கம்ப இராமாயணம் - அவன் கிட்ட பேச மாட்டீங்களா ?
கணவன் மனைவிக்கு இடையே ஏதோ காரணத்தால் பிரிவு. ஒருவருக்கு ஒருவர் பேசுவதில்லை. யார் பேசுவது என்று ஒரு வீராப்பு இரண்டு பக்கமும்.
மனைவி, கணவனின் நெருங்கிய நண்பரை கூப்பிட்டுச் சொல்கிறாள் "நீங்க அவர் நெருங்கிய நண்பர் தானே...நீங்களாவது அவர்கிட்ட எடுத்துச் சொல்லக் கூடாதா?" என்று அந்த நண்பரிடம் வேண்டுகிறாள்.
இது இயல்பாக நடக்கக் கூடியது தான்.
அசோகவனத்தில் சிறை இருக்கும் சீதை சொல்கிறாள்
"ஏய் நிலவே, இருளே, நீங்கள் எல்லாம் என் மேல் நெருப்பை அள்ளி வீசி அலைந்து கொண்டு இருக்கிறீர்கள். என் உயிரைப் பற்றி உங்களுக்கு கொஞ்சமும் கவலை இல்லை. நீங்கள் இராமனுடன் பழகுகிறீர்கள் தானே. என் நிலைமை பற்றி அவனிடம் பேச மாட்டீர்களா? "
என்று.
பாடல்
தழல் வீசி உலாவரு வாடை தழீஇ
அழல்வீர்; எனது ஆவி அறிந்திலிரோ?
நிழல் வீரை அனானுடனே நெடுநாள்
உழல்வீர்; கொடியீர்! உரையாடிலிரோ?
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/08/blog-post_15.html
(pl click the above link to continue reading)
தழல் வீசி = நெருப்பை வீசி
உலாவரு = உலவுகின்ற நீங்கள்
வாடை தழீஇ = வாடைக் காற்றை தழுவி
அழல்வீர் = என்னைச் சுடுகின்றீர்கள்
எனது ஆவி அறிந்திலிரோ? = என் உயிரைப் பற்றி அறிய மாட்டீர்களா?
நிழல் வீரை அனானுடனே = ஒளி வீசும் அவனுடன் (இராமனுடன்)
நெடுநாள் = நீண்ட நாள்
உழல்வீர்; = ஒன்றாகத் தானே இருக்கிறீர்கள்
கொடியீர்! = கொடுமையானவர்களே
உரையாடிலிரோ? = அவனுடன் என் நிலைமை பற்றிபேசுவது இல்லையோ ?
வாடைக் காற்றை வீசி நெருப்புப் போல என்ன சுடுகிறீர்கள் என்கிறாள். பாவம். குளிரின் கொடுமையும், பிரிவின் தனிமையும் அனுபவித்தால் தான் தெரியும்.
ஒரே ஒரு முறை குளிர் என்றால் என்ன என்று அறிந்து இருக்கிறேன்.
வட இந்தியாவில் வேலை பார்க்கும் போது, ஒரு தரம் பணி நிமித்தமாக மற்றோர் இடத்துக்கு செல்ல நேர்ந்தது. பணி முடித்து திரும்பி வரும் போது இரயில் தாமதமாக வந்து சேர்ந்தது. நள்ளிரவு இருக்கும்.
இரயில் நிலையத்தில் இருந்து நான் பணி செய்யும் இடம் கிட்டத்தட்ட ஒரு நாற்பது கிமீ இருக்கும்.
பேருந்து எதுவும் கிடையாது அந்த நள்ளிரவில். சரி என்று ஒரு லாரியைப் பிடித்து இருப்பிடம் சென்று கொண்டிருந்தேன்.
முக்கால்வாசி தூரம் வந்த பின், அந்த லாரி ஓட்டுனர், "இதற்கு மேல் நாங்கள் வேறு வழியில் போய் விடுவோம் ...நீங்கள் இங்கே இறங்கிக் கொள்ளுங்கள். வேறு லாரி பிடித்துப் போங்கள்" என்று ஒரு அத்துவான காட்டில் இறக்கி விட்டுவிட்டுப் போய் விட்டார்.
குளிர்காலம். - 4 degree C. குளிருக்கு ஏற்ற ஆடை ஒன்றும் இல்லை. வெடவெட என நடுங்குக்கிறது உடம்பு. விரல் எல்லாம் விரைக்கிறது. பெட்டியைத் திறந்து இருக்கிற சட்டை pant எல்லாம் ஒண்ணுக்கு மேல் ஒண்ணு போட்டுக் கொண்டேன். கொஞ்ச நேரம் தாங்கியது. பின் மீண்டும் குளிர். வழியில் செல்லும் லாரியை நிறுத்த கை காட்டினால், நிறுத்தாமல் போய் விடுகிறார்கள். போவது மட்டும் அல்ல, அந்த போகும் வேகத்தில் அடிக்கும் குளிர் காற்று இருக்கிறதே....
அப்போது யாராவது ஒரு குவளை சூடான தேனீர் தந்தால் என் இராஜ்யத்தில் பாதியையும், என் மந்திரியின் மகளையும் அவருக்கு தந்து இருப்பேன்.
அப்படி ஒரு குளிர். எலும்பு வரை எட்டிப் பாய்ந்த குளிர்.
இதைப் படிக்கும் போது, அன்றைய குளிரின் ஞாபகம் வந்தது.
என்றோ கம்பன் எழுதியது, என்றோ எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவம்,
இரண்டும், ஒரு புள்ளியில் சந்திப்பது தான் இலக்கியத்தின் அதிசயம்.
அருமையான பகிர்வு அண்ணா
ReplyDeleteவெப்பம், குளிர், பனி, வறட்சி எல்லாமே மிக அதிகமானால் தாங்குவது கடினமே
ReplyDelete