Monday, March 12, 2018

திருக்குறள் - நோய் செய்யும் மூன்று

திருக்குறள் - நோய் செய்யும் மூன்று 




மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் 
வளிமுதலா எண்ணிய மூன்று.

நோய் எதனால் வருகிறது?

முதலில் தெய்வ குற்றம் என்று சொன்னார்கள். மாரியாத்தா கோபம் கொண்டால் அம்மை நோய் வரும், அய்யனார் குத்தம், குல தெய்வ குத்தம் என்று கூறிவந்தார்கள்.

பின், நுண்ணுயிரி வாதம் (germ theory ). அதன் படி, நோய் என்பது கிருமிகளால் வருகிறது. பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளே நோய்க்கு காரணம் என்று கண்டு சொன்னார்கள். எந்த நுண்ணுயிரி எந்த நோய் தரும், அதை எப்படி கொல்லலாம் என்று ஆராய்ந்து சொன்னார்கள்.

பின், கிருமிகள் தான் நோய்க்கு காரணம் என்றால், எல்லோருக்கும் அந்த நோய் வர வேண்டும் அல்லவா ?  மழையில் நனைந்தால் சிலருக்கு காய்ச்சல் வருகிறது, சிலருக்கு வருவதில்லை. ஏன் ? அதே கிருமிதானே ?

அது அல்ல, நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், நுண்ணுயிரிகள் செயல் பட்டு, நோயை உண்டாக்குகின்றன என்றார்கள்.

சரி, நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி வளர்த்துக் கொள்வது ?

அது பற்றி சரியான கருத்து இல்லை. நல்ல சாப்பாடு, உடற் பயிற்சி, உறக்கம், தண்ணீர் அருந்துவது என்று சொல்கிறார்கள்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.

பொருள்

மிகினும் = அதிகமானாலும்

குறையினும் = குறைந்தாலும்

நோய்செய்யும் = நோய் உண்டாக்கும்

நூலோர் = படித்தவர்கள்

வளி = காற்று

முதலா = முதலாக

எண்ணிய மூன்று = நினைத்த மூன்று

ஏதாவது புரிகிறதா ?

பரிமேலழகர் உரை இல்லாமல் இது புரியாது.

மிகினும் குறையினும் - எது மிகுந்தால், எது குறைந்தால் ?

உணவும், செயலும் ஒரு சம நிலையில் இருக்க வேண்டும்.

அதிகமாக வேலை செய்து விட்டு, குறைவாக உண்டாலும்,

குறைவாக வேலை செய்து விட்டு, அதிகமாக உண்டாலும்

நோய் வரும்.

நமக்கு பெரும்பாலும் இரண்டாவதுதான் பொருந்தும். கொஞ்சம் வேலை, அதிக உணவு.

சாதாரணமாகவே, சனி ஞாயிற்று கிழமைகளில் வேலை குறைவாக இருக்கும். நீண்ட நேர தூக்கம், எழுந்து உணவை ஒரு பிடி  பிடிப்பது.வேலை குறைந்தால் உணவும் குறைய வேண்டும். நாம் தலைகீழாக செய்கிறோம்.

அது மட்டும் அல்ல, வேலைக்கு தக்க உணவு என்றால், அது அளவை மட்டும் குறிக்குமா ? ஒரு இட்டலியும் , ஒரு தோசையும் ஒரே கணக்கா ?

உணவு சுவை வீரியங்களாலும், அளவாலும் ஒத்து போக வேண்டும் என்கிறார்.

அதிகமான காரம், அதிக உப்பு, அதிக இனிப்பு, போன்றவை இருக்கக் கூடாது.

சரி, அதற்காக உப்பே போடாமல் சாப்பிடலாமா ? காரமே வேண்டாம் என்று ஒதுக்கி விடலாமா ?

இரண்டும் கூடாது. வீரியம் கூடினாலும், குறைந்தாலும் நோய் செய்யும்.

சம நிலை வேண்டும். நாம் செய்யும் வேலைக்கு தகுந்தவாறு, நம் உடல் நிலைக்கு ஏற்றவாறு  உணவில் சுவையின் அளவு மிதமாக இருக்க வேண்டும்.

சரி சுவையின் அளவு மட்டும் சம நிலையில் இருந்தால் போதுமா ?

