இராமாயணம் - சுந்தர காண்டம் - சந்தேகம்
துன்பம் வந்தால் சுந்தர காண்டம் படியுங்கள் என்று சொல்கிறார்கள். அழகான காண்டம் (சுந்தரம்) என்றால் அதில் ரசிக்க ஏதாவது இருக்க வேண்டும். அழகிய பூஞ்சோலைகள், அருவிகள், பச்சை பசேல் என்ற வயல் வெளி, அங்கு வரும் பறவைகள், மகிழ்ச்சியான ஆடி பாடும் மக்கள் என்று ஏதாவது இருக்க வேண்டும்.
சுந்தர காண்டத்தின் தொடக்கம் சீதையைப் பிரிந்த இராமன். ஒரே புலம்பல் இரண்டு பேரும் . அனுமன் கடல் தாண்டி போகிறான். உப்புக் கடலில் இரசிக்க என்ன இருக்கிறது. பாத்தா குறைக்கு போகின்ற வழியில் இடைஞ்சல்கள் வேறு. இலங்கைக்குப் போன பின்னால், சீதை தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாள். அனுமன் இலங்கைக்கு தீ வைக்கிறான். கணையாழியோடு திரும்பி வந்து சேர்கிறான்.
இதில் என்ன சுந்தரம் இருக்கிறது ?
அது மட்டும் அல்ல, நாமே ஒரு துன்பம் என்று போனால், கதையில் அதை விட பெரிய துன்பமாக இருக்கிறது. மனதுக்கு ஆறுதலாக ஒன்றும் இல்லை.
பின் ஏன் துன்பம் வந்த நேரத்தில் சுந்தர காண்டம் படி என்று சொன்னார்கள் ?
காரணம் இருக்கிறது.
எந்த ஒரு துன்பத்தையும், சிக்கலையும் எப்படி சரி செய்து , அதில் இருந்து மீள்வது என்று காட்டுகிறது சுந்தரகாண்டம்.
துன்பத்தில் இருந்து மீண்டால் மகிழ்ச்சி தானே ?
அந்த மகிழ்ச்சிக்கு வழி காட்டுவது சுந்தர காண்டம்.
எப்படி என்று பார்ப்போம்.
அனுமன் சீதையைத் தேடி புறப்படுகிறான். மகேந்திர மலையின் மேல் ஏறி , தனது விஸ்வரூபத்தை எடுத்து நாலா புறமும் பார்க்கிறான்.இலங்கை எங்கே என்று தெரியாது. முன்ன பின்ன போனது கிடையாது. வரைபடம் கிடையாது. போக வேண்டிய இடம் தெரியும். எப்படி போவது என்று தெரியாது. இலங்கை எப்படி இருக்கும் என்றும் தெரியாது.
நம் வாழ்விலும் அப்படி எத்தனையோ குழப்பங்கள் வருவது உண்டு இல்லையா. என்ன வேண்டும் என்று தெரியும். ஆனால் அதை எப்படி அடைவது என்று தெரியாது.
பாடல்
ஆண் தகை ஆண்டு அவ் வானோர்
துறக்கம் நாடு அருகில் கண்டான்;
ஈண்டது தான்கொல் வேலை
இலங்கை என்று ஐயம் எய்தா,
வேண் தரு விண்ணாடு என்னும்
மெய்ம்மை கண்டு உள்ளம் மீட்டான்;
‘காண் தகு கொள்கை உம்பர்
இல் ‘எனக் கருத்துள் கொண்டான்.
