Friday, March 15, 2013

பெரிய புராணம் - இரண்டு இருள்


பெரிய புராணம் - இரண்டு இருள் 


இருட்டு. கும்மிருட்டு.  எதிரில் இருப்பது கூட தெரியவில்லை. கண் திறந்து தான் இருக்கிறது. இருந்தாலும் பார்க்க முடியவில்லை. தட்டு தடுமாறி, தொட்டு, தடவி ஒரு மாதிரி என்ன என்ன எங்கே இருக்கிறது என்று நாம் அறிந்து கொள்ள முயல்கிறோம். கண்  ஒளி இல்லாதவர்கள் உலகை அறிந்து கொள்வது இல்லையா ?

வெளியே உள்ள இருள் மற்ற பொருள்களை நம் பார்வையில் இருந்து மறைக்கும். ஆனால், அது நம்மை நாம் உணர்வதை தடுக்காது. எந்த இருளிலும் நாம் நம்மை அறிந்து கொள்ள முடியும்....


உள்ளுக்குள்ளே ஒரு இருள் இருக்கிறது. அக இருள். அந்த இருள், உலகை மட்டும் அல்ல நம்மை நாமே அறிந்து கொள்ளவதை மறைக்கும்.

புற இருள் நம்மை சார்ந்தது அல்ல. அந்த இருள் வரும் போகும். ஆனால், இந்த அக இருள் இருக்கிறதே அதை நாமே உருவாக்குகிறோம், அது நம்மை சார்ந்தே வாழ்கிறது, நம்மை சார்ந்தே வளர்கிறது.

அதை அறியாமை இருள் என்று சொல்லலாம், ஆணவ இருள் என்று சொல்லலாம்...வேறு என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்...இந்த அக இருள் உங்களால் உருவாகி, உங்களை சார்ந்து நின்று உங்களால் நாளும் நாளும் வளர்கிறது.

இந்த இருளை யார் போக்க முடியும் ? உங்களுக்குத் தெரியாது நீங்கள் இருளில் இருக்கிறீர்கள் என்று....இருளே சுகம், இருளே நிரந்தரம் என்று இருகிறீர்கள்....வெளியில் இருந்து யாராவது ஒரு விளக்கை கொண்டு வந்தால்  அன்றி இந்த அக இருளில் இருந்து விடுபட முடியாது....

அந்த விளக்குதான் இந்த திரு தொண்டர் புராணம் என்ற அடியார்களின் வரலாறு கூறும் நூல் என்கிறார் தெய்வப் புலவர் சேக்கிழார் ...


பாடல்


இங்கிதன் நாமம் கூறின் இவ் உலகத்து முன்னாள் 
 தங்கிருள் இரண்டில் மாக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற  
 பொங்கிய இருளை ஏனைப் புற இருள் போக்கு கின்ற  
 செங் கதிரவன் போல் நீக்கும் திருத் தொண்டர் புராணம் என்பாம்


பொருள்






இங்கிதன் = இங்கு இதன் (இந்த நூலின் )

நாமம் கூறின் = பெயர் என்ன என்று கூற வேண்டும் என்றால்

இவ் உலகத்து = இந்த உலகத்தில்

முன்னாள் = முன்பு

தங்கிருள் இரண்டில் = தங்கிய இரண்டு இருளில்

மாக்கள் = மக்கள் என்றால் விலங்குகள் என்று பொருள். சுய அறிவு இல்லாத, மெய் அறிவு இல்லாத மனிதர்களை மாக்கள் என்று கூறுகிறார்

சிந்தையுள் = சிந்தனையில்

சார்ந்து நின்ற பொங்கிய இருளை = சார்ந்து + நின்ற + பொங்கிய இருளை. அந்த அக இருள் நம்மை சார்ந்து இருக்கிறது, நம்மால் நிற்கிறது, நம்மால் வளர்கிறது (பொங்கிய )


ஏனைப் புற இருள் = மற்றபடி புற இருளை

போக்கு கின்ற = போக்கும்
 
செங் கதிரவன் போல் நீக்கும் = சிவந்த, ஒளி பொருந்திய கதிரவனை போல

திருத் தொண்டர் புராணம் என்பாம் = திருத் தொண்டர் புராணம் என்று சொல்லுவோம்

எப்படி சூரியன் புற இருளை நீக்குகிறதோ அது போல அக இருளை நீக்கும் சூரியன் இந்த திருத் தொண்டர் புராணம்.





1 comment:

  1. https://www.youtube.com/playlist?list=PLbb60V1ZcvreHOHoseHvDUydwsXVk6dbN

    ReplyDelete