இராமாயணம் - உயர்வு தாழ்வு
மனிதர்களில் உயர்வு தாழ்வு உண்டா ?
இல்லை என்று நீங்கள் சொல்லலாம். எல்லோரும் சமம் என்று சொல்லுவது எளிது.
உங்கள் தெருவை சுத்தம் செய்யும் ஆளை நீங்கள் உங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவீர்களா ? முடியுமா ?
மற்ற ஒரு ஜாதிக்காரனை உங்கள் வீட்டில் ஒருவனாக , உங்கள் சகோதரனாக உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா ?
நீங்கள் சுத்த சைவம் என்று வைத்துக் கொள்ளுங்கள்...உங்களுக்கு முன்ன பின்ன அறிமுகள் இல்லாத ஒருவர் உங்களைப் பார்க்க கொஞ்சம் மாமிசம் எடுத்துக் கொண்டுவந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும் ? உங்களால் அதை சகிக்க முடியுமா ?
இராமனால் முடிந்திருக்கிறது.
உங்களையும் என்னையும் விட மிக உயர்ந்த இடத்தில் இருந்த, சக்ரவர்த்தி திருமகனான இராமன், தன்னை விட எல்லாவிதத்திலும் தாழ்ந்த குகனை, "வா என்னோடு பக்கத்தில் அமர் "என்றான் , நீ என்னுனடைய தம்பி என்றான். தன் மனைவியான சீதையை அவனின் உறவினன் என்றான்....நம்மால் நினைத்துகூட பார்க்க முடியாது.
குகன் என்ற அந்த கதா பாத்திரம் கதைக்கு தேவையே இல்லை. கதையை முன் எடுத்துச் செல்லவோ , அதில் ஒரு திருப்பம் கொண்டுவரவோ அந்த கதா பாத்திரம் எந்த விதத்திலும் உதவி செய்ய வில்லை.
பின் எதற்கு அந்த கதா பாத்திரம் ?
குகன் மூலம் கம்பன் ஒரு உயரிய செய்தியை சொல்ல வருகிறான்.
குகன் எப்படி பட்டவன் ?
காயும் வில்லினன், கல் திரள் தோளினான்
தயங்குறச் சூழ விட்ட தொடு புலி வாலினான்.
எண்ணெய் உண்ட இருள் புரை மேனியான்.
மீன் நுகர் நாற்றம் மேய நகை இல் முகத்தினான்
கருத்த மேனி, இருளுக்கு எண்ணெய் தடவிய மாதிரி ஒரு உருவம், சிரிப்பு என்பதே கிடையாது, கோபம் வராமலே கூட தீ விழ நோக்கும் விழியை உடையவன், எமனும் அஞ்சும் குரல் வளம், மீன் வாடை அடிக்கும் உடல் ....
அப்படி பட்ட குகனை, இராமன் வேற்றுமை பாராட்டாமல், உடன் பிறப்பாய் நினைத்தான்.
இந்த உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற எண்ணத்தினால் எத்தனை போர்கள், எத்தனை உயிர் இழப்புகள், எத்தனை துவேஷம், எவ்வளவு சண்டை சச்சரவுகள் ...
அத்தனை வேற்றுமையும் மறைந்து எல்லோரும் ஒற்றுமையாக சகோதரர்களாய் வாழ வழி காட்டுகிறான் இராமன்.
அந்த குகனைப் பார்த்து "தாயினும் நல்லான் ", "தீராக் காதலன்" என்று அன்பு பாராட்டுகிறான் இராமன்.
யாதினும் இனிய நண்ப! என்று நட்பு பாராட்டுகிறான்
நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ?
இன்று உலகில் எத்தனை சண்டைகள் - கறுப்பர் - வெளுப்பர், பாலஸ்தினியர் - இஸ்ரேலர் , தமிழர் - சிங்களவர் , இந்தியா - பாக்கிஸ்தான் என்று ஒவ்வொரு நாடும் , ஒவ்வொரு இனமும் ஒன்றை ஒன்று அழிக்க நினைத்து சண்டை இட்டுக் கொண்டிருகின்றன....
அன்பும் சகோதரத்துவமும் அழிந்து போய் விட்டன ...
இதை படிக்கும் நீங்கள், இதுவரை தூரத்தில் வைத்த சில நபர்கள் நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கூட இராமன் காட்டிய வழியில் நீங்கள் முதல் அடி எடுத்து வைத்து இருக்கீர்கள் என்று பொருள்.
யோசித்துப் பாருங்கள் எவ்வளவு இராமனிடம் எவ்வளவு அன்பும், கருணையும் இருந்திருக்க வேண்டும்...
நெகிழ வைக்கும் அன்பு.
இராமாயணம் படிப்பது கம்பனின், வால்மீகியின் கவித்திறமையை இரசிக்க மட்டும் அல்ல.அவர்கள் சொல்ல வந்ததை உணர்ந்து அதில் ஒரு சிலவற்றையாவது நாம் உள் வாங்கி அதன் படி நடக்க வேண்டும்...அது நாம் அவர்களுக்குச் செய்யும் கைம்மாறு.....
நம்மை விட தாழ்தவர்களை, மதித்து அவர்களிடம் அன்பு பாராட்டி வாழ முயற்சிப்போம்.
அவர்களோடு, இராமன் செய்தது மாதிரி ஒன்றாக இருக்க வேண்டாம், அவர்களை நமது உடன் பிறப்பாய் நினைக்க வேண்டாம், அவர்களை பாராட்ட வேண்டாம்...அவர்களை அங்கிகரிக்கவாவது செய்வோம்...
கம்பன் சந்தோஷப் படுவான் - பட்ட பாடு வீணாகவில்லை என்று....
your vilakkams are getting better and better. I wish more and more people read this.
ReplyDelete