கம்ப இராமாயணம் - இராமனை எண்ணித் தொழுதல்
https://interestingtamilpoems.blogspot.com/2026/10/blog-post_29.html
இராமனைப் பிரிந்த சீதை, அசோகவனத்தில் எப்படி துயருற்று இருந்தாள் என்று கம்பன் சொல்கிறான்.
சீதையின் துயரம் புரிய வேண்டும் என்றால், நீங்கள் சீதையின் இடத்தில் இருந்து சிந்திக்க வேண்டும்.
சக்கரவர்த்தித் திருமகள், மருமகள், மனைவி. அவ்வளவு பெரிய செல்வச் சீமாட்டி. துன்பம் என்றால் என்ன என்றே அறிந்து இருக்க மாட்டாள். அவ்வளவு பணிப் பெண்கள், தோழிகள் சூழ இருந்திருப்பாள். அளவற்ற செல்வம் அவளிடம் இருந்தது.
அனைத்தையும் விட்டு விட்டு, தனந்தனியாக அரக்கர்கள் மத்தியில் இருக்கிறாள். பேசக் கூட ஆள் இல்லை. எப்படி இருக்கும் அவளுக்கு?
பாடல்
விழுதல்,விம்முதல், மெய் உற வெதும்புதல், வெருவல்,
எழுதல்,ஏங்குதல், இரங்குதல், இராமனை எண்ணித்
தொழுதல்,சோருதல், துளங்குதல், துயர் உழந்து உயிர்த்தல்,
அழுதல், அன்றி,மற்று அயல் ஒன்றும் செய்குவது அறியாள்.
பொருள்
விழுதல் = சோர்ந்து தரையில் விழுவாள்
விம்முதல் = ஏக்கத்தால் விம்ம்புவாள்
மெய் உற வெதும்புதல் = உடல் சூட்டில் வெதும்புவாள்
வெருவல் = பயப்படுவாள்
எழுதல் = எழுவாள்
ஏங்குதல் = ஏங்குவாள்
இரங்குதல் = தன் நிலையை நினைத்து இரக்கம் கொள்வாள்
இராமனை எண்ணித் = இராமனை நினைத்து
தொழுதல் = கை கூப்பி தொழுவாள்
சோருதல் = சோர்வு அடைவாள்
துளங்குதல் = நடுங்குவாள்
துயர் உழந்து = துன்பத்தில் கிடந்து
உயிர்த்தல் = பெரு மூச்சு விடுவாள்
அழுதல் = அழுவாள்
அன்றி = இவை அல்லாமல்
மற்று = அசைச் சொல்
அயல் ஒன்றும் = வேறு எதுவும்
செய்குவது அறியாள் = செய்வது அறிய மாட்டாள்
அலுவலகத்தில் இருந்து கணவன் வர நேரம் ஆனால் இன்றைய பெண்கள் என்ன நினைப்பார்கள் ?
"சொன்னா சொன்ன நேரத்துக்கு வர்றது இல்ல. எப்பப் பாரு, வேலை, வேலை நு வேலையைக் கட்டிக் கொண்டு அழுவது. வீட்டில் ஒருத்தி இருக்காளே, அவளப் பத்தி நினைப்பு இருந்தால் தானே. இனி வந்து, எப்ப வெளிய போய்....கொஞ்சம் கூட பொறுப்பு கிடையாது. வர முடியாதுன்னா , முடியாதுன்னு சொல்ல வேண்டியது தானே...வர்றேன் சொல்ல வேண்டியது, அப்புறம் நேரம் காலம் இல்லாமல் தாமதமா வந்து ஏதாவது சாக்கு போக்கு சொல்லுவது..."
என்று சலித்துக் கொள்ளலாம். எல்லோரும் அல்ல. சிலர்.
சீதை, சிறையில் இருக்கிறாள். அவளுக்கு எவ்வளவு கோபம் வர வேண்டும்? இந்த மனுஷன கட்டிக்கிட்டு என்று எவ்வளவு கோபமும் வருத்தமும் அவள் பட முடியும்.
அவள் இராமன் மேல் கோவிக்கவில்லை. அவனை வெறுக்கவில்லை. அவனை நினைத்து கை கூப்பித் தொழுகிறாள்.
கணவன், மனைவி அன்பு என்பது ஒரு சிக்கல் வரும்போதுதான் அதன் ஆழம் புரியும். எல்லாம் நல்லபடியாக போகும் போது ஒன்றும் தெரியாது. பிரச்சனை என்று வரும்போதுதான் ஒருவருக்கு ஒருவர் எப்படி ஆதரவாக இருக்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள், புரிந்து கொள்கிறார்கள் என்பதெல்லாம் தெரியும்.
கேட்டிலும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் என்றார் வள்ளுவப் பேராசான்.
துன்பத்திலும் ஒரு நல்லது இருக்கிறது. அது நம் உறவினர்களின் உறவின் ஆழத்தை அறிந்து கொள்ள உதவும் ஒரு அளவு கோலாக இருக்கிறது என்பார்.
இல்லறப் பாடம்.
No comments:
Post a Comment