கந்தர் அலங்காரம் - எப்போது படிக்க வேண்டும்
எதைப் படிக்க வேண்டும் என்பது ஒரு பிரச்னை.
எப்போது படிக்க வேண்டும் என்பது அதை விட பெரிய சிக்கல்.
எப்படி படிக்க வேண்டும் என்பது அதனினும் பெரிய சிக்கல்.
கற்க கசடு அற , கற்பவை , கற்றபின், நிற்க, அதற்குத், தக என்று சொன்ன வள்ளுவர் கூட எப்போது கற்க வேண்டும் என்று சொல்ல வில்லை.
எப்போது படிக்க வேண்டும், எதை படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும் என்று அருணகிரியார் சொல்கிறார்....
இந்தப் பிறவியை அழித்து, பின் பிறக்க விடாமல் செய்யும் முருகனின் கவியை அன்போடு , பிழை இல்லாமல் படிக்க மாட்டீர்கள். தீ பிடித்தது போல கண்களில் புகை எழ, கோபத்தோடு எமன் வந்து பாசக் கயிற்றை உங்கள் கழுத்தில் போட்டு இழுக்கும் போதா கற்பீர்கள் ?
பாடல்
அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றிலீ ரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.
அருணகிரியாரின் பாடல்களை சீர் பிரிக்காமல் படிப்பது சற்று கடினம்.
சீர் பிரித்தபின்
அழித்துப் பிறக்க ஒட்டா அயில் வேலன் கவியை அன்பால்
எழுத்துப் பிழை அற கற்கின்றிலீர் எரி மூண்டதென்ன
விழித்துப் புகை எழ பொங்கு வெங் கூற்றன் விடும் கையிற்றால்
கழுத்தில் சுருக்கிட்டிழுக்கும் அன்றோ கவி கற்கின்றதே.
அடடா ! புரிகிற மாதிரி இருக்கே !!
அழித்துப் = இந்த பிறவி என்ற தொடரை அழித்து
பிறக்க ஒட்டா = மீண்டும் பிறக்க விடாமல் செய்யும்
அயில் = கூர்மையான
வேலன் = வேலை உடையவன்
கவியை = கவிதையை
அன்பால் = அன்போடு
எழுத்துப் பிழை அற = எழுத்துப் பிழை இல்லாமல்
கற்கின்றிலீர் = கற்க மாட்டீர்கள்
எரி மூண்டதென்ன = தீ பிடித்தாற்போல்
விழித்துப் = விழித்துக் கொண்டு
புகை எழ = எங்கும் புகை எழ
பொங்கு = கோபத்தோடு வரும்
வெங் கூற்றன் = வெம்மையான கூற்றன்
விடும் கையிற்றால் = விடும் பாசக் கயிற்றால்
கழுத்தில் = கழுத்தில்
சுருக்கிட்டிழுக்கும் = சுருக்குப் போட்டு இழுக்கும்
அன்றோ = அன்றைய தினமா
கவி கற்கின்றதே = கவி கற்பது ?
பின்னாளில் படித்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே போகாதீர்கள்.
காலன் எப்போது நம் கழுத்தில் கயிற்றை மாட்டுவான் என்று தெரியாது.
நல்லவற்றை முடிந்தவரை சீக்கிரம் படித்து விடுங்கள்.
நமக்கு கிடைத்தது போல் பெரியவர்கள், குருமார்கள் யாருக்குக் கிடைத்தார்கள் ?
நீங்கள் புண்ணியம் செய்தவர்கள். உங்கள் முன்னவர்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
காசு போட்டால் கிடைக்குமா கந்தரலங்காரம் ?
அதனால்தான் இந்த அருமையான blog-ஐ இப்போதே படிக்கிறோம்!
ReplyDelete