பொருள்
ஆண் தகை = ஆண்களில் உயர்ந்த அனுமன்
ஆண்டு = அப்போது (விஸ்வரூபம் எடுத்த அப்போது)
அவ் வானோர் = வானவர்கள், தேவர்கள்
துறக்கம் நாடு = தேவர்களின் நாட்டை
அருகில் கண்டான்; = அருகில் கண்டான்
ஈண்டது தான்கொல் = இப்போது அது தான்
வேலை = கடல்
இலங்கை என்று = (சூழ்ந்த) இலங்கை என்று
ஐயம் எய்தா = சந்தேகம் கொண்டான்
வேண் தரு = வேண்டியதைத் தரும்
விண்ணாடு என்னும் = விண்ணவர்களின் நாடு
மெய்ம்மை கண்டு = என்ற உண்மையை அறிந்து
உள்ளம் மீட்டான்; = உள்ளம் மீண்டான்
‘காண் தகு கொள்கை = காணாத தகுந்த கொள்கை (சீதையை காண வேண்டும் என்ற கொள்கை )
உம்பர் இல் ‘ = இங்கே இல்லை
எனக் கருத்துள் கொண்டான். = என மனதில் கொண்டான்
இதில் இரண்டு விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஒன்று, நமது குறிக்கோள் என்ன என்பதை ஒரு போதும் மறக்கக் கூடாது.
இரண்டாவது, குறிக்கோளை அடையும் வழியில் பல சலனங்கள், சபலங்கள் வரும். அவற்றைக் கண்டு , அதில் மயங்கி நின்று விடக் கூடாது. அல்லது குறிக்கோளை விட்டு வேறு வழியில் போகக் கூடாது.
அனுமனுக்கு தேவர்களின் உலகம் கண்ணில் பட்டது. அப்படியே ஒரு சுற்று சுற்றிவிட்டு வரலாமே என்று நினைத்திருக்கலாம். அழகான பெண்கள், கற்பக மரம், இனிமையான இசை, நல்ல கட்டிடங்கள், மனதை மயக்கும் நறுமணம் என்று எல்லாமே இருந்திருக்கும்.
அதில் எல்லாம் மனதைச் செலுத்தாமல், தனது குறிக்கோள் என்ன என்பதில் கவனமாக இருந்தான்.
துன்பத்தை வெல்ல முதல் படி, குறிக்கோளில் தெளிவாக இருக்க வேண்டும்.
எடையை குறைக்க வேண்டும் என்பது குறிக்கோள். உணவை கட்டுப் படுத்த வேண்டும் என்று தெரியும். நல்ல ice cream ஐ பார்த்தால் உடனே குறிக்கோள் மறந்து போய் விடுகிறது.
படிக்க வேண்டும் , நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்பது குறிக்கோள்.தொலைக்காட்சியில் cricket வந்தால், பெரிய நடிகரின் படம் திரைப்படத்தில் வந்தால் குறிக்கோள் மறந்து போய் விடுகிறது.
சலனத்திற்கு ஆட்படாமல், குறிக்கோளில் குறியாக இருக்க வேண்டும்.
துன்பம் ஓடிப் போய்விடும்.
போகட்டும்.
http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post.html
இவ்வளவு நாட்கள் இங்கு வராமல் இருந்து விட்டேனே என்கிற ஆதங்கம் மிகவும் வாட்டுகிறது.நவ ரத்தினங்கள் கொட்டி கிடைக்கும் கூடத்தில் நடுவில் விட்டாற்போல் ஒரு பிரமிப்பு.கூடவே ஒரு வருத்தம்.வாழ் நாட்களை வீணடித்து விட்டோமே என்று. எதை முதலில் படிப்பது எதை பின்னர் பார்க்கலாம் என்ற பெரிய குழப்பம் வேறு..ஒரு வரிசையில் இல்லாமல் மனம் போன போக்கில் படிக்கிறேன்.ஒவ்வொன்றும் ஒரு தங்கக்கட்டி.மூலத்தை எல்லாம் படிக்க ரசிக்க அனுபவிக்க நேரமில்லாத முதுமையை அடைந்த நிலையில் உள்ள எனக்காகவே ,தேர்ந்து எடுத்தாற்போல் தமிழ் இலக்கியத்தில் உள்ள பல நல் முத்துக்களை அருமையான விளக்கத்துடன் கொடுத்த உங்களுக்கு கோடி நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுத் தான ப
ReplyDeleteமுத்தான பாடலை முழுச் சுவையோடு விளக் கிய உங்கள் அரும்பணி மேலும் சிறக்கட்டும.
ReplyDeleteமுத்தான பாடலை முழுச் சுவையோடு விளக் கிய உங்கள் அரும்பணி மேலும் சிறக்கட்டும.
ReplyDelete