அபிராமி அந்தாதி - சொல்லும் பொருளும்
புல்லுதல் என்று ஒரு அருமையனா தமிழ் சொல் உண்டு. அணைத்தல், மருவுதல், தழுவுதல், புணர்தல் என்று தலைவனுக்கும் தலைவிக்கும் உள்ள நெருக்கத்தை புலப்படுத்தும் ஒரு சொல். வள்ளுவர் இந்த சொல்லை பல இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார்
அபிராமி, அவளுடைய துணைவனை அணைத்து இருக்கிறாள். அவளுடைய துணைவன் மீது அவளுக்கு அவ்வளவு அன்பு. நெருக்கம் என்றால் மிக நெருக்கம். பிரிக்க முடியாத நெருக்கம். அதை எப்படி சொல்லி விளங்க வைப்பது ?
ஒரு சொல்லும், அதன் பொருளும் எப்படி பிரிக்க முடியாதோ அப்படி ஒரு நெருக்கம். பொருள் இல்லாவிட்டால் சொல் இல்லை. சொல் இல்லாமல் பொருள் இல்லை. இரண்டும் வேறுதான் என்றாலும் ஒன்றை விட்டு ஒன்று இல்லை.
கணவன் மனைவிக்கு இடையே உள்ள உறவு, உள்ள ஒரு புரிதல் என்பது ஒரு அலுவகலத்தில் வேலை பார்க்கும் மற்றொரு நபருடன் உள்ள புரிதல் போல அல்ல.
ஒரே சொல் பல அர்த்தங்களை தரும்...
அறிவு பூர்வமாய் ஒரு அர்த்தம்
உணர்வு பூர்வமாய் ஒரு அர்த்தம்
சொல்லுபவரின் மன நிலையை கொண்டு ஒரு அர்த்தம்
சொல்லப் படும் இடத்தை கொண்டு ஒரு அர்த்தம்
என்று அர்த்தம் மாறுபடும். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அறிவு பூர்வமாய், உணர்வு பூர்வமாய், ஒருவரின் மனதை ஒருவர் அறிந்து கொண்டு...ஈருடல் ஒருயிராய் இருக்க வேண்டும்..அபிராமி அப்படி இருக்கிறாள்....
அவளுடைய பாதங்கள் ... மிக மிக மென்மையானவை...ஈரமானவை...மணம் வீசுபவை ....இப்படி சொல்லிக் கொண்டே போவதை விட ...அப்போது தான் மலர்ந்த மலர் போல் இருக்கும் அவளுடைய பாதங்கள்....
அந்த பாதங்களை எப்போதும் துதிப்பவர்களுக்கு அழியா அரசு கிடைக்கும். இந்த உலகில் உள்ள அரசுகள் எல்லாம் அழியும் அரசுகள். முடி சாய்த்த மன்னர் எல்லாம் பிடி சாம்பராய் போனார்கள்.....அபிராமி அழியாத அரசை தருவாள்.
அது மட்டும் அல்ல...சிவ லோகமும் கிடைக்கும். சிவ லோகத்தை எப்படி அடைவது...அங்கு போகும் வழியும் அவள் தருவாள் ...செல்லும் தவ நெறியும் ...அதையும் அவளே தருவாள்.....
பாடல்
சொல்லும் பொருளும் என, நடம் ஆடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே. நின் புதுமலர்த் தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும், சிவலோகமும் சித்திக்குமே.
பொருள்
சொல்லும் பொருளும் என = சொல்லும் பொருளும் எப்படி ஒன்றை விட்டு ஒன்று விலகாமல் இருக்கிறதோ அது போல். இரகு வம்சத்தில் காளிதாசன் சொல்லுவான்
वागर्थाविव संपृक्तौ वागर्थप्रतिपत्तये।
जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥
जगतः पितरौ वन्दे पार्वतीपरमेश्वरौ॥
வாக³ர்தா²விவ ஸம்ப்ருʼக்தௌ வாக³ர்த²ப்ரதிபத்தயே|
ஜக³த: பிதரௌ வந்தே³ பார்வதீபரமேஸ்²வரௌ||
ஜக³த: பிதரௌ வந்தே³ பார்வதீபரமேஸ்²வரௌ||
சொல்லும் பொருளும் என இணைந்த தொல்லுலகின் தாய் தந்தையரை, பார்வதி பரமேஸ்வரரை, சொல்லையும் பொருளையும் அறிந்திடவேண்டிப் பணிகிறேன்.
நடம் ஆடும் துணைவருடன் = நடனம் ஆடும் துணைவருடன். அவனுக்கு எல்லாம் விளையாட்டுதான். ஆட்டம் தான். அலகிலா விளையாட்டு உடையார் அவர்.
புல்லும் = அணைக்கும்
பரிமளப் = நறுமணம் வீசும் (பட்டருக்கு இது எப்படி தெரியும் ?)
பூங்கொடியே = பூங்கொடி போன்றவளே
நின் புதுமலர்த் தாள் = புதியதாய் பூத்த மலர் போன்ற உன் திருவடிகளை
அல்லும் = இரவும்
பகலும் = பகலும்
தொழும் அவர்க்கே = தொழுகின்ற அவர்களுக்கு. அப்ப அப்ப தொழுவதே பெரிய வேலை நமக்கு. இதில் எங்கு அல்லும் பகலும் தொழுவது ? அவளுக்குத்தான் நம் மீது எவ்வளவு அன்பு, கருணை, காதல்...."நின் பாதம் எனும் வாசக் கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டு கொண்ட நேசத்தை என் சொல்வேன் ஈசர் பாகத்து நேரிழையே " ....என்பார் பட்டர் இன்னொரு பாடலில்....
அழியா அரசும் = என்றும் அழியாத அரசும்
செல்லும் தவநெறியும் = செல்லுகின்ற தவ வழியும். எங்கு செல்லும் தவ நெறி ?
சிவலோகமும் = சிவ லோகம் செல்லும் தவ நெறி
சித்திக்குமே. = கிடைக்குமே
தமிழ் போதாதென்று சமஸ்கிருதத்தில் இறங்கி விட்டாய்! பலே!
ReplyDeleteபட்டருக்கும் அபிராமிக்கும் உள்ள (மன) உறவு விநோதமானது, ஆச்சரியமானது, இரசிக்கத்தக்கது. அபிராமி அந்தாதியில் உள்ள பல பாடல்களுக்கு நீ எழுதியுள்ள விளக்கத்தைப் படித்தபின்புதான் நான் அதை உணர்கிறேன். இந்தப் பாடலிலும் ஒரு வினோதமான அன்னியோன்னியம் இருக்கிறது.
காளிதாசரின் பாடல், இளையராஜாவின் அற்புதமான "சலங்கை ஒலி" பாடலை நினைவு படுத்தியது. இதுவரை அந்த சமஸ்கிருதப் பாடலின் பொருள் அறிந்ததில்லை - இப்போது தெரிந்துகொண்டேன். அதற்கும் நன்றி!
"பார்வதி பரமேஸ்வர"--சிவன் பார்வதி என்றும் "பார்வதிப ரமேஸ்வர" என்று பிரித்து பார்வதி கூட பிறந்த விஷ்ணுவும் ரமை என்கிற லக்ஷ்மி என்றும் இரண்டு பொருள் பட இதை பார்க்கலாம் . இதை சலங்கை ஒலியில் கமல் அருமையாக differentiate செய்து ஆடி இருப்பார்.
ReplyDelete