Wednesday, December 8, 2021

திருக்குறள் - நல்விருந்து ஓம்புவான் இல்

திருக்குறள் -  நல்விருந்து ஓம்புவான் இல்


விருந்தினர்களை உபசாரம் செய்தால், அதனால் வறுமை வராது, வாழ்க்கை பாழ் படாது என்று முந்தைய குறளில் பார்த்தோம். 


அது எப்படி என்ற கேள்வி வரும் அல்லவா?


அது ஒரு பக்கம் இருக்கட்டும். 


நம்மிடம் உதவி கேட்டு நமக்குத் தெரிந்தவர் ஒருவர் வருகிறார். அவர் கூடவே தன் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு வருகிறார். "என் பையனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்து இருக்கிறது. ஒரு வாரத்துக்குள் பணம் கட்ட வேண்டும். கையில் காசு இல்லை. நீங்கள் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ?" என்று நம்மிடம் கேட்கிறார். நாமும் அவருக்கு உதவி செய்கிறோம். ஆறு மாதம் கழித்து, அதே பையனை அழைத்துக் கொண்டு வருகிறார். "சார், நீங்க செஞ்ச உதவியால என் பையனுக்கு கல்லூரியில் இடம் கிடைத்தது. முதல் ஆறு மாதத்தில் ஐந்து பேப்பரில் அவன் வகுப்பில் முதலாதவாக வந்து இருக்கிறான். அதான் உங்களைப் பார்த்து நன்றி சொல்லிவிட்டு, இனிப்பும் கொடுத்து விட்டு போகலாம் என்று வந்தேன்" என்கிறார். அந்தப் பையனும் பெட்டியை திறந்து நமக்கு இனிப்பை வழங்குகிறான், நமக்கு சந்தோஷம். அவர் மேலும் உதவி கேட்டாலும் செய்ய தயாராக இருப்போம். 


அதே மாதிரி இன்னொரு நண்பர். ஆறு மாதம் கழித்து வருகிறார். "என்ன சார் செய்றது. பையன் படிக்க மாட்டேன் என்கிறான். எப்ப பாரு வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறான். புகை பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களும் படித்து விட்டான்" என்று வருத்தப் படுகிறார். அவர் மேலும் உதவி கேட்டால் நாம் செய்வோமா? செய்ய மாட்டோம் அல்லவா? 


அதாவது நாம் கொடுத்த பணத்தை நல்ல வழியில் செலவழித்து ஒருவன் முன்னேறுகிறான் என்றால் நாம் மேலும் மேலும் உதவி செய்யத் தயாராக இருப்போம். 


மாறாக, நம்மிடம் பெற்ற உதிவியை ஒருவன் தவறான வழியில் செலவழித்தால் நாம் மேலும் உதவி செய்ய மாட்டோம் அல்லவா?


வள்ளுவர் கூறுகிறார், "நீ செல்வதை நல்ல வழியில் விருந்தினர்களை உபசரித்தால், திருமகள் உன் மீது அன்பு கொண்டு, நாம் அவனுக்கு கொடுத்த செல்வதை நல்ல வழியில் செலவழிக்கிறான். அவனுக்கு மேலும் கொடுப்போம் என்று நினைப்பாள். மாறாக, நாம் கொடுத்த செல்வதை எல்லாம் இவன் யாருக்கும் கொடுக்காமல் பெட்டியில் வைத்து பூட்டி வைத்து இருக்கிறான். இவனுக்கு செல்வம் தந்தால் அது அவனுக்கும் பயன் இல்லை. வேறு யாருக்கும் பயன் இல்லை. எதுக்கு இவனுக்கு தர வேண்டும் என்று தராமல் இருந்து விடுவாள்" என்கிறார். 


பாடல் 



அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/12/blog-post_8.html


(please click the above link to continue reading)


அகனமர்ந்து =அகத்தில் அமர்ந்து; வீட்டில் இருந்து 


செய்யாள் = திருமகள் 


உறையும் = நிரந்தரமாக வசிப்பாள் 


முகனமர்ந்து =  முகம் மலர்ந்து 


நல்விருந்து  = நல்ல விருந்தினை 


ஓம்புவான் இல். = போற்றுபவன் இல்லத்தில் 


ஒருவன் நல்ல விருந்தை போற்றுவான் என்றால், அவன் வீட்டில் இலக்குமி நிரந்தரமாக வாசம் செய்வாள். அவனுக்கு ஒரு குறையும் வராது


சரி வள்ளுவரே சொல்லிவிட்டார் என்று, தினமும் நண்பர்களை அழைத்து வந்து, தண்ணி, குடி, புகை பிடித்தல் என்று கும்மாளம் போட்டால் திருமகள் இருப்பாளா ? அவர்களும் விருந்தினர்கள் தானே?


வள்ளுவர் கூறுகிறார் "நல் விருந்து". 


நல்ல விருந்தை. அது என்ன நல்ல விருந்து?


ஞான மற்றும் ஒழுக்கங்களில் உயர்ந்து நிற்றல் என்று உரை கூறுகிறார் பரிமேலழகர். 


அறிவும், ஒழுக்கமும் உள்ளவர்களை விருந்தினர்களாகப்  பெற்றவன் எப்படி இருப்பான்?


அவர்கள் அறிவில் உயர்ந்தவர்கள். அவனுக்கு நல்லவற்றை எடுத்துச் சொல்லுவார்கள், பணத்தை இதில் முதலீடு செய், இதில் முதலீடு செய்யாதே, இதை உண், இது உடம்புக்கு நல்லது, அது நல்லது இல்லை என்று அவனுக்கு வேண்டிய அனைத்து நல்லவைகளும் இலவசமாக கிடைக்கும் அல்லவா? ஒரு பிரச்னை என்றால் அவர்களிடம் யோசனை கேட்கலாம். சிறந்த யோசனை தருவார்கள். அது அவன் மேலும் சிறக்க உதவும். 


எனவே ஞான, ஒழுக்கங்களில் உயர்ந்தவர்களை விருந்தாகப் பெற்று அவர்களை போற்றுபவன் இல்லத்தில் திருமகள் எப்போதும் இருப்பாள் என்றார்.


விருந்தோம்பல் மூலம் வாழ்வு சிறக்க எப்படி ஒரு எளிய வழியை சொல்லித் தருகிறார் வள்ளுவர். 


பூஜை செய்யும் போது அவருக்கு ஒரு பூ போட்டு வணங்க வேண்டாமா?




1 comment:

  1. கீழ் கண்ட வரிகளில் வள்ளுவரின் கருத்தை அழகாக உரைத்தீர்கள்.
    “ எனவே ஞான, ஒழுக்கங்களில் உயர்ந்தவர்களை விருந்தாகப் பெற்று அவர்களை போற்றுபவன் இல்லத்தில் திருமகள் எப்போதும் இருப்பாள் என்றார்.“

    ReplyDelete