Wednesday, September 19, 2018

திருக்குறள் - மரணம் பற்றிய பெருமை

திருக்குறள் - மரணம் பற்றிய பெருமை 


மரண பயம் இல்லாதவர் யார்? எவ்வளவு படித்தாலும், எவ்வளவு சிந்தித்தாலும் மரணம் என்னவோ பயமுறுத்தத்தான் செய்கிறது. அதன் வலியும் வேதனையும் போவது இல்லை.

ஏன் இந்த பயம் ?

மரணம் பயம் தானே ? மரணம் இல்லாமல் வாழத்தானே எல்லோரும் விரும்புகிறார்கள்? சரி, ஒரு ஆயிரம் ஆண்டு வாழுகிறாயா என்று யாரிடமாவது கேட்டால் என்ன சொல்லுவார்கள்? ஐயோ சாமி அவ்வளவு எல்லாம் வேண்டாம் என்று சொல்லுவார்கள். சரி ஒரு ஐநூறு ஆண்டு ? அதுவும் வேண்டாம், சரி ஒரு இருநூறு ஆண்டு ?

நீண்ட ஆயுளும் பயமாக இருக்கிறது அல்லவா ?

ஒரு அளவுக்கு மேல் முதுமை ஒரு சுமை. காது கேட்காது, கண் தெரியாது, முட்டி வலிக்கும், நடக்க முடியாது, நினைவு தவறும், நினைத்ததை சாப்பிட முடியாது...அது ஒரு வாழ்க்கையா ? அதற்கு மரணம் எவ்வளவோ மேல் அல்லவா ?

மரணம் பற்றிய இன்னொரு கோணம் இருக்கிறது. அதை வள்ளுவர் சொல்கிறார்.

வள்ளுவர் சொல்கிறார்...

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு



பொருள்


நெருநல் = நேற்று

உளனொருவன் = இருந்த ஒருவன்

இன்றில்லை = இன்று இல்லை

என்னும் = என்ற

பெருமை = பெருமை

உடைத்து = உடையது

இவ் வுலகு = இந்த உலகம்

நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம்.

சரி, இது என்ன பெரிய குறள். இது தான் எல்லோருக்கும் தெரியுமே. இதில் என்ன பெரிய கோணம் இருக்கிறது ?

வள்ளுவர் சொல்கிறார் என்றால் அதில் என்னவோ இருக்கும்.

"பெருமை உடைத்து" ....நேற்று இருந்தவன் இன்று இல்லை என்பதில் இந்த உலகுக்கு என்ன பெரிய பெருமை ? அது சோகம் தானே.  நேத்து இருந்தாரு இன்னைக்கு பாவம் செத்து போய்ட்டாருனு சொன்னா அது பெருமையா ? ஏன்  அந்த சொல்லை போடுகிறார் வள்ளுவர் ? காரணம் இல்லாமல் போடுவாரா ?

மனிதன் மாறும் தன்மை கொண்டவன். ஒருவன் எப்போதுமே நல்லவனாக இருப்பது இல்லை. அதே போல் ஒருவன் எப்போதுமே தீயவனாக இருப்பது இல்லை.

எவ்வளவு மோசமானவனும் ஒரு நாள் திருந்தி நல்லவனாக மாறலாம்.

அதே போல் உலகம் போற்றும் உத்தமனும் ஒரு நாள் ஏதாவது தவறு செய்யலாம்.

எனவே யாரையும் இவன் நல்லவன், கெட்டவன் என்று முத்திரை குத்தாதீர்கள். நேற்று வரை அவன் அப்படி இருந்தான். இன்று அப்படி அல்ல. மாறி இருப்பான்.

அப்படி மாறலாம் என்பது தான் இந்த உலகின் பெருமை.

எல்லோருக்கும் மாறும் வாய்ப்பு இருக்கிறது.

நேற்று வரை நீங்கள் யாரோ.

சரியாக படிக்காமல் இருந்திருக்கலாம், கடினமாக உழைக்காமல் இருந்து இருக்கலாம், குடும்பத்தை சரியாக காப்பாற்றாமல் இருந்து இருக்கலாம், மற்றவர்கள் மேல் அன்பு  செலுத்தாமல் இருந்து இருக்கலாம், குடி, புகை, என்று தவறான வழியில் சென்று இருக்கலாம்...

இன்று நீங்கள் மாறலாம்...இன்றில் இருந்து புதிய மனிதராக மாறலாம்.

