Tuesday, March 26, 2013

சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து


சிலப்பதிகாரம் - கண் செய்த நோய்க்கு மருந்து 


முதலிலேயே சொல்லி விடுகிறேன்...இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும்.

சிலபதிகாரத்தில், கானல் வரிப் பாடல்

அது ஒரு கடற்கரை உள்ள ஊர். கடற்கரை காற்று நீர்த் திவலைகளை சுமந்து வந்து உங்கள் முகத்தோடு உரசிப் போகும். வெண்மையான மணர் பரப்பு.

கரையின் கன்னத்தில் ஓயாமல் முத்தமிடும் அலைகள்.

அந்த கடற்கரையில் வலம்புரி சங்குகள் அங்கும் இங்கும் அலைகின்றன. அப்படி அலைந்ததால், கடற்கரை மணலில் வரி வரியாக கோடு  விழுகிறது. .

அந்த கடற்கையில் நிறைய புன்னை மரங்கள் நிறைந்து இருக்கின்றன. அந்த புன்னை மரங்கள் பூத்து குலுங்குகின்றன.

காற்றடிக்கும் போது, புன்னை மலர்கள் உதிர்கின்றன. புன்னை மரங்கள் பூமிக்கு பூவால் அர்ச்சனை செய்வது போல் இருக்கிறது.

சங்கு வரைந்த கோடுகள், தடங்கள் எல்லாம் இந்த பூக்கள் விழுந்து மறைந்து விட்டன.

காதலனும் காதலியும் ஒருன்றாக இருக்கும் போது ஏற்படும் சில பல தடங்களை ஆடையிட்டு மறைப்பதில்லையா...அது மாதிரி..

அந்த கடற் கரையில் அவனும் அவளும் நாளும் பேசாமல் பேசியது அந்த கடலுக்கு மட்டும் தெரியும்.

இன்று அவள் இல்லை. வரவில்லை. அவன் மட்டும் தனித்து இருக்கிறான்.

இருக்கப் பிடிக்கவில்லை. போகலாம் என்றால் , போய் தான் என்ன செய்ய ?

காதலும் கருணையும் கலந்த அவள் கண்களை காணாமல் அவன் வாடுகிறான்.

இந்த கவலை நோய்க்கு என்னதான் மருந்து ? ஒரே ஒரு மருந்து இருக்கிறது...அதுவும் அவ கிட்டதான் இருக்கு....

பாடல்

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
    தோற்ற மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண்தாது
    போர்க்குங் கானல்
நிறைமதி வாண்முகத்து நேர்கயற்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
    தீர்க்கும் போலும்.

பொருள்






துறை = நீர்த் துறையில் , கடற் கரையில்

மேய் = மேய்கின்ற

வலம்புரி = வலம்புரி என்ற சங்கு

தோய்ந்து மணல்உழுத = மண்ணில் மூழ்கி மணலை உழுத

தோற்ற = தோற்றம், தடம், வரிகள்

மாய்வான் = மறைக்கும் படி

பொறை = பாரம், குவியல்

மலி = மலிந்த, நிறைந்த.

பூம்புன்னைப் = பூக்கள் நிறைந்த புன்னை மரம். புன்னை மரங்களில் பூக்கள் நிறைந்து இருந்தது என்று பொருள்

பூவுதிர்ந்து = புன்னை மரம் பூக்களை உதிர்த்து

நுண்தாது = மெல்லிய மகரந்தங்களை

போர்க்குங் கானல் = போர்வை போல் போத்தும் கடற்கரை

நிறைமதி = முழு நிலா

வாண்முகத்து = கூரிய  முகத்தில்

 நேர்கயற்கண் செய்த = மீனை போன்ற கண்கள் செய்த

உறைமலி உய்யாநோய் = மருந்துக்கு குணமாகாத நோய். உய்தல் = தப்பித்தல்.

ஊர்சுணங்கு = சுணங்குதல் என்றால், பெருமிதம் கொள்ளுதல், விடாமல் கெஞ்சுதல். தமிழ் அகராதி இதற்கு இன்னொரு அர்த்தமும் தருகிறது... Whitening of the skin with epithelial debris; yellow spreading spots about the breasts of women;

 மென்முலையே = மென்மையான அவளின் மார்புகளே

தீர்க்கும் போலும் = (அவள் கண் தந்த நோயை) தீர்க்கும் போலும்

அவள் கண் தந்த நோயை அவளின் மென்மையான மார்புகளே தீர்க்கும் போலும்.....

தெரியல...ட்ரை பண்ணி பார்க்கலாம் என்று அவன் நினைக்கிறான்....

எழுதியவர் இளங்கோ அடிகள் என்ற சமணத் துறவி.




1 comment:

  1. ஒரு துறவியால் இப்படி ஒரு பாட்டு எழுத முடியுமா! கண்கள் செய்த தீராநோய்க்கு, மார்புகளே மருந்து! ஆஹா!

    ReplyDelete