Monday, March 4, 2013

இராமாயணம் - முட்டாள் செய்த தீமை போல்


இராமாயணம் - முட்டாள் செய்த தீமை போல்


சீதை மேல் கொண்ட காதல் இராவணன் மனதில் வளர்ந்து கொண்டே போகிறது. எப்படி வளர்ந்தது என்று சொல்ல வேண்டும்.

வாமனனுக்கு மாபலி தந்த கொடை நல்லார்க்கு செய்த நன்மை போல் வளர்ந்தது என்றான்.

அது நல்லவனுக்கு செய்த நன்மை.

இங்கு தீயவன் இராவணனுக்கு ஏற்பட்ட பொருந்தா காமம் பற்றி சொல்ல வேண்டும்.

கம்பனுக்கு உவமைக்கா பஞ்சம் ? முட்டாள் மறைவாகச் செய்த தீமை போல் வளரந்தது அந்த காமம்.

அது என்ன முட்டாள் செய்த தீமை, கற்றவன் செய்த தீமை ? கற்றவன் தீமையே செய்ய மாட்டானா ?

செய்வான். அவனக்குத் தெரியும், என்றாவது நாம் மாட்டிக் கொள்வோம் என்று. பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தானே வரும் என்று வள்ளுவர் சொன்ன மாதிரி, படித்தவன் தப்பு செய்தாலும் அதன் விளைவு வரும் என்று அவனுக்குத் தெரிந்து இருப்பதால் ஏதோ கொஞ்சம் தயங்கி தயங்கி செய்வான்.  முட்டாள் அப்படி அல்ல. மனதில் பட்டதை செய்து கொண்டே போவான்

தேவர் அனையர் கயவர் அவரும் தாம் மேவன செய்து ஒழுகலான் என்பார் வள்ளுவர்.

அதுவும் முட்டாள் யாருக்கும் தெரியாது என்று மேலும் மேலும் செய்து கொண்டே போவான். அப்படி அவன் செய்யும் தீமை போல இராவணன் மனதில் சீதை மேல் கொண்ட காமம் வளர்ந்து கொண்டே போயிற்று

பாடல்



விதியது வலியினாலும், மேல் உள விளைவினாலும்,
பதி உறு கேடு வந்து குறுகிய பயத்தினாலும்,
கதி உறு பொறியின் வெய்ய காம நோய், கல்வி நோக்கா
மதியிலி மறையச் செய்த தீமைபோல், வளர்ந்தது அன்றே.



பொருள்





விதியது வலியினாலும் = வலிமையான விதியாலும். இராவணன் சீதை மேல் ஆசை கொண்டது விதி. கம்பர் விதியை மிகவும் நம்புகிறார். கம்பன் காட்டும் விதி என்றே ஒரு ப்ளாக் போட்டு விடலாம்.


மேல் உள விளைவினாலும் = மேலே நடக்க வேண்டிய விளைவுகளினாலும்

பதி உறு = இலங்கையம்பதிக்கு வர இருக்கின்ற

கேடு வந்து = தீமைகளாலும்


குறுகிய பயத்தினாலும் = பயத்தல் என்றால் வருதல் தருதல் தருவித்தல் என்ற பொருள். இலங்கை நகருக்கு தீமை அருகில் (குறுகி) வந்து விட்டதாலும்

கதி உறு பொறியின் = கதி என்றால் வழி. அதோ கதி என்றால் கெட்ட வழி. பிரகதி என்றால் நல்ல வழி. பொறிகள் என்றால் புலன்கள் புலன்கள் வழியே செல்லும்

வெய்ய காம நோய் = கொடுமையான காம நோய்

கல்வி நோக்கா மதியிலி = படிப்பறிவில்லாத முட்டாள். படித்த முட்டாள்களும் உண்டு. இங்கு கம்பர் கூறுவது படிக்காத முட்டாள்களை.

மறையச் செய்த தீமைபோல் = ஒரு பொருள் மறைவாக, யாருக்கும் தெரியாமல் செய்த தீமை. இன்னொரு பொருள் தான் மறைய செய்த தீமை. சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது மாதிரி.

வளர்ந்தது அன்றே = வளர்ந்து கொண்டே சென்றது

கல்வி நம்மை தீமை செய்வதில் இருந்து தடுக்க வேண்டும். நம்மை நல்  வழிப் படுத்த வேண்டும். நல்வழிப் படுத்தாதது கல்வி அல்ல.

அறிவு அற்றம் காக்கும் கருவி என்பார் வள்ளுவர்.

பிறர் அறிய மாட்டார்கள் என்று நினைத்து தீமை செய்யக் கூடாது. என்றேனும் வெளி வந்தே தீரும் நாம் செய்த தீமை.

இன்னொரு கருத்து, ஒரு முறை ஒரு தீமை செய்ய தொடங்கினால், அது நம்மை அறியாமல் வளர்ந்து கொண்டே போகும். தீய எண்ணங்களை முளையிலேயே கிள்ளி எறிந்து  விட வேண்டும். இல்லை என்றால் அது நாளும் வளர்ந்து கொண்டே போகும். பின் மாற்றுவது கடினம்.

இலக்கிய சுவைக்காக மட்டும் அல்ல, நல்ல கருத்துகளையும் அறிந்து கொண்டால் ஏதோ ஒரு விதத்தில் நமக்கு அது நலம் பயக்கும்.

1 comment:

  1. இந்த பிளாக்கில் எத்தனையோ கம்பரின் உவமைகளைப் படித்துவிட்டேன்; ஆனால், இந்த உவமைதான் எல்லாவற்றையும் விட சூப்பர்!

    அருமையான விளக்கம் எழுதியிருக்கிறாய்! நல்வாழ்வு வாழ்ந்து இன்னும் ஆயிரக்கணக்கான பிளாக்குகள் எழுத வாழ்த்துகிறேன்!

    ReplyDelete