அறநெறிச்சாரம் - அற உரைக்கு தேவையான நான்கு
யாரைப் பார்த்தாலும் அறிவுரை வழங்கத் தொடங்கி விடுகிறார்கள். அதுவும் கொஞ்சம் வயசு ஆகிவிட்டால் , அதுவே ஒரு தகுதி போல அறிவுரை சொல்லத் தொடங்கி விடுவார்கள்.
யார் சொல்வதை கேட்பது ? எதை கேட்பது ? எதை விடுவது ? என்ற குழப்பம் நமக்கு வரும்.
அவர்கள் சொல்வது சரிதானா என்று எப்படி அறிந்து கொள்வது ? இல்லை என்றால் பெரியவர்கள் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டுமா ?
அறநெறிச்சாரம் சொல்கிறது.
அற உரைக்கு நான்கு முக்கியமான தேவகைள் இருக்கின்றன.
முதலாவது - சொல்பவன்
இரண்டாவது - கேட்பவன்
மூன்றாவது - சொல்லப்படுவது
நாலாவது - சொன்னதால் விளையும் பயன்
இந்த நான்கிலும் உள்ள குறைகளை நீக்கி ஏற்றுக் கொள்ள வேண்டும்.
பாடல்
உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ
துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி
நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்
வான்மையின் மிக்கார் வழக்கு.
பொருள்
உரைப்பவன் = சொல்பவன். கண்ட சாமியார் சொல்வதையும் கேட்கக் கூடாது.
கேட்பான் = கேட்பவன்
உரைக்கப்படுவது = சொல்லப் படுவது
உரைத்தனா லாய பயனும் = சொன்னதால் ஆன பயனும்
புரைப்பின்றி = குற்றம் இன்றி
நான்மையும் = இந்த நான்கிலும்
போலியை நீக்கி = குறைகளை நீக்கி
அவைநாட்டல் = அவற்றை எடுத்துக் கொள்ளுதல்
வான்மையின் மிக்கார் வழக்கு = அற நெறியில் நின்றவர்களின் வழி
யாரோ சொன்னார்கள் என்பதற்காக அப்படியே எடுத்துக் கொள்ளக் கூடாது.
இப்படி ஒரு நூல் யாருக்குக் கிடைக்கும் ? நான் சொல்கிறேன் என்பதற்காக நீ இவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இல்லை. நீயே ஆராய்ந்து பார்த்து சரி என்றால் ஏற்றுக் கொள் என்று சொல்லும் துணிவும் நம்பிக்கையும் உள்ள புத்தகம் அறநெறிச்சாரம்.
அதைப் படிக்க வேண்டுமா இல்லையா ?
கண்டிப்பா படிக்கணும்தான். இப்படி யாராவது எளிமையா உரை எழுதி கொடுத்தால்!!!
ReplyDelete"உரைப்பவனின் போலியை நீக்க வேண்டும்" என்றால், சொல்பவரின் குறைகளைக் கருதாமல், சொல்லும் விஷயத்தை மட்டும் கொள்ள வேண்டும் என்று பொருளோ?
ReplyDeleteஅதேபோலவே, கேட்பவரின் குற்றத்தை, சொல்லப்படும் விஷயத்தின் குற்றத்தை, அதன் பயனில் கலந்திருக்கும் குற்றத்தை நீக்கி, நல்லதை மட்டுமே கொள்ள வேண்டும் எனலாமோ?