திருக்குறள் - ஏன் தவம் செய்ய வேண்டும்
தவம் செய்வதால் என்ன பலன்?
முந்தைய குறளில் வேண்டியவர்களுக்கு நல்லதும், வேண்டாதவர்களுக்கு தீமையும் தவத்தால் முடியும் என்று பார்த்தோம்.
இது எல்லாம் பெரிய விடயமா? இதற்காக தவம் செய்ய வேண்டுமா என்ற கேள்வி எழலாம்.
மற்றவர்களுக்கு நல்லது செய்வது அல்லது அல்லது செய்வது என்பது ஒரு புறம் இருக்கட்டும். நமக்கு தவத்தால் ஒரு பலன் உண்டா?
உண்டு.
எல்லோரும் விரும்புவது ஒன்று உண்டு.
மறுபடி பிறக்கக் கூடாது. அப்படியே பிறந்தாலும், நல்லபடியாக இருக்க வேண்டும்.
அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
சரி, அடுத்து வரும் பிறவியில் அல்லது முக்தி அடைய என்ன செய்ய வேண்டும் என்றால், தவம் செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவர்.
பாடல்
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
பொருள்
வேண்டிய = தேவையானவற்றை
வேண்டியாங்கு = வேண்டியபடியே, விரும்பிய படியே
எய்தலால் = அடைய முடியும் என்பதால்
செய்தவம் = செய்கின்ற தவத்தை
ஈண்டு = இங்கு
முயலப் படும் = முயன்று செய்ய வேண்டும்
வேண்டியவை வேண்டியபடியே கிடைக்கும் என்பதால் தவம் செய்ய வேண்டும் என்றுதானே இருக்கிறது. இதில் எங்கிருந்து மறு பிறவி, சொர்க்கம் எல்லாம் வந்தது என்ற கேள்விக்கு பரிமேலழகர் விடை தருகிறார்.
"ஈண்டு முயலப்படும்" என்ற தொடரில் ஈண்டு என்பது "இங்கு" என்று அர்த்தம்.
தவம் இங்கு செய்வதால், பலன் அங்கு கிடைக்கும் என்று அர்த்தம் கொண்டு, மறுபிறவியில் இப்போது எண்ணியபடி வாழ்க்கை கிடைக்கும் என்பதால், இப்போது, இங்கு தவம் செய்ய வேண்டும் என்கிறார்.
யோசித்துப் பார்ப்போம்.
மறு பிறவியில் பன்றியாக, தெரு நாயாக, புழுவாக, பூச்சியாக யாருக்காவது பிறக்க எண்ணம் வருமா? அப்படி நடக்காமல் இருக்க வேண்டும் என்றால், இப்போதே தவம் செய்ய வேண்டும்.
மனிதராகவே பிறந்தாலும், உடல் குறையுடன், எழமையான ஒரு நாட்டில், சண்டை சச்சரவுகள் நிறைந்த நாட்டில் யாராவது பிறக்க விரும்புவார்களா?
இவற்றை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் தவம் செய்வது ஒன்றுதான் வழி.
No comments:
Post a Comment