அபிராமி அந்தாதி - முருத்தன மூரலும்
இந்த ப்ளாக் வயது வந்தவர்களுக்கு மட்டும் என்று முன்னெச்சரிக்கை செய்து விடலாமா என்று தோன்றியது....
அபிராமி பட்டரின் அன்பு மிக மிக அன்யோன்யமானது. கல்மிஷம் இல்லாதது. உறுத்தல் இல்லாதது. அவரையும், அபிராமியும் தவிர இந்த உலகில் யாரும் இல்லை என்ற நினைப்பில் ஆழ்திருப்பவர் அவர்.....
அவரின் அன்யோன்யத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.....
ஒரு பெண்ணுக்கு மிகுந்த அழகைச் சேர்ப்பது அவளின் மார்பகங்கள்.
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று.
என்பார் வள்ளுவர்
அபிராமியின் மார்புகளை பார்க்கிறார் பட்டர்.
இந்த மார்புகள் எப்போதும் என் தந்தையான சிவனின் கருத்திலும், அவன் கண்ணிலும் இருக்கும் என்கிறார்...பெரிய பொன்னாலான மலை போல் இருக்கும் மார்புகள் என்று புகழ்கிறார்...
அந்த மார்புகள், பசி என்று அழுத பிள்ளைக்கு பால் வழங்கியது...
அருட் பசி கொண்டு அலையும், அழும் நமக்கும் அருளை தரும் அவை.
அந்த மார்புகளுக்கு நடுவே தொங்கும் மணி ஆரம்.
அவளுடைய ஒரு கையில் வில், இன்னொரு கையில் அம்பு, புன்முறுவல் பூக்கும் முகம்...
இவற்றோடு நீ என் முன்னால் வந்து நிற்க வேண்டும் என்று வேண்டுகிறார்....
பாடல்
கருத்தன எந்தைதன் கண்ணன,வண்ணக் கனகவெற்பின்
பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
முருத்தன மூரலும், நீயும், அம்மே. வந்து என்முன் நிற்கவே.
பொருள்
கருத்தன = கருத்தில், மனத்தில், நெஞ்சில் எப்போதும் நிறைந்து நிற்பன
எந்தைதன் = என் தந்தையான சிவனின்
கண்ணன = கண்ணில் என்று வளம் வருவன
வண்ணக் = அழகான, வண்ணமான
கனகவெற்பின் = பொற்குன்றம் போல
பெருத்தன = அன்பாலும் அருளாலும் பெருத்தன. தாய்மார்களுக்கு, குழந்தை பிறந்த பின் மார்பு பெருக்கும். குழந்தைக்கு பால் தர வேண்டி, இயற்க்கை செய்யும் மாற்றம் அது. அபிராமிக்கு எத்தனை குழந்தைகள்...எத்தனை யுகமாய் குழந்தைகள் ....
பால் அழும் பிள்ளைக்கு நல்கின = பசித்து பால் வேண்டும் என்று அழுத குழந்தைக்கு அன்போடு தந்தன
பேர் அருள்கூர் = பெரிய அருளிச் செய்யும்
திருத்தன பாரமும் = அப்படி சிறப்பு மிக்க மார்புகளும்
ஆரமும் = அதன் மேல் தவழும் மாலையும்
செங்கைச் சிலையும், அம்பும் = சிவந்த கைகளில் கொண்ட வில்லும் அம்பும். அவள் அன்பு மட்டும் அல்ல, கண்டிப்பும் கொண்டவள். தவறு செய்தால் தண்டிக்கவும் செய்வாள்.
முருத்தன மூரலும் = முருங்கை பூ போல பற்கள் தெரியும் அழகிய இதழ்களும். வில்லும் அம்பும் வைத்து இருகிறாளே என்று பயந்து விடாதீர்கள்...அவள் முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டே இருக்கும்.
நீயும் = இவற்றோடு நீயும்
அம்மே = என் தாயே
வந்து என்முன் நிற்கவே = என் முன்னால் வாம்மா
என்று வாஞ்சையோடு அழைக்கிறார்.
எவ்வளவு விகல்ப்பம் இல்லாத மனம் இருந்தால் இப்படி ஒரு பாட்டை அம்பாள் மேல் பாட முடியும்...
இந்த பாடல்களை படித்து புரிந்து கொள்ள முடியாது....புரிந்து கொண்டு படிக்க வேண்டும்....
சிறிதும் கல்மிஷம் இல்லாமல், மார்பகங்களைப் பாடியதோடு, "அம்மே" என்றும் அழைக்கிறாரே! அந்த மாதிரி ஒரு களங்கமின்மையை என்னவென்று சொல்வது!
ReplyDelete//இந்த பாடல்களை படித்து புரிந்து கொள்ள முடியாது....புரிந்து கொண்டு படிக்க வேண்டும்....//
ReplyDeleteஅருமையான விளக்கம். வாழ்த்துக்கள்.