நேற்று இருந்தவன் இறந்தே போய் விட்டான். இன்று புதிய மனிதராய் நீங்கள் ஆகி விடலாம்.

மாற்றம் என்றால், என்னவோ இன்று புகை பிடிக்க மாட்டேன், என்று உடற் பயிற்சி செய்வேன், என்று செய்து விட்டு, நாலு நாளில் பழையபடி மீண்டும் புகை பிடிக்க ஆரம்பித்தால் அது மாற்றம் இல்லை.

பழைய ஆள் "இன்று இல்லை"  என்று மாற வேண்டும். அந்த பழக்கம் உள்ள ஆள் நேற்று வரை இருந்தான், இன்று அவன் இல்லை. இல்லை என்றால் என்ன அர்த்தம். காணாமல் போய் விடவில்லை. காணாமல் போய் விட்டால், திருப்பி வந்து விடலாம். இறந்து போய் விட்டால் திருப்பி வரவே முடியாது அல்லவா ?

அப்படி சொல்கிறார் வள்ளுவர். நேற்று இருந்தவன் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம்.

இப்படி கெட்டவன் , நல்லவனாக மாறுவது மட்டும் அல்ல, நல்லவனும் கெட்டவனாக மாறலாம். பெரிய சாமியார், ஊரே அவரை வணங்குகிறது...ஒரு நாள் அவரின் தவறான செய்கை பற்றி ஒரு தகவல் வருகிறது...ஆதாரங்களுடன். அவரா அப்படி செய்தார் என்று நாம் திகைக்கிறோம்.  நேற்று இருந்த சாமியார் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம்.

மரணம் என்பது என்ன, மாற்றம் தானே.

மாற்றம் என்பது நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

அது இயற்கை. அது தான் அதன் பெருமை. மாற்றமே இல்லாத ஒன்று எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். சகிக்க முடியாது.

இதுவரை நீங்கள் எப்படியோ. இன்றில் இருந்து ஒரு புதிய மனிதராய் நீங்கள்  மாறலாம்.

இப்படி நாளும் உங்களை புதுப்பித்துக் கொண்டே இருந்தால், மரணம் ஒரு பெரிய பயமாய்  இருக்காது. இறந்த காலம் அப்படியே இருக்க வேண்டும் , ஒரு மாற்றமும் நிகழக் கூடாது என்று நீங்கள் ஆழமாக விரும்பினால், மரணம் பெரிய பயமாகத்தான் இருக்கும். நாளும் பழையவற்றில் இருந்து நீங்கள் இறந்து புதியதாய் பிறந்தால்,  இந்த உடல் இறப்பது பெரிய விஷயமாய் தெரியாது.

மாறுங்கள். மாற்றங்களை அனுமதியுங்கள். பழையவற்றை விடுங்கள். குப்பையில் பெருமை இல்லை. இன்று புதியதாய் பிறந்தோம் என்று பிறப்பெடுங்கள்.

வாழ்க்கை இனிக்கும்.

http://interestingtamilpoems.blogspot.com/2018/09/blog-post_19.html







2 comments:

  1. சில விருந்தாளிகள் வந்தால் ஓரிரு நாட்களிலேயே திரும்பி சென்று விடுவார்கள்.அது அவர்கள் பெருமை அல்லது குணம் எனக்கொள்ளலாம். அவர்கள் வந்த இடத்தில் சாஸ்வதமாக தங்கி விட்டால் அது அவர்களுக்கு பெருமை சேர்ப்பது இல்லை.அதே மாதிரி பிறப்பும் இறப்பும் மனித இயல்பு.அந்த attribute ஐ தான் வள்ளுவரும் பெருமை என கூறி இருக்கலாம்.
    உங்கள் கண்ணோட்டம் ஒரு புதிய பார்வை.படிக்க ரசிக்கும் படியாக இருந்தது.
    வள்ளுவரும் இந்த கோணத்திலேயே எழுதி இருக்கலாம் எனத் தோண வைத்துவிட்டது. தினமும் புதிய மனிதனாக பிறவி எடுக்க தூண்டி விட்டது.

    ReplyDelete
  2. "பழையன கழிதலும், புதியன புகுதலும்" வேண்டும் என்றால், இறப்பு அவசியம்தானே? அதைத்தான் வள்ளுவர் சொல்கிறாரோ?

    ReplyDelete