கந்தர் அநுபூதி - எப்படிச் சொல்வது
அனுபவங்களை வார்த்தைகளில் கொண்டுவருவது கடினம்.
தீ சுட்டுவிட்டது. வலி உயிர் போகிறது. அந்த வலியை கொஞ்சம் விளக்கமாகச் சொல் என்றால் எப்படிச் சொல்வது.
காதலிக்காக காத்து இருக்கிறான் காதலன். சற்று நேரம் கழித்து வருகிறாள். அவள் மேல் கோபிக்கிறான். பின் இருவரும் அன்யோன்யமாக பேசி சிரித்து மகிழ்கிறார்கள். எங்கே அந்த சந்தோஷத்தை விளக்கிச் சொல் என்றால் எப்படிச் சொல்வது?
அனுபவங்களை, அனுபவித்துதான் அறிய முடியும். சொல்லிப் புரியாது.
சாதாரண உலக அனுபவங்களே இப்படி என்றால், இறை அனுபவம் எப்படி இருக்கும்?
அருணகிரிநாதர் இறை அனுபவம் பெற்ற பின் திகைக்கிறார்.
எப்படிச் சொல்வது? யாரிடமும் சொல்ல முடியவில்லை. தன்னந்தனியே இருப்பது போல் இருக்கிறது. அனுபவம் புரிகிறது. சொல்ல வார்த்தை இல்லை. தவித்துப் போகிறார்.
பாடல்
தன்னந்தனி நின்றது தானறிய
இன்னம் மொருவர்க்கிசை விப்பதுவோ
மின்னும் கதிர்வேல் விகிர்தா நினைவார்
இன்னங்களையும் கருபை சூழ் சுடரே .
தன்னந்தனி நின்றது = தனந்தனியனாய் நின்றதை
தானறிய = தான் மட்டும் அறிய
இன்னம் = மேலும்
மொருவர்க்கிசை விப்பதுவோ = ஒருவற்கு + இசைவிப்பதுவோ ? வேறு ஒருவருக்கு சொல்ல முடியுமா?
மின்னும் = மின்னல் போல்
கதிர்வேல் = ஒளிக் கதிர்களை வீசும் வேலாயுதத்தை உடைய முருகா
விகிர்தா =பல்வேறு வடிவங்களை உடையவனே
நினைவார் = உன்னை தங்கள் மனத்தில் நினைப்பவர்
இன்னங்களையும் = இன்னல்களை களையும், துன்பங்களைத் துடைக்கும்
கருபை சூழ் சுடரே = கருணை நிறைத்த சுடரே
நமக்கெல்லாம் ஒரு அனுபவம் நிகழ்ந்தால், அதை மற்றவர்களுக்குச் சொன்னால்தான் ஒரு திருப்தி வரும்.
சினிமா பார்த்தாலும் சரி, நாலு இடத்துக்கு சுற்றிப் பார்க்கப் போனாலும் சரி, கல்யாணம் போன்ற சடங்குகளை நேரில் சென்று பார்த்து வந்தாலும் சரி, உடனேயே நாலு பேருக்குச் சொல்ல வேண்டும். படம் எடுத்து whatsapp போன்றவற்றில் பகிர வேண்டும். comments, like ம் அள்ள வேண்டும்.
பகிர முடியாத அனுபவங்கள் நிகழ்ந்தால் என்ன செய்வது ?
No comments:
Post a Comment