Saturday, March 16, 2013

பெரிய புராணம் - தீண்டுவிராகில், திருநீலகண்டம்

பெரிய புராணம் - தீண்டுவிராகில், திருநீலகண்டம் 


திருநீலகண்டர் , திருநீலகண்டர் என்று ஒருவர் இருந்தார். பிறப்பால் அவர் குயவர். மண்பாண்டம் செய்து விற்பவர்.சிறந்த சிவ பக்தர்


ஆதியும் முடிவும் இல்லா அற்புதத் தனிக் கூத்து ஆடும்
 நாதனார் கழல்கள் வாழ்தி வழிபடும் நலத்தின் மிக்கார்

மண்பாண்டம் செய்து விற்று வரும் வருமானம் எவ்வளவு இருந்து விடும் ?
வறுமைதான். ஏழ்மைதான். ஏழ்மையிலும் செம்மையாக வாழ்ந்தார் ....அவர் வாழ்ந்த வாழ்கையை சொல்ல வந்த சேக்கிழார்

 பொய் கடிந்து அறத்தின் வாழ்வார் புனற் சடை முடியார்க்கு அன்பர்
 மெய் அடியார் கட்கு ஆன செயும் விருப்பில் நின்றார் 

பொய் சொல்ல மாட்டார். அற வழியில் வாழ்ந்து வந்தார். சிவனின் அன்பர். மெய் அடியார்க்கு வேண்டியதை விருப்புடன் செய்து வந்தார்.


அப்படி வாழ்ந்து வந்த அவர், பருவத்தில் திருமணம் செய்து கொண்டார். 
அவருடைய மனைவியும் அவரைப் போலவே சிறந்த சிவ பக்தி உள்ளவர்

அப்படி இருக்கும்போது, ஒரு நாள் திருநீலகண்டர் ஒரு பொது மகளின் வீட்டிற்கு சென்று வந்தார். கணவன் இன்னொரு பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவது எந்த மனைவிக்குத்தான் பிடிக்கும் ? பயங்கர கோவம் அந்த அம்மாவுக்கு. அவருக்கு வேண்டிய எல்லாம் செய்வார், ஆனால், நெருங்கிய உறவு மட்டும் கிடையாது


ஆன தம் கேள்வர் அங்கோர் பரத்தை பால் அணைந்து நண்ண 
 மானமுன் பொறாது வந்த ஊடலால் மனையின் வாழ்க்கை 
 ஏனைய எல்லாஞ் செய்தே உடன் உறைவு இசையார் ஆனார் 
 தேனலர் கமலப் போதில் திருவினும் உருவம் மிக்கார்



அவருக்கோ அவருடைய மனைவின் மேல் அளவு கடந்த பாசம். தேன் சிந்தும் தாமரைப் பூவில் வாழும் இலக்குமியை விட அழகானவர் அந்த அம்மையார்.

அவளின் ஊடலை தீர்க்க வேண்டி, அவளிடம் சென்று கெஞ்சுகிறார். கணவனை கெஞ்ச வைப்பதில் மனைவிக்கு ஒரு சுகம். கெஞ்சுவதாகவே சேக்கிழார் சொல்கிறார்


மூண்ட அப் புலவி தீர்க்க அன்பனார் முன்பு சென்று 
 பூண்டயங்கு இளமென் சாயல் பொன் கொடி  அனையார் தம்மை 
 வேண்டுவ இரந்து கூறி மெய்யுற அணையும் போதில் 
 தீண்டுவீர் ஆயின் எம்மைத் திரு நீல கண்டம் என்றார்


வேண்டுவது இரந்து கூறி - இரத்தல் என்றால் பிச்சை வேண்டுதல்.
மெய் உற அணையும் போதில் = கட்டி பிடிக்க போகும் போது

எம்மை தீண்டினால் , திருநீலகண்டத்தின் மேல் ஆணை என்றார் அந்த அம்மையார்.

அடுத்து என்ன நடந்தது என்று அடுத்த ப்ளாகில் பார்ப்போம்











1 comment:

  1. அற வழி நடப்பவர், மனைவி மேல் பாசம் உடையவர், ஆனால் பொது மகள் வீட்டிற்குச் சென்றவர் - அது எப்படி?

    இப்படி எல்லோருமே பொது மகள் வீடு செல்வது வழக்கம் போலும்!

    ReplyDelete