால் நாமே நமக்கு நோய் தருகிறோம்" என்றிருக்குமோ?
ReplyDelete