பெரிய புராணம் - இடையறாப் பேரன்பு
நம்மிடம் அன்பு உள்ளவர்களிடம், நாம் அன்பு செய்பவர்களிடம் கூட நாம் சில சமயம் கோவம் கொள்ள நேரிடலாம். அன்பு செலுத்துவது தடை படலாம்.
அன்பு என்பது பலன் எதிர் பாராமல் கொடுப்பது. மழை போல். நாம் என்ன பதிலுக்கு செய்வோம் என்று மழை பெய்கிறது ?
கோவில். அற்புதமான இடம். கூட்டம் இல்லை என்றால், அதன் புராதனம், அதன் காலம் காலமாய் கட்டி காத்து வந்த இருளும், அமானுஷ்யமான நெடியும்...
எப்பவாவது கோவிலுக்குப் போகும் போது ... சற்று நேரம் யோசித்துப் பாருங்கள்...அந்த கோவிலில் மாணிக்க வாசகரும் அப்பரும், எத்தனையோ ஆழ்வார்களும் , ஆச்சாரியர்களும் வந்து நடந்த இடம் என்று. அவர்கள் நடந்த அதே இடத்தில் நீங்களும் நடக்கிறீர்கள். அவர்கள் நின்ற அதே இடத்தில் நீங்களும் நிற்கிறீர்கள்.
யார் அறிவார், நீங்களே கூட முன் ஜன்மத்தில்அதே இடத்தில் நின்றிருக்கலாம்..நடந்து இருக்கலாம்...யாரோ உங்கள் முன்னோர் அந்த கோவிலின் பிரகாரங்களில்தன் சந்ததி, அதாவது நன்றாக வாழ, மகிழ்ச்சிய்காக வாழ கண்ணீர் மல்கி பிரார்த்தித்து இருக்கலாம்.
எனவே கோவில்களை பராமரிப்பது நம் கடமை..இறை உணர்வு இல்லாவிட்டாலும். வேளுக்குடி போன்ற பெரியவர்கள் கோவில் பராமரிப்பை பற்றி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லி கொண்டிருக்கிறார்கள்
அழகு. இளமை அழகு. அதிலும் பெண்கள் இளைமையில் மிக அழகாக இருப்பார்கள். இயற்கை கொடுத்த நன்கொடை.
முதுமையிலும் அழகாக இருக்க முடியுமா ? வெகு சிலரே முதுமையில் அழகாக இருக்கிறார்கள்.
என்ன ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமால் ஏதேதோ சொல்லிக்கொண்டே போகிறேனா ?
திருநாவுக்கரசரை பற்றி சேக்கிழார் சொல்லும் பாடல்
இடையறாப் பேரன்பும் மழைவாரும்
இணைவிழியும் உழவாரத்தின்
படையறாத் திருக்கரமும் சிவபெருமான்
திருவடிக்கே பதித்த நெஞ்சும்
நடையறாப் பெருந்துறவும் வாகீசப்
பெருந்தகைதன் ஞானப்பாடல்
தொடையறாச் செவ்வாயும் சிவவேடப்
பொலிவழகும் துதித்து வாழ்வாம்
பொருள்
இடையறாப் பேரன்பும் = இடை விடாத பேரன்பு. ஒரு நிமிடம் கூட அன்பு மாறாத மனம்.
மழைவாரும் இணைவிழியும் = மழை போல் கருணை பொழியும் இரண்டு விழிகளும்
உழவாரத்தின் படையறாத் திருக்கரமும் = உழவாரம் என்பது சின்ன மண் வெட்டி போன்ற சாதனம். கோவிலில் பிரகாரத்தில் உள்ள கல்லையும், முள்ளையும் எடுத்து ஓரமாகப் போட உதவும் சாதனம். எப்போதும் அவர் கையில் அந்த சாதனம் இருக்கும். கோவில் பராமரிப்பில் எப்போதும் ஈடுபட்டு இருப்பார் என்பது பொருள்.
சிவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சும் = சிவா பெருமானின் திருவடிகளில் பதிந்த நெஞ்சம்
நடையறாப் பெருந்துறவும் = நடை நிற்காத பெரும் துறவு. அது என்ன நடை விடாத துறவு. துறவிகள் ஒரு நாளுக்கு மேல் ஒரு இடத்தில் தங்கி இருக்கக் கூடாது என்பது விதி. ரொம்ப நாள் இருந்தால், அந்த ஊரின் மேல், அங்குள்ள மக்கள் மேல் ஒரு பற்று வந்து விடும்.
பேய் போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்
நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்
தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி
சேய் போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!
என்பார் பட்டினத்தார். பேய்க்கு ஒரு இடம் உண்டா. அது பாட்டுக்கு அலைந்து கொண்டிருக்கும்.
மடம் கட்டி, சொத்து குவித்து, அதை வரவு செலவு பார்த்து,...இது எல்லாம் துறவிக்கு அடையாளம் அல்ல
வாகீசப் பெருந்தகை = வாகீசர் என்பது திருநாவுக்கரசரின் இயற் பெயர்
தன் ஞானப்பாடல் = ஞானம் செறிந்த பாடல்கள்
தொடையறாச் செவ்வாயும் = யாப்பு இலக்கணம் மாறாத பாடல்கள் பொழியும் அவரின் செவ்வாயும்
சிவவேடப் பொலிவழகும் = சிவச் சின்னங்கள் தரித்த அவரின் பொலிகின்ற அழகையும்
துதித்து வாழ்வாம் = துதித்து வாழ்வோம்
தெய்வப் புலவர் சேக்கிழார் எழுதியப் பாடல்.
சொல்லச் சொல்ல தித்திக்கும்.
Beautiful song. and wonderful explanation. thanks for giving us such treasures from our lit. great job. god bless you to write more and more.
ReplyDeleteஎன்ன ஒரு மதிப்பு இவருக்கு அவர் மேல்! "எந்தரோ மகானுபாவுலு" என்று இருவரையுமே சொல்லலாம். அடுத்தவரை வாயாரப் புகழவும், போற்றவுமே ஒரு சிறப்பு வேண்டுமல்லவா?
ReplyDeleteஇந்த பிளாக் இல்லை என்றால், நான் இத்தனை தமிழ்ப் பாடல்களைத் தேடிப்படித்திருக்க மாட்டேன். மிகுந்த நன்றி.
ஏனோ தெரியவில்லை, ஒவ்வொரு முறை பெரிய கோவில் செல்லும் போதும், ராஜராஜ பெருந்தகை, இங்கு தானே நின்றிருப்பார், இங்கு தானே அமர்ந்து இருப்பார் என நினைப்பதுண்டு.
ReplyDeleteஇந்த பாடல் மாதவ் சிவஞான சுவாமிகள் அருளியது. சேக்கிழார் எழுதிய பாடல் இல்லை
ReplyDelete