Tuesday, September 10, 2024

திருமந்திரம் - களிம்பு அறுத்தானே

 திருமந்திரம் - களிம்பு அறுத்தானே 



சில சமயம், நம் கண் கண்ணாடியில் அழுக்கு படிந்து இருக்கும். விரல் பட்டு கொஞ்சம் எண்ணெய் பிசுக்கு இருக்கும். அந்தக் கண்ணாடி மூலம் பார்த்தால் எல்லாம் மங்கலாகத் தெரியும். சரிவரத் தெரியாது. 


கண்ணாடி என்றால் சுத்தம் செய்து போட்டுக் கொள்ளலாம். கண்ணில் குறை இருந்தால்?  முதலில் குறை இருக்கிறது என்று தெரிய வேண்டும். பல பேருக்கு அவர்கள் கண்ணில் குறை இருப்பதே தெரியாது. தெரிந்த பின் அதை மருத்துவரிடம் காண்பித்து சரி செய்ய வேண்டும். 


சரி, கண்ணாடியை சரி செய்யலாம், கண்ணைக் கூட சரி செய்து விடலாம். மூளையில் கோளாறு என்றால் என்ன செய்வது?  


ஒருவருக்கு மூளையில் உள்ள ஒரு குறையினால் நீல நிறம் தெரியாது என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பொறுத்தவரை நீலம் என்ற ஒன்றே கிடையாது. எத்தனை பேர், எத்தனை முறை சொன்னாலும் அவரால் ஏற்றுக் கொள்ள முடியாது. 


அது போல, நம் மனதில், சித்தத்தில் சில அழுக்குகள், கறைகள் படிந்து விடுகின்றன. அவற்றின் மூலம் நாம் உலகைப் பார்க்கும் போது அது சரியாகத் தெரியாது. 


சிக்கல் என்ன என்றால், நம் அறிவில் அப்படி ஒரு குறை இருக்கிறது என்றே நமக்குத் தெரியாது. நாம் பார்பதுதான் சரி என்று நாம் நினைத்துக் கொண்டு இருப்போம். வெளியில் இருந்து ஒரு ஆள் வந்து சொன்னால் தான் அது தவறு என்று புரியும். 


ஆன்மாவானது ஆணவம், கன்மம் போன்ற கறைகளால் (மலங்களால்) சூழப் பட்டிருக்கிறது. அதற்கு அது தெரியாது. குழம்பிய அறிவின் மூலம் அது உலகை புரிந்து கொள்ள நினைக்கிறது. அது தவறான பார்வையாகத்தான் முடியும். இறைவன், உயிர்கள் மேல் அன்பு கொண்டு, கீழிறங்கி வந்து, அவற்றின் மலங்களைப் போக்கி, ஒப்பில்லாத ஆனந்தத்தைத் தருவான் என்கிறார் திருமூலர். 


பாடல் 


விண்ணின் றிழிந்து வினைக்கீடாய் மெய்கொண்டு

தண்ணின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து

உண்ணின் றுருக்கயொ ரொப்பிலா ஆனந்தக்

கண்ணின்று காட்டிக் களிம்பறுத்1 தானே.


சீர் பிரித்தபின் 


விண்ணில் இருந்து இழிந்து  வினைக்கு ஈடாக மெய் கொண்டு 

தண் என்ற  தாளைத் தலைக்காவல் முன் வைத்து

உள் நின்று உருக்க ஓர் ஒப்பிலா ஆனந்தக்

கண்ணில் இன்று காட்டிக் களிம்பு அறுத்தானே.


பொருள் 


விண்ணில் இருந்து = வானில் இருந்து 


இழிந்து = இறங்கி வந்து 


வினைக்கு ஈடாக = அவரவர் செய்த வினைகளுக்கு ஈடாக 


மெய் கொண்டு = திருமேனி கொண்டு 

 

தண் என்ற = குளிர்ச்சியான 


 தாளைத் = திருவடிகளை 


தலைக்காவல் = தலையான காவலாக 


முன் வைத்து = முன்னே வைத்து 


உள் நின்று = உள்ளத்தினுள்ளே நின்று 


உருக்க = அதை உருக்கி 


ஓர் ஒப்பிலா = ஒரு ஒப்பிட முடியாத 


ஆனந்தக் = ஆனந்தத்தை 



கண்ணில் இன்று காட்டிக் = கண்முன் காட்டி 


களிம்பு அறுத்தானே. = மனதில் ஒட்டி இருக்கும் அழுக்குகளை அறவே துடைத்தானே 


புலியை பார்த்தே இல்லாத ஒருவனுக்கு புலி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்குவது?  அவனுக்குத் தெரிந்தது பூனை ஒன்றுதான். எனவே, அவனுக்கு "புலி எப்படி இருக்கும் தெரியுமா? பெரிய பூனை மாதிரி இருக்கும்" என்றால் அவன் புரிந்து கொள்வான். 


அவரவர் வினை, அவர்கள் பெற்ற ஞானம், அனுபவம் இவற்றிற்கு தகுந்த மாதிரி இறைவன் காட்சி தருவான். 


சின்ன பிள்ளைக்கு ஒரு பந்தைக் காட்டி சூரியன் இப்படி இருக்கும் என்று சொல்லி விளக்குவதைப் போல. 


உயிர்கள் ஆண்டவனைப் போய் அடைய முடியாது. அவன் இறங்கி வந்தால் தான் உண்டு. அவன் வருவான். உயிர்கள் மேல் அன்பு கொண்டு அவர்கள் அறிந்து கொள்ளும் வண்ணம், புரிந்து கொள்ளும் வண்ணம் வருவான். 


நமக்கு எல்லாவற்றிலும் பயம். எனக்கு பயம் ஒன்றும் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது. 


அப்படி நடந்து விட்டால், இது நடக்காவிட்டால், பிள்ளைகளுக்கு ஏதும் வந்து விடுவோமோ, போட்ட பணம் நட்டமாகி விடுமோ, உடம்புக்கு ஏதாவது வந்து விடுமோ, விசா கிடைக்குமோ, வேலை கிடைக்குமோ, வரன் அமையுமோ அமையாதோ என்று ஆயிரம் கவலை. கவலையில் இருந்து பயம். 


இப்படி மனம் பயத்தில் தவிக்கும் போது, அந்த பயத்தை போக்கி, கவலைப் படாதே, நான் இருக்கிறேன் என்று தன் திருவடிகளை காவலாக வைத்து காப்பான் அவன். 


பயம் போய் விட்டால், சந்தோஷம்தானே. இருந்தாலும் ஒரு குழப்பம் இருக்கும். 


நமக்கும், நம்முடைய சந்தோஷத்துக்கும் இடையில் நிற்பது நான், எனது என்ற ஆணவ மலம், மற்றும் கன்ம மலம், மாயா மலம். 


இந்தக் களிம்புகளை நீக்கி அறிவை ஒளி பெறச் செய்து, இன்பத்தை தருபவன் இறைவன் என்கிறார் திருமூலர். 


இப்படி மூவாயிரம் பாடல் திருமந்திரத்தில் 

நாளொன்றிற்கு ஒரு பாடல் என்று வைத்துக் கொண்டால் கூட கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் ஆகும் முழுவதும் படித்து முடிக்க. 







No comments:

Post a Comment