பெரிய புராணம் - திருநீலகண்டர் - 5
வாழ்க்கை எப்படியோ ஓடி விடுகிறது. சரியா தவறா என்று அறிந்து கொள்வதற்குள் வாழ்க்கை வேகமாக ஓடி விடுகிறது. இப்படி செய்திருக்கலாமோ, அப்படி செய்யாமல் இருந்திருக்கலாமோ என்று நினைத்து வருத்தப்படத்தான் முடிகிறது. மீண்டும் வாழ ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை.
நினைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையை ஒரு 30 வருடம் பின்னோக்கி சென்று அங்கிருந்து மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால் எப்படி இருக்கும் என்று ?
ஒரு வேளை நீங்கள் இதே வாழ்க்கையை மீண்டும் கூட வாழலாம்....இருந்தாலும் 30 வருட இளமை கிடைக்குமே...எவ்வளவு நன்றாக இருக்கும் ?
திருநீலகண்டருக்கும் , அவர் மனைவிக்கும் அப்படி ஒரு வாய்ப்பு வந்தது.
திருநீலகண்டரும் அவர் மனைவியும் ஒருவரை ஒருவர் தொடாமல் வாழ்ந்து ஆண்டு பல ஆகி விட்டது....வடிவுறு மூப்பும் வந்து சேர்ந்தது. உடல் தளர்ந்து விட்டது.
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். மனதிற்குள் தாங்கள் செய்தது சரியா தவறா என்ற கேள்வி எழுந்திருக்கும்.
என்ன செய்வது. வாழ்க்கை ஓடி விட்டது. இளமை போய் விட்டது. வா என்றால் வருமா ?
அப்படி இருக்கும் போது ஒருநாள், சிவன் ஒரு அடியார் போல் அவர்கள் வீட்டுக்கு வந்தார். திருநீலகண்டரும் அவர் மனைவியும் அவருக்கு வேண்டிய உபசாரங்கள் செய்தார்கள். அந்த அடியார் போகும் போது , ஒரு பாத்திரத்தை கொடுத்து அதை பத்திரமாக வைத்திருக்கும்படி சொல்லிவிட்டு போனார்.
சிறிது நாள் கழித்து அவர் மீண்டு வந்து கேட்டபோது, அந்த பாத்திரம் காணவில்லை.
திருநீலகண்டர், தொலைந்துபோன அந்த பாத்திரத்திற்கு பதிலாக வேறு ஒரு பாத்திரம் தருவதாக சொன்னார். அடியவர் (சிவன்) கேட்கவில்லை.
"நீர் அந்த பாத்திரத்தை வேண்டும் என்றே எடுத்துக் கொண்டீர் " அப்படி இல்லையென்றால், உன் மகன் மீது சத்தியம் செய் என்றார்.
எனக்கு மகனே இல்லை என்று கூறினார் திருநீலகண்டர். அப்படி என்றால், உன் மனைவியின் கையை பிடித்துகொண்டு இந்த குளத்தில் மூழ்கி சத்தியம் செய் என்றார்.
அப்போதும், அவர் தங்களுக்குள் நடந்ததை சொல்லவில்லை. ஒரு குச்சியை எடுத்து, அதில் இருவரும் ஆளுக்கு ஒரு முனையை பற்றிக்கொண்டு குளத்தில் மூழ்கி எழுந்தார்கள்.
எழும்போது பழைய இளமையோடு வந்தார்கள்.
நடுவில் உள்ள நிறைய பாடல்களை தவிர்த்து, அவர்கள் இளமை பெற்று வந்த பாடல் மட்டும் தருகிறேன்.
பாடல்
வாவியின் மூழ்கி ஏறும் கணவரும் மனைவி யாரும்
மேவிய மூப்பு நீங்கி விருப்புறும் இளமை பெற்றுத்
தேவரும் முனிவர் தாமும் சிறப்பொடு பொழியுந் தெய்வப்
பூவின் மா மழையின் மீள மூழ்குவார் போன்று தோன்ற
பொருள்
வாவியின் = குளத்தில்
மூழ்கி ஏறும் = மூழ்கி எழுந்த
கணவரும் மனைவி யாரும் = கணவனும் மனைவியும்
மேவிய மூப்பு நீங்கி = படர்ந்த மூப்பு நீங்கி
விருப்புறும் இளமை பெற்றுத் = விரும்பத் தக்க இளமை பெற்று
தேவரும் முனிவர் தாமும் = தேவர்களும் முனிவர்களும்
சிறப்பொடு பொழியுந் = சிறப்பாக பொழிந்த
தெய்வப் பூவின் மா மழையின் = மழை போல் பொழிந்த பூக்களில்
மீள மூழ்குவார் = மீண்டும் மூழ்குவார் (முதலில் குளத்தில் மூழ்கினார்கள், இப்போது தேவர்கள் பொழிந்த பூக்களில் மூழ்கினார்கள்)
போன்று தோன்ற = போலத் தோன்றியது....
தேவர்கள் பூ மழை பொழிந்தார்களோ இல்லையோ, மீண்டும் கிடைத்த இளமை, வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும் ?
நீளம் கருதியும், இன்னும் எத்தனையோ பாடல்கள் பெரிய புராணத்தில் இருப்பதாலும், நடுவில் உள்ள சில அருமையான பாடல்களை தரவில்லை.
ஆர்வம் உள்ள அன்பர்கள் மூல நூலை படித்துப் பாருங்கள்.
சேக்கிழாரின் தமிழ் மழையில் நனைந்து பாருங்கள்...
மூல நூல் படித்தால் யாருக்கு புரியும்? Please write all the poems in your style.
ReplyDeleteகுளத்தில் முழுகும்போதுகூட ஒருவரை ஒருவர் தொடவில்லை!
ReplyDeleteஇப்பொழுது எனக்குத் தெரிந்தாக வேண்டும்: இளமை பெற்றபின், ஒருவரை ஒருவர் தொட்டார்களா? சஸ்பென்ஸ் தாங்க முடியலையே!