திருக்குறள் - தீவினை என்னும் செருக்கு
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
தீய செயல்களை செய்ய கெட்டவர்கள் அஞ்ச மாட்டார்கள், நல்லவர்கள் அஞ்சுவார்கள்.
இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா ? நமக்கே தெரியும் இல்லையா ?
சற்று உன்னிப்பாக கவனிப்போம்.
தீவினையார் அஞ்சார், விழுமியவர் அஞ்சுவர் - ஏன் ?
ஒரு தீய செயலை செய்ய முதன் முதலில் முற்படும் போது நிறையவே பயம் இருக்கும். ஒரு வேளை மாட்டிக் கொள்வோமோ என்று ? அதுவே நாள் ஆக ஆக பழகி விடும். பயம் விட்டுப் போகும்.
பயம் இல்லாமல் ஒருவன் ஒரு தீய செயலை செய்கிறான் என்றால் அவன் அதை நிறைய நாட்களாகச் செய்கிறான் என்று அர்த்தம்.
மேலும், அப்படி செய்து செய்து அதில் பெரிய வல்லுனராகி விடுவான். அந்த தீச் செயல் செய்வதில் அவனுக்கு ஒரு பெருமையும் கூட இருக்கும். "தீவினை என்னும் செருக்கு " என்றார் வள்ளுவர்.
மறை பொருள் என்ன வென்றால்,
தீய செயல்கள் செய்ய ஆராம்பிக்காமல் இருப்பதே நல்லது. முதலில் பயம் வரும். அப்பவே விட்டு விட வேண்டும். என்ன தான் ஆகும் பார்க்கலாம் என்று ஆரம்பித்தால் , பின் பயம் போய் விடும்...அது மட்டும் அல்ல அந்த தீவினை செய்வதே பெரிய பெருமை போல் ஆகி விடும்.....பயம் போய் செருக்கு வந்து விடும். செருக்கு கண்ணை மறைக்கும். கருத்தை மறைக்கும். அழிவு நிச்சயம்.
ஒரே ஒரு தடவை என்று ஆரம்பிப்பது பின்னால் பெரிய சிக்கலில் கொண்டு போய் விடும்.
நாம் நிறைய பேரை பார்க்கலாம் ... தண்ணி அடிப்பது, புகை பிடிப்பது, லஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பது இதை எல்லாம் பெரிய பெருமை போல் சொல்லிக் கொள்வார்கள்..
அது எல்லாம் தவறு என்பதே மறந்து போகும். ...
குழந்தைகளுக்கும் சொல்லி வையுங்கள்....பின்னாளில் உதவும் அவர்களுக்கு.
நம்ம ஊரு அரசியல்வாதி போல இருக்கு! அவனுகளுக்கெல்லாம் அவனுக அப்பா-அம்மா ஒண்ணும் சொல்லித் தரலை. அதுதான் இப்படி ஊரைக் கொள்ளை அடிக்கிறானுக, அதுவும் பெருமையோட!
ReplyDelete