திருப்பாவை - மார்கழி திங்கள் - பாகம் 1
திருப்பாவைக்கு எத்தனையோ உரைகள் இருக்கின்றன. எவ்வளவோ பெரியவர்கள் , எத்தனையோ வகைகளில் உரை எழுதி இருக்கிறார்கள்.
எனக்கு பக்தியும் இல்லை, தமிழ் அறிவும் கிடையாது. நான் என்ன எழுதப் போகிறேன்.
இந்தத் திருப்பாவை பாடல்களை பல விதங்களில் பார்க்கலாம்.
மிக எளிமையான தமிழ் பாசுரங்களாக பார்க்கலாம். ஆயர் பாடி பெண் ஒருத்தி , தன் தோழிகளை அழைத்துக் கொண்டு இறைவனை தரிசனம் பண்ண போகிறாள். அது சம்பந்தமான பாடல்களாகப் பார்க்கலாம். அது ஒரு வகை.
இன்னொரு வகை, மிக ஆழ்ந்த அர்த்தங்களோடு கொண்டதாக பார்க்கலாம். ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு தத்துவார்த்த விளக்கமாக பார்க்கலாம். உதாரணமாக "கோட்டுக் கால் கட்டில் மேல்" என்று வந்தால், கட்டிலுக்கு நாலு கால் என்பது நான்கு வேதங்களை குறிக்கும். வேதங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதை ஆண்டாள் குறிக்கிறாள் என்று அர்த்தம் சொல்லலாம். அது இன்னொரு வகை.
இந்த இரண்டு முறையிலும், நமக்கு என்ன பலன்? இந்த பாடல்கள் நமக்கு என்ன சொல்கின்றன. தத்துவம் என்றால் , வேதாந்தம் படிப்பவர்கள் படித்து இரசித்து விட்டு போகட்டும். எளிமையான தமிழ் பாடல் விளக்கம் என்றால், சரி, வாசித்தோம், என்று மேலே போய் விடலாம்.
இரண்டிலும் நமக்கு ஒன்றும் இல்லை.
இந்த இரண்டும் தான் பொருள் என்றால், இந்த பாடல்கள் காலம் கடந்து நிற்க வேண்டிய காரணம் என்ன. இதில் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது.
உண்மை உறங்கிக் கிடக்கிறது. வெளியே வர முடியாமல் , காலம் காலமாய் நம் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன்.
அப்படியானால், அந்தப் பாடல்கள் நம்மிடம் சொல்ல வரும் சேதி என்ன?
அதில் வரும் பெண்கள், வீடு, நிலம், மாடுகள், பால், ஒலிக் குறிப்புகள் எல்லாமே ஏதோ ஒன்றின் குறியீடு என்று கொண்டால், அது என்ன என்று நாம் நினைத்துப் பார்க்கலாம்.
அந்த கோணத்தில் நான் சிந்தித்தை, பகிர்ந்து கொள்கிறேன். நான் கூறுவது முற்றிலும் தவறாகக் கூட இருக்கலாம். ஒரு புதிய சிந்தனை என்ற முறையில் இதை பார்க்க வேண்டுகிறேன். அவ்வளவுதான்.
ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பம்.
சரி, முதலில் இந்த பாவை நோன்பின் பொருள் என்ன. பெண்கள் , அதி காலையில் எழுந்து , உறங்கும் தங்கள் தோழிகளை எழுப்பி , அவர்களையும் அழைத்துக் கொண்டு , நீராடி, பின் இறைவனை வழிபடுவது பாவை நோன்பு என்று சொல்லப் படுகிறது.
ஆண்டாள் இயற்றிய பாவைப் பாடல்கள் திருப்பாவை என்று அழைக்கப் படுகிறது. மொத்தம் 30 பாசுரங்கள்.
முதல் பாசுரம்.
* மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோ பன்குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாரா யணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.*
எல்லோரும் சலிக்க சலிக்க கேட்ட பாடல். மனப்பாடம் ஆன பாடல். அர்த்தம் தெரிந்த பாடல்.
