Friday, July 29, 2016

இராமாயணம் - சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம்

இராமாயணம் - சுந்தர காண்டம் - செயலின் தொடக்கம் 


ஏதோ ஒரு காரணத்தால் நமக்கு  சில துன்பங்கள் வந்து சேர்ந்து விடுகின்றன.   நாமும் சோர்ந்து போய்  விடுகிறோம். என்ன செய்வது, யாரிடம் போய் உதவி கேட்பது , என்று குழம்பிப் போய் நின்றிருப்போம்.

கடைசியில் ஏதோ ஒரு வழி  தோன்றும். அது சரியா தவறா என்று கூடத் தெரியாது.

எப்போது ஒரு வழி சரி என்று தெரிந்து விட்டதோ, அப்போது அதில் முழு மூச்சுடன் செல்ல வேண்டும்.

அனுமன் இலங்கையை கண்ட பின் , ஆரவாரத்துடன் கிளப்புகிறான்...

எப்படி என்றால் ....

பாடல்


வன் தந்த வரிகொள் நாகம்
    வயங்கு அழல் உமிழும் வாய
பொன் தந்த முழைகள் தோறும்
    புறத்து உராய்ப் புரண்டு பேர்வ,
நின்று, அந்தம் இல்லான், ஊன்ற,
    நெரிந்து கீழ் அழுந்தும் நீலக்
குன்றம் தன் வயிறு கீறிப்
    பிதுங்கின குடர்கள் மான.


பொருள் 

வன் = வன்மையான

தந்த = தந்தம் போன்ற வலிமையான

வரிகொள் நாகம் = பற்களை கொண்ட நாகங்கள்

வயங்கு = விளங்கும்

அழல் உமிழும் வாய = தீயைக் காக்கும் வாயை கொண்டு

பொன் தந்த = பொன் முதலிய திரவியங்களை கொண்ட

முழைகள் தோறும் = குகைகள் எல்லாம்

புறத்து = வெளியே

உராய்ப் புரண்டு = புரண்டு உராய்ந்து

பேர்வ = வெளியே வந்து

நின்று = அனுமன் நின்று

அந்தம் இல்லான் = முடிவு இல்லாதவன்

ஊன்ற = அழுந்தி எழ

நெரிந்து =நசுங்கி

கீழ் = கீழே

அழுந்தும் = அழுந்தும்

நீலக் குன்றம் = நீல நிறமான மலை

தன் வயிறு கீறிப் = தன் வயிற்றை பிளந்து

பிதுங்கின குடர்கள் மான. = பிதுங்கி வெளியே வந்த குடல் போல இருந்தது.

அனுமன் தன் காலை அழுத்தி ஊன்றி மேலே கிளம்பிய போது , அந்த நீல நிற மலையில் உள்ள குகைகளில் இருந்த பாம்புகள் நெருப்பைக்  கக்கிக் கொண்டு வெளியே  வந்தன.அது , ஏதோ அந்த மலையின் வயிறு பிளந்து அதன் குடல் வெளியே வந்தது மாதிரி இருந்தது.

எந்த வேலையையும் , தொடங்கும்போது உங்கள் அனைத்து ஆற்றலையும்  சேர்த்து தொடங்குங்கள்.

A thing well begun is half finished என்று சொல்லுவது போல.


அது வெற்றியின் முதல் படி.


http://interestingtamilpoems.blogspot.in/2016/07/blog-post_29.html



1 comment:

  1. கம்பரின் உவமை ஆச்சரியமான உவமை என்றே சொல்ல வேண்டும்!

    ReplyDelete