Sunday, March 17, 2013

பெரிய புராணம் - திருநீலகண்டர் - 2


பெரிய புராணம் - திருநீலகண்டர் - 2 


காமம் ஆண்களின் மிகப் பெரிய பலவீனம். இது பற்றி புலம்பாத சித்தர்கள் இல்லை. அவர்களின் பலவீனத்தை பெண்கள் மேல் ஏற்றி, பெண்களை வசைபாடி எழுதித் தள்ளி இருக்கிறார்கள். 


பெண்ணாகி வந்தொரு மாயப்பிசாசம் பிடித்திட் டென்னைக்
கண்ணால் வெருட்டி முலையால் மயக்கிக் கடிதடத்துப்
புண்ணாங் குழியிடைத் தள்ளி என்போதப் பொருள் பறிக்க
எண்ணா துனை மறந்தேன் இறைவா! கச்சி ஏகம்பனே!

என்று பெண்களை மாயப் பிசாசு என்று கூறுகிறார் பட்டினத்தடிகள். 

பெண்ணாசையால் அழிந்தான் இராவணன். இந்திரன் கதையும் , சந்திரன் கதையும் அதுதான். 

ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஒழுக்க நெறியாக கொண்ட தமிழர் சமுதாயத்திலும் பொது மகளிர், வரைவின் மகளிர் என்ற அங்கம் திருவள்ளுவர் காலம் தொட்டு இருந்திருக்கிறது. தொல்காப்பியர் இந்த பெண்களைப் பற்றி கூறுகிறார், அருணகிரிநாதர் கூறுகிறார், கம்பர் பாடி இருக்கிறார்....

தவறுவது மனித இயல்பு. தவறை உணர்ந்த பின் மனிதன் திருந்த வேண்டும் திருத்திக் கொள்ள வேண்டும். அற   நூல்களும் பெரியவர்களும் இதைத்தான் கூறி கொண்டே இருக்கிறார்கள். தவறு செய்து, பின் திருந்தியவர்களை இந்த சமுதாயம் என்றுமே வெறுத்து ஒதுக்கியது இல்லை. பட்டினத்தாரையும் அருணகிரியையும் இன்று கோவிலில் வைத்து வழிபடுகிறோம் 

இராவணன் திருந்த வில்லை. துரியோதனன் திருந்தவில்லை. பீஷ்மர் சொன்னார், துரோணர் சொன்னார், கிருஷ்ணன் சொன்னான்...எங்கே கேட்டான் ? திருந்தாத தவறால் அழிந்தான் அவன். 

நேற்று எங்கே விட்டோம்...

திருநீலகண்டர் மனைவியை ஆசையுடன் நெருங்கினார். அந்த அம்மையார் "தீண்டுவீராகில் எம்மை திருநீலகண்டம்" என்று அவரை விலக்கினார். 

பெண்களின் மேல் எவ்வளவு ஆசை இருந்ததோ அதை விட ஒரு படி மேலே இறைவன் மேல் பக்தி இருந்தது. 

கீழே உள்ள பாடலைப் படியுங்கள்...ஒரு மனிதன் தலைகீழாக ஒரு கணத்தில் மாறியது தெரியும், பக்தி காமத்தை வென்ற கதை தெரியும், சேக்கிழாரின் தமிழ் புலமை தெரியும்...


ஆதியார் நீல கண்டத்து அளவு தாம் கொண்ட ஆர்வம் 
 பேதியா ஆணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி 
 ஏதிலார் போல நோக்கி எம்மை என்றதனால் மற்றை 
 மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் 
 
பொருள் 

ஆதியார் = எல்லாவற்றிற்கும் ஆதியான, மூலமான அவர். ஆதியார் 

 நீல கண்டத்து = நீல கண்டமான சிவன் மேல் 

 அளவு தாம் கொண்ட ஆர்வம் = தான் கொண்ட அளவு கடந்த ஆர்வம் 

 பேதியா = பேதலிக்காமல். ஒரு புறம் மாணவி மேல் கொண்ட காதல், ஆசை...மறு புறம் எம்மை தொட்டால் திருநீலகண்டம் என்று அவர் சொன்னதால், அதை மீறி தொட்டால் தன் பக்திக்கு வரும் இழுக்கு...இந்த இரண்டுக்கும் நடுவில் நின்றாலும், ஒரு குழப்பமும் இல்லாமல், 