இந்தப் பாடலில் இதுவரை காணாத பொருள் என்ன இருக்கக் கூடும் ?
முதலில், இதை ஏன் பெண்கள் பாடுவதாக அமைந்திருக்கிறது ? பெண் பிள்ளைகள் பாடுவதாக ஏன் அமைக்க வேண்டும் ?
பொதுவாகவே இறைவனைப் பற்றி பாடும் அடியார்கள் தங்கள் பெண்ணாக பாவித்தே பாடுகிறார்கள். நாயகன் நாயகி பாவம் என்கிறார்கள்.
ஏன் ?
பெண் என்பவள் ஆணின் சக்தியை ஏற்று, அதைக் காத்து, தன்னுள் வளர்த்து, உயிராக்கி, தருபவள்.
நிலம் போன்றவள் பெண். நிலம், தன்னுள் விதையை வாங்கி, உயிரூட்டி, வளர்த்து செடியாக, கொடியாக , மரமாக மாற்றித்தரும்.
விதையை மரமாகும் வித்தை பெண்ணிடம்தான் உள்ளது.
அதற்கு ஒரு மன பக்குவம் வேண்டும். பொறுமை வேண்டும். வலி பொறுக்கும் சகிப்பு தன்மை வேண்டும். காத்திருக்கும் மன உறுதி வேண்டும்.
இறைவன் அருளை பெற்று, அதை தன்னுள் வாங்கி, அதை வளர்த்து, உலகுக்கு பயன்பட வைக்கும் அந்த பக்தி மனமும் பெண்ணுக்கு சமமானதுதான்.
எனவே தான், பக்தி வரும் போது, மனம் தானாக பெண்ணின் மனம் போல இளகி, அன்பும் , கருணையும், நெகிழ்வும் பிறக்கிறது.
நெஞ்ச கன கல்லு நெகிழ்ந்து உருக என்று அருணகிரிநாதர் சொன்னது மாதிரி.
பெண்ணின் மனம் வந்தால்தான், பக்தி வரும்...
ஆணின் மனம் கொஞ்சம் முரட்டு மனம். கரடு முரடானது. கல் போல, இரும்பு போல கடினமானது.
கல்லாய் இருந்த என் மனதை , கனி போல் பிசைந்தாய் என்கிறார் மணிவாசகர்.
கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிக்
கல்லைப் பிசைந்து கனியாக்கித் தன்கருணை
வெள்ளத் தழுத்தி வினைகடிந்த வேதியனைத்
தில்லை நகர்புக்குச் சிற்றம் பலம்மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதுங்காண் அம்மானாய்.
இறையருளை பெற வேண்டுமா ? முதல் படி, மனம் அன்பால், கருணையால் , நெகிழ வேண்டும்.
பெண்மை என்ற குணம் வர வேண்டும்.
இது திருப்பாவை காட்டும், முதல் பாடம்.
இன்னும் பாட்டுக்குள் செல்ல வில்லை.
நாளை பாசுரத்தின் உள் அர்த்தம் பற்றி சிந்திப்போம்.
http://interestingtamilpoems.blogspot.in/2018/02/blog-post_19.html
உடல் நலக்குறைவால் சில பதிவுகள் படிக்காமல் விட்டு போய்விட்டது.
ReplyDeleteபுதிய கண்ணோட்டத்தில் திருப்பாவையை எழுத தொடங்கிய உங்கள் பதிவுகளை ஆவலுடன் எதிர் நோக்கியுள்ளேன்.
பக்தி அதிகரித்தால் பெண்பாவம் தானாகவே வந்துவிடும் போல என்று நீங்கள் எழுதியது சரியே. நம்மாழவாருக்கும் அந்த பாவம் வந்து தன்னை பெண்ணாக பாவித்து எழுதியதாக படித்திருக்கிறேன். ஆனால் திருப்பாவை ஆண்டாளே எழுதியதால் இந்த விஷயத்திற்கு இடமில்லை