திருவருட்பா - கருணைக் கடலே
வள்ளலாரின் பாடல்கள் மிக மிக எளிமையானவை. ஒரு தரம் வாசித்தால் மனதில் ஒட்டிக் கொள்ளும்.
அப்படி ஒரு பாடல்
மண்ணினுள் மயங்கி வஞ்சக வினையால்
மனந்தளர்ந் தழுங்கிநாள் தோறும்
எண்ணினுள் அடங்காத் துயரொடும் புலையர்
இல்லிடை மல்லிடு கின்றேன்
விண்ணினுள் இலங்கும் சுடர்நிகர் உனது
மெல்அடிக் கடிமைசெய் வேனோ
கண்ணினுள் மணியே ஒற்றியங் கனியே
கடவுளே கருணையங் கடலே.
பொருள்
மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி
வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால்
மனந்தளர்ந் தழுங்கி = மனம் தளர்ந்து அழுங்கி
நாள் தோறும் = தினமும்
எண்ணினுள் = எண்ணில்லாத
அடங்காத் துயரொடும் = அளவற்ற துயரத்தோடு
புலையர் = புலையர்
இல்லிடை மல்லிடு கின்றேன் = இல்லத்தின் இடையில் சண்டை பிடிக்கிறேன்.
விண்ணினுள் இலங்கும் சுடர் நிகர் = வானில் உள்ள சுடர் போன்ற
உனது = உனது
மெல்அடிக் கடிமைசெய் வேனோ = மெல் அடிகளுக்கு அடிமை செய்வேனோ
கண்ணினுள் மணியே = கண்ணில் உள்ள மணி போன்றவனே
ஒற்றியங் கனியே = திருவொற்றியூரில் உள்ள கனி போன்றவனே
கடவுளே கருணையங் கடலே. = கடவுளே, கருணைக் கடலே
சில சமயம் எளிமையாக இருக்கிறதே என்று நாம் அதில் உள்ள ஆழத்தை அறியாமல் இருந்து விடுவோம்.
இந்தப் பாடலை பற்றி சற்று ஆழ்ந்து சிந்திப்போம்.
மண்ணினுள் மயங்கி = இந்த மண்ணுலகில் மயங்கி
அது என்ன மயக்கம் ?
நாம் எதில் தான் மயங்கவில்லை எங்கே. இந்த உடல் நமது என்று நினைக்கிறோம். என்றும் இளமையாக இருப்போம் என்று நினைக்கிறோம். என்றும் நிலைத்து இருப்போம் என்று நினைக்கிறோம். இந்த மனைவி, மக்கள் எல்லாம் நம் மேல் எப்போதும் நம் மீது அன்புடன் இருப்பார்கள் என்று நினைத்து மயங்குகிறோம். இந்த சொத்து எப்போதும் நம்மோடு இருக்கும் என்று நினைக்கிறோம். பணம் நம்மை அனைத்து துன்பத்தில் இருந்தும் காப்பாற்றி விடும் என்று நினைக்கிறோம். எத்தனை மயக்கம்.
எது உண்மை, எது பொய், எது நிரந்தரம், யார் நட்பு, யார் பகை, எது சரி , எது தவறு என்று தெரியாமல் தடுமாறுகிறோம்.
தெரிவது போல இருக்கிறது. ஆனால் முழுவதும் தெரியவில்லை. எனவே "மயக்கம்" என்றார்.
வஞ்சக வினையால் = என் வஞ்சக வினையால்
ஒரு வினை செய்யும் போது அதன் விளைவு தெரியவில்லை. முதலில் நல்லா இருப்பது போல இருக்கும். பின்னால் சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும். புகை பிடிப்பது, மது அருந்துவது போன்ற வினைகள் மட்டும் அல்ல, அளவற்று உண்பது, சோம்பேறித்தனம் போன்ற தீயவை போல தெரியாத வினைகள் கூட பின்னாளில் தீமையாக முடியும். எனவே வஞ்சக வினை என்றார். பின்னாளில் தீமை வரும் என்றால் அது முதலிலேயே கடினமாய் இருந்து விட்டால் நாம் செய்ய மாட்டோம். முதலில் சுகமாக இருக்கும், பின்னாளில் சிக்கலில் கொண்டு போய் மாட்டி விடும்.
பொல்லா வினை உடையேன் புகழுமாறு ஒன்றறியேன் என்பார் மணிவாசகர். பொல்லாத வினை.
மனந்தளர்ந் தழுங்கி = மனம் தளர்ந்து அழுங்கி
மனம் ஏன் தளர வேண்டும் ? நல்லது என்று ஒன்றை செய்கிறோம், அது வேறு விதமாக போய் முடிகிறது. எளிதாக கிடைக்கும் என்று நினைத்தது கை விட்டு நழுவிப் போகும், நமக்கு கிடைக்கும் என்று நினைத்தது வேறு யாருக்கோ கிடைத்து விடிகிறது. வயதாக வயதாக உடல் நிலை மோசமாகும். இவற்றை எல்லாம் பார்க்கும் போது மனம் தளரும்.
"சடையவனே தளர்ந்தேன் எம்பிரான் என்னை தாங்கிக் கொள்ளே" என்பார் மணிவாசகர்.
கடையவ னேனக் கருணையி னாற் கலந் தாண்டுகொண்ட
விடையவ னேவிட் டிடுதிகண்டாய்விறல் வேங்கையின் தோல்
உடையவ னே மன்னும் உத்தரகோசமங்கைக்கரசே
சடையவ னேதளர்ந் தேன்எம் பிரான்என்னைத் தாங்கிக்கொள்ளே.
மேலும் சிந்திப்போம்.
நல்ல பாடல். கடைசியில் தந்திருக்கும் மாணிக்க வாசகர் பாடலும் என்ன ஒரு சுவை!
ReplyDelete