ஆணை கேட்ட = மனைவியின் ஆணை கேட்ட 

பெரியவர் = பெரியவர். யார் பெரியவர், எதில் பெரியவர் ...படிப்பில்லா, அறிவிலா, செல்வத்திலா, சமூக அந்தஸ்திலா, பதவியிலா...எதிலும் அவர் பெரியவர் அல்ல. சேக்கிழார் அவரை பெரியவர் என்கிறார். பெரியது என்பது பணத்திலும், புகழிலும், பதவியிலும் வருவது அல்ல. மிகச் சாதாரண மனிதன்,மண்பாண்டம் செய்து விற்கும் ஒரு குயவன் , பொது மகளிடம் சென்று வரும் ஒரு ஆணை, பெரியவர் என்கிறார் சேக்கிழார். காரணம் இல்லாமல்  இதை பெரிய புராணம் என்று சொல்லுவார்களா? இவர் வாழக்கை முழுவதையும் படித்த பின் உங்களுக்குத் தெரியும் ஏன் அவர் பெரியவர் என்று. 

 பெயர்ந்து நீங்கி = பெயர்ந்து என்றாலும் நீங்கி என்றாலும் ஒரே பொருள் தான். பின் எதற்கு பெயர்ந்து நீங்கி ? 

எழுதியவர் தெய்வப் புலவர் சேக்கிழார். காரணம் இல்லாமல் எழுதுவாரா ? 

அந்த அம்மையார் சொன்னவுடன் முதலில் மனம் நீங்கியது, பின் உடல் நீங்கியது.

 மனம் நீங்காமல் உடல் மட்டும் நீங்கி என்ன பயன்?

 குற்றங்கள் எல்லாம் முதலில் மனதில் செய்யப்படுகின்றன.

பின்தான் உடல் செய்கிறது." உங்களில் மனதால் கெட்டுப் போகாதவர்கள் இவள் மேல் முதல் கல்லை எரியட்டும்" என்றார் இயேசு பிரான்.

மனத்திர்க்கன் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீற பிற என்பார் வள்ளுவர்

மனம் பெயர்ந்தது, உடல் நீங்கியது.

அது எல்லாம் இல்லை, ஏதோ ஒரு வார்த்தையை பாடலின் இலக்கணம் கருதி போட்டிருக்கலாம், அதுக்கு இவ்வளவு பெரிய விளக்கமா என்று நீங்கள் கேட்கலாம்.  மேலே படியுங்கள். 


ஏதிலார் போல நோக்கி = ஏதிலார் என்றால் அயலார். மற்றவர்கள். ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின் தீதுண்டோ மன்னும் உயிர்க்கு என்பார் வள்ளுவர். தன் சொந்த மனைவியை அயலார் போல் நோக்கினார். பொது மகளிர் வீட்டுக்கு சென்று வந்த அவர், சொந்த மனைவியை அயலார் போல் நோக்கினார். அது மட்டும் அல்ல... 

 எம்மை என்றதனால் = அந்த அம்மையார் என்னை என்று சொல்லவில்லை, எம்மை என்று கூறினார். எம்மை என்பது பன்மை. 

மற்றை  மாதரார் தமையும் என் தன் மனத்தினும் தீண்டேன் என்றார் = மற்ற எந்த பெண்ணையும் மனத்தாலும் தீண்டேன் என்றார். உன்னை மட்டும் அல்ல, மற்ற பெண்களையும் மனதாலும் தொடேன் என்றார்.

முடிகிற காரியமா ? குயவனார் வீடு எவ்வளவு பெரிசு இருக்கும் ? அருகில் அழகே உருவான மனைவி.   உடல் தள்ளி இருந்தாலும், உள்ளம் சும்மா இருக்குமா ? தொடச் சொல்லி தூண்டுமா இல்லையா ?

எப்படி வாழ்ந்தார்...

2 comments:

  1. பெரிய புராணம் எவ்வளவு பெரிய புராணம். எப்போ முழுதும் கிடைக்கும் இவ்வளவு அருமையான விளக்கத்துடன்.
    We need 2/3 clonings of you to complete all the tamil literature with your special magic touch.

    ReplyDelete
  2. இது என்ன நியாயம்? பொது மகள் வீட்டுக்குச் சென்று வந்த ஒரு ஆணை, அவர் மனைவி கடிந்து பேசினால், உடனே எல்லாப் பெண்களையும் வெறுத்து விடுவதா? பாவம் அந்த அம்மையார்!

    சுவாரசியமான பாடல். நல்ல விளக்கம். நன்றி.

    ReplyDelete