Sunday, March 10, 2013

திருக்குறள் - துன்பம் இல்லாமல் வாழ


திருக்குறள் - துன்பம் இல்லாமல் வாழ 


துன்பம் இல்லாத வாழ்வை தான் எல்லா உயிரும் விரும்பும்

எல்லோரும் இன்பத்தை வேண்டியே ஏதேதோ செய்கிறார்கள்.

இன்பம் வேண்டி  ஒன்று.

துன்பம் வரமால் இருக்க செய்ய வேண்டியது மற்றொன்று.

இன்பம் வேண்டி செய்யும் காரியங்களே துன்பத்தை கொண்டு வரும் என்றால் என்ன செய்வது ?

துன்பம் வரமால் இருக்க வள்ளுவர் ஒரு வழி சொல்கிறார்.



யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

முதலில் வழக்கம் போல் கோனார் தமிழ் உரை.

ஒருவன் எதிலிருந்து விலகி இருக்கின்றானோ, அவற்றினால் அவனுக்குத் துன்பம் வராது

மற்றவர்கள் உரையும் அப்படித்தான் இருக்கிறது

சொல்லில் மிகுந்த சிக்கனம் உள்ள வள்ளுவர் எதற்கு இரண்டு தடவை இரண்டு வார்த்தைகளை பயன் படுத்த வேண்டும் ?

யாதனின் நீங்கியான் நோதல் அதனின் இலன்

என்று சொல்லி இருக்கலாமே. அர்த்தம் சரியாக வருகிறதே

அடுக்குகள் பன்மை பற்றி வந்தன என்று ஒரு வரியில் சொல்லிவிட்டு போய் விட்டார் பரிமேலழகர்

என்ன அர்த்தம் ?

நம்மிடம் பல விதமான பொருட்கள், சொத்துக்கள், உறவுகள், நம்பிக்கைகள் என்று எண்ணில் அடங்கா பட்டியல் இருக்கிறது.

எல்லாவற்றையும் ஒரே நாளில் விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் விட முடியும்.

எவ்வளவுக்கு எவ்வளவு பற்றை விட முடியுமோ, அவ்வளவு துன்பம் (நோதல்) இல்லை.

எல்லாவற்றையும் ஒரு காலும் விட முடியாது. எனவே துன்பத்தில் இருந்து நமக்கு விடுதலை கிடையாது என்று முடிவு கட்டி ஒன்றையும் விடாமல்  இருந்து விடாதீர்கள்

எவ்வளவு நீங்கி இருக்கிறீர்களோ, அவ்வளவு துன்பம் குறைவு

உன்னிப்பாக கவனித்தால் தெரியும் ...வள்ளுவர் விடச் சொல்லவில்லை....நீங்கி இருக்கச் சொல்கிறார்.

நீங்கி இருப்பது என்றால்...தள்ளி நிற்பது. சம்பந்தம் இல்லாத மாதிரி விலகி நிற்பது.

கைகெட்டும் தூரத்தில் தான் இருக்கும். கண்ணுக்கு எட்டும் தூரத்தில் தான் இருக்கும். இருந்தும் விலகி நிற்பது சுகம்.

என்னோடது என்று வரிந்து கட்டி இழுத்து வைத்துக் கொள்ளாதீர்கள்.

மனைவியையும், கணவனையும், பிள்ளைகளையும், பெற்றோரையும் ,  சேர்த்த சொத்தையும் தூக்கி எறியச் சொல்லவில்லை. நீங்கி நிற்கச் சொல்கிறார்.

அதுவும் ஒவ்வொன்றாய். ....

முடியும்தானே ? முயன்றுதான் பார்ப்போமே ...







 



No comments:

Post a Comment