திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது
ஒரு நாட்டில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டு புகழ் உடையவர்களாக இருந்தால் அந்த நாடு எப்படி இருக்கும்?
மாறாக
ஏதோ சொன்ன வேலையை செய்வோம், வர்றது வரட்டும் என்று எல்லோரும் ஏனோ தானோ என்று வேளை செய்தால் எப்படி இருக்கும்?
வள்ளுவர் சொல்கிறார், புகழ் இல்லாதவர்கள் வாழும் நாட்டில், நிலத்தில் நல்ல விளைச்சல் இருக்காது என்று.
பாடல்
வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_6.html
(pl click the above link to continue reading)
வசைஇலா = குற்றம் இல்லாத
வண் = செழிப்பான, வளமையான
பயன் = விளைச்சல்
குன்றும் = குறையும், எப்போது என்றால்
இசையிலா = புகழ் இல்லாத
யாக்கை = உடம்பை
பொறுத்த நிலம் = பொறுத்து தாங்கி கொண்டிருக்கும் நிலம்
அது எப்படி, புகழ் இல்லாதவர்களை சுமந்த நிலம் குறைந்த விளைச்சல் தரும் ? புகழுக்கும், விளைச்சலுக்கும் என்ன சம்பந்தம் வள்ளுவர் சார் ?
"பயன்" என்ற சொல்லுக்கு விளைச்சல், உற்பத்தி, என்று கொள்ளலாம். புகழ் விரும்பி இருப்பவர்கள், புகழ் பெறவும், பெற்ற புகழை தக்க வைத்துக் கொள்ளவும் சிறப்பாக செயல்படுவார்கள். அப்படி அவர்கள் செயல்படும் போது, அந்த செயல்களின் விளைவு உற்பத்தியை மேலும் பெருக்கும் என்பது கருத்து.
"இசை இல்லா யாக்கை" என்றார். புகழ் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால் அவனை உயிர் உள்ள மனிதனாகக் கூட வள்ளுவர் மதிக்கவில்லை. அது ஒரு உடம்பு என்கிறார். யாக்கை என்றால் உடம்பு. எலும்பு, நரம்பு, இரத்தம் என்றவற்றால் கட்டப்பட்டதால், இதற்கு யாக்கை என்று பெயர். யாக்குதல், கட்டுதல்.
நிலம் ஏன் குறைவாக விளையும் என்றால், புகழ் இல்லாத மனிதர்கள், பெரிய முயற்சி எடுக்க மாட்டார்கள். அதனால் பொருள் விரயம், சுற்றுப் புற சூழ்நிலை மாசு படுதல் போன்ற பல தவறுகள் நிகழலாம்.
ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நெல் விளையும் என்றால், அதையே சிறப்பாகச் செய்தால் அதிக மகசூல் பெறலாம், குறைவான நீரை பயன்படுத்தாலாம், பூச்சிக் கொல்லி, இரசாயன உரம் போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்து உயர்தர விளைச்சலை, குறைந்த செலவில் பெற்றுத் தரலாம். அதற்கெல்லாம் முயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும்.
அப்படி இல்லாதவர்கள் ஊரில், விளைச்சல், பயன் குறைவாகக் கிட்டும் என்கிறார்.
சிந்திக்க வேண்டிய விடயம்.
எதையும் சிறப்பாக செய்ய வேண்டும், அனைவரும் பாராட்டும்படி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment