திருக்குறள் - நன்றாம் பணிதல்
பணிவுடைமை. அடக்கம்.
இது பற்றி கூறவந்த வள்ளுவர்,
எல்லார்க்கு நன்றாம் பணித லவருள்ளுஞ்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.
பணிதல் எல்லார்க்கும் நல்லது. அதிலும் செல்வர்களுக்கு அது இன்னொரு செல்வம் கிடைத்த மாதிரி
என்றார்
சரி, இதில் என்ன புதியதாய் இருக்கிறது. இது எங்களுக்குத் தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம்.
யோசித்துப் பாருங்கள், விடை தெரியாத கேள்விகள் எத்தனை இந்த பாடலில் ஒளிந்து கொண்டு இருக்கின்றன என்று.
- செல்வம் என்றால் எது எல்லாம் செல்வம். செல்வர்க்கு செல்வம் தகைத்து என்றால், பணம் காசு தவிர வேறு ஏதோ இருக்கிறது...அது என்ன செல்வம் ?
- எல்லார்க்கும் என்றால் யார் எல்லாம். ஒன்றும் இல்லாத பிச்சைகாரன் பணிவாய் இல்லாமல் எப்படி இருப்பான் ? அவனிடம் போய் நீ பணிவாய் இரு என்று சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது ?
- செல்வர்கே செல்வம் தகைத்து என்றால் மற்றவர்கள் யார் ...செல்வர்களுக்கு சமமாக கருதப்படும் மற்றவர்கள் யார் ?
- ஏன் செல்வர்களுக்கு மட்டும் செல்வம் தகைத்து ? ஏன் மற்றவர்களுக்கு பணிதல் இன்னொரு செல்வமாக இருக்காது ?
பரிமேல் அழகர் போன்ற உரை ஆசிரியர்கள் இல்லாவிட்டால் இதற்க்கெல்லாம் நாம் எங்கு போய் விடை காண்பது ?
இங்கே செல்வம் என்பது பெருமை, சிறப்பு என்ற பொருளில் வந்தது.
ஒருவனுக்கு பெருமை, சிறப்பு மூண்டு வழியால் வரும்.
கல்வி
குலம்
பொருள்
இந்த மூன்றினால் ஒருவன் சிறப்படைவான். கல்விச் சிறப்பு சொல்லவே வேண்டாம். நமகெல்லாம் தெரியும்.
நல்ல குலத்தில் பிறப்பதும் ஒரு சிறப்பு, ஒரு மதிப்புதான். அந்த குலத்தின் மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் அந்த குலத்தில் பிறந்தவனுக்கும் கிடைக்கும்.
பொருள் - பணம், காசு, சொத்து, வீடு வாசல் என்ற இவற்றால் ஒருவனுக்கு பெருமையும், சிறப்பும் வரும்.
இந்த மூன்றில், முதல் இரண்டை விட்டு விட்டு மூன்றாவதாக வரும் செல்வர்க்கே செல்வம் தகைத்து என்று சொல்லுவானேன் ?
கல்வியும், குலமும் அடக்கத்தை தானே தரும். ஒருவன் மேலும் மேலும் படிக்க படிக்க அவனுக்கு அடக்கம் தானே வரும்...நமக்குத் தெரியாதது எவ்வளவு இருக்கிறது என்ற பிரமிப்பு வரும். அது அடக்கத்தை தானே தரும். அடக்கம் இல்லாமல் அழிந்தவர்கள் பற்றிய வரலாறு இது எல்லாம் அவர்களுக்கு அடக்கத்தை தானே தரும்.
அதேபோல் நல்ல குலத்தில் பிறந்தவர்களுக்கு அவர்களின் பெற்றோர், ஆசிரியர், உறவினர்கள் நல்ல சொல் சொல்லி அவர்களை திருத்துவார்கள்.
ஆனால், செல்வம் படைத்தவர்களுக்கு அந்த வசதி இல்லை. இன்னும் சொல்லப் போனால் செல்வம் படைத்தவர்களை சுற்றி உள்ளவர்கள் செல்வந்தர்களின் செல்வத்தை கண்டு, பயந்து, அவர்களின் அகந்தையை மேலும் வளர்த்து விடுவார்கள். எனவே செல்வர்கள் பணிவாக இருப்பது அவர்கள் மேலும் ஒரு செல்வம் பெற்றது போல. மேலும், செல்வர்கள் பணிவாக இல்லாமல் அகந்தையோடு செயல்பட்டால் அவர்களுக்கு கீழே உள்ளவர்கள், அந்த செல்வர்களின் மேல் வெறுப்படைந்து அவர்களுக்கு எதிராக வேலை செய்யலாம். அதே சமயம், செல்வர்கள் பணிவாக இருந்தால், அவர்களுக்கு கீழே உள்ளவர்கள் அவர்களிடம் மேலும் விஸ்வாசமாக இருந்து அவர்களின் செல்வத்தை பெருக்க உதவுவார்கள். எனவே, பணிவு செல்வர்களுக்கு இன்னொரு செல்வம் கிடைத்த மாதிரி என்றார்.
தகைத்து என்ற சொல்லுக்கு அழகு படுத்துதல், பிணைத்தல்,கட்டுதல், என்று பொருள்.
இன்னொரு மறை பொருள் கல்வி பணிவைத் தரவேண்டும். அகந்தை இருக்கிறதென்றால் கல்வி சரியாக வேலை செய்யவில்லை என்று அர்த்தம்.
தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
அம்மா ! பெரிதென்று அகமகிழ்க
தம்மின் கற்றாரை நோக்கிக் கருத்துஒழிக
எற்றே இவர்க்கு நாம் என்று
என்ற நாலடியார் சிந்தித்து நோக்கத் தக்கது.
குலமும், கல்வியும் பணிவைத் தரவேண்டும். பணிவில்லாதவன் நல்ல குலத்தில் தோன்றியவனாக இருக்க முடியாது.
சிந்திக்க சிந்திக்க ஆழமான பல அர்த்தங்களை தரும் நூல். திருக்குறள்.
சமயம் கிடைக்கும்போதெல்லாம் குறள் படியுங்கள்.
No comments:
Post a Comment