சரியான அளவில் உப்பு காரம் இருக்கிறது என்று ஒரு அண்டா சாம்பார் விட்டு சாப்பிடலாமா என்றால், அளவும் சம நிலையில் இருக்க வேண்டும்.

அளவு மிகினும், குறையினும் நோய் செய்யும்.

அளவும் மிதமாக இருக்க வேண்டும், சுவையும் மிதமாக இருக்க வேண்டும்.

நாம் வெளியில் , ஓட்டல்களில், திரை அரங்குகளில் சாப்பிடும் போது என்ன நிகழ்கிறது. நாம் நிறைய உண்டால் தான் அவர்களுக்கு வருமானம் பெருகும். எனவே, உணவில் உப்பையும், காரத்தையும் அதிகமாக சேர்ப்பார்கள். அப்படி சேர்க்கும் போது , ஏதாவது குளிர்ச்சியாக குடிக்க வேண்டும் போல இருக்கும். உடனே அது கூடவே குளிர்பானம் தருவார்கள். அதில் இனிப்பு அதிகமாக இருக்கும். நாம் உப்பு, காரம், இனிப்பு என்று அனைத்தையும் அளவுக்கு அதிகமாக நம்மை அறியாமலேயே உட்கொள்கிறோம்.

நோய் வராமல் என்ன செய்யும்?

சரி சுவை, அளவு இரண்டும் அளவோடு இருக்க வேண்டும் என்று சொன்னால், எது அளவு ? எவ்வளவு உப்பு போடுவது, எவ்வளவு காரம் போடுவது ?

வேலைக்குத் தகுந்தவாறு உணவில் சுவையும் அளவும் இருக்க வேண்டும்.

வேலை என்பது மன , மொழி, மெய்யால் செய்வது. சிலருக்கு உடல் (மெய் ) உழைப்பு அதிகம் இருக்கும். சிலருக்கு அதிகம் பேச வேண்டி இருக்கும். எந்நேரம் பார்த்தாலும் மீட்டிங், lecture என்று இருக்கும். சிலருக்கு அதிகம் சிந்தனை செய்யும் வேலையாக இருக்கும். இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு சிந்தனை செய்யும் வேலையாக இருக்கும்.

வேலையின் தன்மையை பொறுத்து உணவின் அளவும் , சுவையும் இருக்க வேண்டும்.

ஓடி ஆடி வேலை செய்பவன் கொஞ்சம் அதிகமாக இனிப்பு சேர்த்தாலும் அவன் உடம்பு அதை ஜீரணம் செய்து விடும். எரித்து விடும். உடகார்ந்த இடத்திலேயே இருப்பவனுக்கு இனிப்பு அதிகம் கூடாது.

ஒரு உதாரணம் சொன்னேன். மேலும் நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்.

வளி முதலான = நமது உடம்பிலே மூன்று சக்திகள் இயங்குகின்றன. நீர், நெருப்பு, காற்று.

குளிர்ச்சி, சூடு இது இரண்டுக்கும் இடைப்பட்ட காற்று. வாதம், பித்தம், சிலேத்துமம் என்பார்கள்.

ஒவ்வொரு உணவும் ஒன்றைத் தரும், சில உணவு உடலின் சூட்டை அதிகரிக்கும், சில உணவு வகைகள் உடலில் நீர் சத்தை அதிகரிக்கும். சில காற்றின் அளவை அதிகரிக்கும்.

சில உணவை சாப்பிட்டால் வாயு பிரிந்து கொண்டே இருக்கும். .

சில உணவு வகைகளை சாப்பிட்டால் நெஞ்சில் எரிச்சல் வரும். எரியும்.

சில உணவு வகைகளை உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வரும். சில உணவு வகைகள் நீரை சுருக்கும். சில, நீரை பெருக்கும் . உதாரணமாக காபி, டீ போன்றவை நீரை சுருக்கும்.

நமது உடல் நிலை எதை உண்டால் எப்படி மாறுகிறது என்று நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். Sensitivity  என்று சொல்வார்களே அதை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணிய மூன்று = அவர்கள் எண்ணிப் பார்த்து சொன்ன  மூன்று.

இன்னொரு மூன்றும் இருக்கிறது.

சத்வம், தமோ, ரஜோ குணம் என்று.

