திருக்குறள் - கள்ளாமை - உள்ளத்தால் உள்ளலும் தீதே
களவு ஏன் நிகழ்கிறது?
மற்றவனிடம் உள்ள பொருள் நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற ஆசையால் நிகழ்கிறது. அது போல நமக்கு ஒரு கார் இருந்தால் எப்படி இருக்கும், அவனிடம் உள்ளது போல் ஒரு சமீபத்திய கைபேசி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அவன் மனைவியைப் போல எனக்கும் ஒன்று இருந்தால் எப்படி இருக்கும் என்ற ஆசை.
அடுத்த கட்டம், அவனுக்குத் தெரியாமல் அதை அவனிடம் இருந்து எடுத்துக் கொள்ள நினைப்பது.
கடைசியில், எடுத்துக் கொள்வது.
உலகியல் சட்டம் முதல் இரண்டை தவறு என்று சொல்லுவது இல்லை. அது மனதில் நிகழ்வது. ஆசைப்படுவதும், கவர்ந்து கொள்ள நினைப்பதும் குற்றம் அல்ல. கவர்ந்தால் குற்றம்.
அறம் என்பது சட்டத்துக்கு மேலானது.
மற்றவன் பொருளை அவன் அறியாமல் எடுத்துக் கொள்வோம் என்று நினைத்தாலே அது களவுதான் என்கிறார் வள்ளுவர்.
மனதால் நினைப்பது கூடத் தவறு என்கிறார்.
பாடல்
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்
\பொருள்
உள்ளத்தால் = மனதால்
உள்ளலும் = நினைப்பதும்
தீதே = தீமையானதே
பிறன்பொருளைக் = மாற்றான் பொருள்ளை
கள்ளத்தால் = மற்றவன் அறியா வண்ணம்
கள்வேம் = கவர்ந்து கொள்வோம்
எனல் = என்று நினைத்தல்
மனதால் நினைப்பதே குற்றம் என்றால், உண்மையிலேயே களவு செய்வது பெரும் குற்றம் என்பது சொல்லாமலேயே புரியும்.
இது துறவறத்தில் வரும் அதிகாரம், குறள்.
துறவிக்கு பிறன் பொருளை நினைப்பதும் தவறு.
இல்லறத்தில் உள்ளவன் அபப்டி இருக்க முடியாது.
இல்லறத்தில் உள்ள ஒருவன் ஆசைப்படுவது இயல்பு. நம் மனைவிக்கும் அது போல நல்ல சேலை வாங்கித் தர வேண்டும், நம் பிள்ளைகளும், அது மாதிரி பெரிய பள்ளியில் படிக்க வேண்டும், என்றெல்லாம் நினைத்தால் தான் இல்லறம் சிறக்கும்.
எந்தப் பொருள் மீதும் பற்று இல்லை என்றால், இல்லறம் படுத்து விடும். உன் மேல் எனக்குப் பற்று இல்லை என்று மனைவி கணவனை விட்டு விலகி விடுவாள்.
இல்லறத்தில் இருப்பவன் ஆசைப்படலாம். ஆனால் அதை களவின் மூலம் அடைய ஆசைப் படக் கூடாது.
துறவி ஆசையே படக் கூடாது.
எல்லோருக்கும் ஒரே அறம் சொல்ல முடியாது.
"உள்ளத்தால் உள்ளலும்". அது மனதால் நினைப்பதும் ? மனதால் தானே நினைக்க முடியும்? நினைப்பதும் தீதே என்று சொல்லி இருக்கலாமே? எதற்கு உள்ளத்தால் என்று போட வேண்டும்? பரிமேலழகர் கூறுகிறார், துறவியின் உள்ளம் மற்றவர்கள் உள்ளம் போல் அல்ல. அது சிறப்பானது. அந்த சிறந்த மனத்தால் கள்வேம் என்று நினைக்கக் கூடாது என்றார்.
"எனல்". எனல் என்றால் என்ன என்பதை அறிய சற்று இலக்கணம் படிக்க வேண்டும்.
வியங்கோள் என்று ஒரு இலக்கணக் குறிப்பு உண்டு.
வியம் என்றால் ஏவுவது, கட்டளை இடுவது என்று பொருள். ஏவலை கொள்வது என்பதால், அது வியம் + கொள் = வியங்கோள் என்ற பெயர் பெற்றது.
இந்த வியங்கோள் பொதுவாக நான்கு விதமான இடங்களில் பயன்படுத்தப்படும்.
வாழ்த்தல், வைதல், வேண்டல், விதித்தல் என்பவை அந்த நான்கும்.
இந்த வியங்கோள் வினைமுற்று (முற்றுப் பெற்ற வினை அல்லது செயல்) விகுதி க அல்லது ய என முடியும்.
வாழ்க
வீழ்க
வருக
அமர்க
உண்க
வாழிய (பல்லாண்டு)
இது எதிர் மறையில் வரும் போது அல் என்ற விகுதியை பெறும்.
வாரல் (வராதே)
சேறல் (சேராதே)
இந்தக் குறளில் "எனல்" என்பது எதிர்மறை வியங்கோள் வினைமுற்று விகுதி.
அதாவது கள்ளத்தால் கள்வேம் எனல் என்றால்
களவாணித்தனமாக எடுத்துக் கொள்வோம் என்று பொருள் கொள்ளக் கூடாது.
எதிர்மறையாக பொருள் கொள்ள வேண்டும்.
கள்ளத்தால் எடுத்துக் கொள்ளக் கூடாது
என்பது அதன் பொருள்.
இலக்கணம் தெரியாவிட்டால் பொருள் மாறிப் போய்விடும்.
துறவிகள் பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது.
I adore Thiruvadi
ReplyDeleteI adore Thiruvadi
ReplyDelete