Monday, March 25, 2013

திருக்குறள் - தீச்சொல்


திருக்குறள் - தீச்சொல் 


சில குறள்கள் கொஞ்சம் வளைந்து செல்வது போல் இருக்கும். Curved ball என்று சொல்லுவார்களே அந்த மாதிரி

அப்படி ஒரு குறள்

ஒன்றானுந் தீச்சொற் பொருட்பய னுண்டாயி
னன்றாகா தாகி விடும் .

சீர் பிரித்தபின்

ஒன்றானும் தீச் சொல் பொருட் பயன் உண்டாயின் 
நன்று ஆகாதாகி விடும் 

நாம் ஒருவருக்கு எவ்வளவோ நன்மை செய்திருப்போம். ஆனால், ஒரே ஒரு தீச் சொல் அவரிடம் சொல்லி, அதுவும் பலித்து விட்டால், இது வரை செய்த நன்மை எல்லாம் போய் விடும். சொன்ன தீச் சொல் பொருட் பயன் உண்டாயின், (இதுவரை செய்தது எல்லாம் ) நன்று இல்லை என்று ஆகி விடும்.  அந்த தீமையை மட்டுமே அவர்கள் நினைத்து கொண்டு இருப்பார்கள்.

இன்னொரு பொருள்

ஒரே ஒரு தீச் சொல் சொல்லி, அதன் மூலம் நமக்கு பொருட் பயன் ஏற்பட்டால் , அந்த பயன் நல்லது அல்ல. இங்கே தீச் சொல் என்பதை பொய் என்று கொள்ளலாம் . பொய் சொல்லி பணம் சம்பாதித்தால், அது நன்மை பயக்காது என்று ஒரு பொருள்.


இன்னொரு பொருள்

தீச் சொல் சொல்லி பொருள் சேர்த்தால், நாம் செய்த மற்ற அறங்கள், நல்லவை எல்லாம்  ஆகாதாகி விடும்.. "இவன் எப்படி சொத்து சேர்த்து இப்படி நல்லது எல்லாம்  செய்றானு எனக்குத் தெரியாதா " என்று உலகம் ஏசத் தலைப்படும்


தீச் சொல் என்பது பொய், புறம் சொல்லுவது, புண் படுத்துவது,  திரித்துக் கூறுவது, பயனில்லாத சொல் என்று பலவகைப்படும்

எனவே, தீச்சொல் பற்றி மிக மிக கவனமாய் இருக்க வேண்டும்.

ஒரே ஒரு சொல், இதுவரை செய்த நல்லவை எல்லாவற்றையும் அழித்துவிடும்.

ஒரு தீச் சொல் உங்களின் வாழ்நாள் பூராவும் சேர்த்த நல்லவற்றை அழிக்கும் ஆற்றல் கொண்டது .

வள்ளுவர் எச்சரிக்கிறார்....

No comments:

Post a Comment