சத்வம் அல்லது சாத்வீக மன நிலை. அமைதியான மனம். உயர்ந்த சிந்தனை. அன்பு, அருள் போன்ற மனம்.

ரஜோ குணம் - வேலைக்கு முனைப்பு காட்டும் குணம், ஏதாவது செய்ய வேண்டும் என்று உந்தும் மனம்.

தமோ குணம் அல்லது தமஸ் என்று சொல்வது சோம்பேறித்தனம், செயலின்மை, தரும் குணம்.

ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு மன நிலையை தரும்.

மது அருந்தினால் வேகம் பிறக்கும். ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றும்.  காப்பி, டீ போன்ற வஸ்த்துக்களும் அப்படித்தான்.

புளி, எண்ணெய்  போன்ற உணவு வகைகள் சோம்பேறித்தனத்தை தரும். நல்ல நிறைய நெய் விட்டு செய்த பொங்கல் சாப்பிட்டால் தூக்கம் கட்டாயம் வரும்.

பால், மோர், காய் கறிகள், பழ வகைகள் சாத்வீக குணத்தைத் தரும்.

மாமிச உணவு, அதிக காரம், மசாலா, உப்பு இவை ரஜோ குணத்தை தூண்டும்.

உணவு உண்ட சிறிது நேரம் கழித்து உங்கள் மன நிலை எப்படி மாறுகிறது என்று பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதை நீங்கள் உணர முடியும்..உங்கள் நுண்ணர்வை கூர்மை படுத்தி வைத்துக் கொண்டால்.


மூன்று குணங்களும் வேண்டும். ஓய்வும் வேண்டும். இரவு படுக்கப் போகும் போது ரஜோ குணம் தரும் உணவை உட்கொண்டால் தூக்கம் வராது. புரண்டு புரண்டு படுக்கத் தோன்றும்.

இவை மூன்றில் எது கூடினாலும், குறைந்தாலும் நோய் செய்யும்.

நோய் வருவது தெய்வ குற்றத்தால் அல்ல, நுண்ணுயிர் கிருமிகளால் அல்ல. நோய் எதிர்ப்பு சக்தியால் அல்ல. உணவினால்.

உணவு சரி இல்லை என்றால் நோய் வரும்.


உணவை கண்டால் , நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு போகக் கூடாது. 

உணவை உண்பதற்கு முன் சிந்திக்க வேண்டும். 

என்ன வேலை செய்தோம், என்ன வேலை செய்யப் போகிறோம், என காலம் இது, எது நமக்கு சரியானது, எவ்வளவு சாப்பிடலாம் என்று திட்டமிட்டு உண்ண வேண்டும். 

பெரிய ஓட்டல்களில்  வரிசை வரிசையாக வைத்திருப்பார்கள். பார்த்தவுடன் எல்லாமே  நன்றாக இருக்கும். எல்லாவற்றையும் ஒரு கை பார்க்கக் கூடாது. 

அளவோடு, ஆய்ந்து அறிந்து உண்ண வேண்டும். 

உணவு சக்தியை மட்டும் அல்ல, நோயையும் தரும். 

ஒண்ணே முக்கால் அடியில் இதுக்கு மேல எப்படி சொல்வது?

என்ன சரிதானே ?

3 comments:

  1. இதை விட என்ன விளக்கம் தேவை? விவரமாக நறுக்கென்று எழுதி இருக்கிறீர்கள். ஜாண் வயிறும் சிறிய நாக்கும் திருப்தி அடையாத மனமும் தான் மற்றொரு மூன்றோ?

    ReplyDelete
  2. 1 காற்று
    2 வெப்பம்
    3 நீர்
    இவை மூன்றும் அளவு மற்றும் தரம் கூடினாலோ அல்லது குறைந்தாலோ உடலில் நோய் உண்டாகும். இதனை வாதம், பித்தம், கபம் என்றும் சித்த மருத்துவத்தில் செல்வார்கள்

    ReplyDelete
  3. ஒவ்வொரு நபரின் தேகம் வாதஉடம்பா, பித்தம்,கபணம் உடம்பா என்று அறிந்து அதன்படி உணவு உண்ணவேண்ணடும் என்று எடுத்துக்கொள்வது சரியா?

    ReplyDelete