திருவாசகம் - திரு அம்மானை - வாரா வழியருளி
(இதன் முந்தைய பதிவுகளை கீழே உள்ள வலை தளங்களில் காணலாம்
முன்னுரை:
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_8.html
அறைகூவி, வீடு அருளும்
)
வீட்டில் அப்பா(வோ அல்லது அம்மாவோ) ஒரு பெரிய நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கலாம். அல்லது அரசியலில் ஒரு பெரிய தலைவராக இருக்காலம். அவரைப் பார்க்க பலர் , பல நாள் காத்துக் கிடப்பார்கள். ஒரு இரண்டு நிமிடம் கிடைத்தால் போதும் என்று தவம் கிடப்பார்கள்.
ஆனால், வீட்டில் மனைவிக்கு, பிள்ளைகளுக்கு அவர் சாதாரண கணவன் அல்லது தந்தைதான். நான் நாட்டுக்கு முதல் மந்திரி என்று பிள்ளையிடம் இருக்க முடியுமா? அலுவலகத்தில் இருந்து வரும் போதே "பிள்ளை எங்கே" என்று தேடிக் கொண்டு வருவார்.
"உங்களுக்காக இவ்வளவு நேரம் காத்திருந்துவிட்டு இப்பத்தான் தூங்கப் போனான்" என்று மனைவி சொல்லுவாள்.
சரி, இரு போய் பார்த்துட்டு வந்துர்றேன் என்று தூங்கும் பிள்ளையை பார்க்க இவர் ஓடுவார்.
ஊரெல்லாம் இவரைக் காண தவம் கிடக்கிறது. இவர் பிள்ளையை காண ஓடுகிறார்.
இதை காதலன், காதலி மேல் வைத்துப் பாருங்கள். காதலன் பெரிய வேலையில் இருக்கிறான். வருகிறேன் என்று நேரத்துக்கு வரவில்லை. காதலி கோபித்துக் கொள்கிறாள். எவ்வளவு இறங்கி வருவான். எத்தனை முறை 'சாரி' சொல்லுவான். அது அன்புப் பரிமாற்றம்.
மணிவாசகர் சொல்கிறார்
"விண்ணுலகம், பாதாள உலகம் போன்ற உலகில் உள்ளவர்கள் எல்லாம் சிவனே உன்னைக் காண முடியாமல் தவிக்கிறார்கள். ஆனால், நீ எங்களுக்கு எளிமையானாவன். எங்களுக்கு உன் மேல் ஒரு பைத்தியம் பிடிக்க வைத்து விட்டாய். அது மட்டும் அல்ல, நாங்கள் இந்த உலகில் மீண்டும் வாராத வழியை அருளினாய். எங்கள் உள்ளத்தில் புகுந்து விட்டாய். கடலில் மீன் பிடிப்பவனைப் போல எம் போன்ற பக்தர்களை நீ வலை வீசிப் பிடிக்கிறாய்" என்கிறார்.
பாடல்
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2022/08/blog-post_15.html
(pl click the above link to continue reading)
பாரார் = பாரில், இந்த உலகில், உள்ளவர்கள்
விசும்புள்ளார் = விசும்பு என்றால் வானம். வானுலகில் உள்ளவர்கள்
பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்
புறத்தார் = இதற்குப் புறத்தும் உள்ள உலகில் உள்ளவர்கள்
ஆராலுங் = யாராலும்
காண்டற் கரியான் = காண்பதற்கு அரியவன்
எமக்கெளிய = எமக்கு எளிய
பேராளன் = பெரிய அன்பு உள்ளவன்
தென்னன் = தென்னாடுடையவன்
பெருந்துறையான் = திருப் பெருந்துறையில் உள்ளவன்
பிச்சேற்றி = நமக்கு அவன் மேல் பித்தை ஏற்றி
வாரா = திரும்பி இந்த உலகத்திருக்கு வந்து பிறக்காமல் இருக்கும் (திரும்பி வரமால்)
வழியருளி = வழியை தந்து அருளி
வந்தென் = அவனே வந்து
உளம்புகுந்த = என் உள்ளம் புகுந்து
ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்
அலைகடல்வாய் = அலை கடலில்
மீன்விசிறும் = மீன் பிடிக்கும் மீனவன் போல
பேராசை வாரியனைப் = பேராசைக் காரனை (பக்தர்களை வல போட்டு பிடிக்கும்)
பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை பாடி ஆடுவோம்
.பிச்சு என்றால் பைத்தியம். பித்து. "உன்ன இரண்டு நாளா பாக்காம பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்குடி" என்று காதல்/காதலி சொல்லுவது போல.
இறைவன் மேல் அவ்வளவு காதல். அவரை பார்க்காமல் பைத்தியமே பிடிச்சுரும் போல இருக்காம்.
"வாரா வழி அருளி"....திரும்பி வர முடியாத வழியைச் சொல்வாராம். அந்த வழியில் போனால், மீண்டும் இந்த பிறவி என்ற ஊருக்கு வர முடியாது. ஒரு வழிப் பாதை. நேரே வீடு பேறுதான்.
மணிவாசகரைத் தவிர யார் இதை இவ்வளவு அழகாகச் சொல்ல முடியும்!
முன்பு கூறியது போல, திருவாசகம் என்பது உணர வேண்டிய ஒன்று. அறிய வேண்டிய ஒன்று அல்ல.
ஒன்றுக்கு பல முறை வாசித்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment