அறநெறிச்சாரம் - யார் உறவினர் ?
யார் உறவினர் ?
பெற்றோர், பிள்ளைகள், கணவன், மனைவி, உடன்பிறப்புகள் எல்லாம் உறவுகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நமக்கு உண்மையான உறவு யார் தெரியுமா ?
நல்ல அறம் - தந்தை
நிறைந்த அறிவு - தாய்
நன்கு உணரும் கல்வி = தோழன்
துணிவு - தம்பி
இவை இல்லாத மற்றைய உறவுகள் பொய் உறவுகளே என்கிறது அறநெறிச்சாரம்.
பாடல்
நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென் தோழன் துணிவெம்பி-அல்லாத
பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.
சீர் பிரித்த பின்
நல்ல அறம் என் தந்தை நிறை என் அம்மை நன்கு உணரும்
கல்வி என் தோழன் துணிவு என் தம்பி -அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ? பொருளாய
இச்சுற்றத் தாரில் எனக்கு.
பொருள்
நல்ல அறம் என் தந்தை = நல்ல அறம் எனக்குத் தந்தை
நிறை என் அம்மை = நிறைவு, திருப்தி, அமைதி - என் தாய்
நன்கு உணரும் கல்வி என் தோழன் = கல்வியே எனக்குத் தோழன்
துணிவு என் தம்பி = என்னுடைய துணிவே எனக்குத் தம்பி
அல்லாத = இவை அல்லாத
பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ? = பொய்யான சுற்றத்தாரும் ஒரு பொருளா ? (இல்லை).
பொருளாய இச்சுற்றத் தாரில் எனக்கு = உண்மையான பொருளான இந்தத் சுற்றத்தாரில் எனக்கு
.
நமக்கு உறவு நாம் தான். அறம்தான் நம்மை வழி நடத்தும் தந்தை. நிறைவான , அமைதியான, திருப்தியான மனமே நமக்குத் தாய். நம் கல்வியே நமக்குத் தோழன். நம் துணிவே நமக்குத் தம்பி (உடன் பிறப்பு)
இதை விட்டு வெளியே சொந்தங்களைத் தேடுவது துன்பத்தைத் தான் தரும்.
நமக்கு நாமே உறவு.
அருமையான பாடல்! இதை எப்போதும் நினைவில் வைத்திருந்தால் நன்றாக இருக்கும்.
ReplyDelete