Wednesday, August 17, 2016

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1

இராமாயணம் - வாலி வதம் - பாகம் 2.1


வாலி வதம் , இராமாயணத்தில் ஜீரணிக்க முடியாத ஒரு பகுதி. எத்தனை ஆயிரம் சமாதானம் சொன்னாலும், இராமன் மறைந்து இருந்து அம்பு எய்ததை , அவனுடைய பக்தர்களே கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கும் இடம் அது.

ஏன் அது நடந்தது ? இராமன் குழம்பிப் போனானா ? மனைவியைப் பிரிந்ததால் அவன் முடிவு எடுப்பதில் தடுமாறினானா ? அப்படி என்றால் அவனை நம்பி ஒரு பெரிய அரசை எப்படி ஒப்படைப்பது ?

வால்மீகிக்கும், கம்பனுக்கும் இது தெரியாதா ? ஏன் வேலை மெனக்கெட்டு அதை பாட வேண்டும். விட்டு விட்டுப் போகவேண்டியது தானே ? இராமன் போன்ற உயர்ந்த பாத்திரத்தை ஏன் அதன் மதிப்பில் இருந்து நழுவி விழச் செய்தார்கள்.

ஏதோ ஒரு காரணம் இருக்க வேண்டும் அல்லவா ?

அது என்ன காரணம் ?

சிந்திப்போம்.

மனிதனின் அறிவை அழிப்பது அவனுடைய ஆணவம். தான் என்ற ஆணவம் வரும்போது மனிதன் வீழ்ச்சியின் முதல் படியில் காலை வைக்கிறான்.

ஆணவம் அறிவுக்குப் போடும் திரை. அது உண்மையை மறைக்கும்.

ஆணவ மலம் ஆதி மலம் என்று சொல்லுவார்கள்.

வாலி, சுக்ரீவனோடு போர் செய்யப் புறப்படுகிறான்.

வாலிலியின் மனைவி தாரை தடுக்கிறாள். இத்தனை நாள் இல்லாத வீரம் சுக்ரீவனுக்கு எப்படி வந்தது ? என்று பலவும் சொல்லி வாலியை தடுத்து நிறுத்த முயல்கிறாள்.

வாலி ஆணவத்தின் உச்சியில் இருந்து பேசுகிறான் .

"இந்த மூன்று உலகமும் என் எதிரில் வந்தாலும், அவை என் முன்னால் நிற்காமல் தோற்று ஓடும் " என்று கூறுகிறான்.

பாடல்

மூன்று என முற்றிய
    முடிவு இல் பேர் உலகு
ஏன்று உடன் உற்றன
    எனக்கு நேர் எனத்
தோன்றினும், தோற்று அவை
    தொலையும் என்றலின்
சான்று உள; அன்னவை
    தையல் கேட்டியால். ‘


பொருள்

‘மூன்று என முற்றிய = மேல் , நடு , கீழ் என்று கூறப் படும் அந்த

முடிவு இல் பேர் உலகு = எல்லை அற்ற இந்த பெரிய உலகம் யாவும்

ஏன்று உடன் உற்றன = ஒன்று திரண்டு

எனக்கு நேர் எனத் தோன்றினும், = எனக்கு முன்னே தோன்றினாலும்

 தோற்று அவை  தொலையும் என்றலின் = அவை யாவும் தோற்று ஓடும்

சான்று உள; =அதற்கு சான்று உள்ளது

அன்னவை = அவற்றை

தையல் கேட்டியால். ‘ = பெண்ணே நீ கேட்டுக் கொள்

தன்னை மிஞ்ச இந்த மூன்று உலகிலும் யாரும் இல்லை என்கிறான்.

தனித் தனியாக கூட இல்லை, இந்த மூன்று உலகங்கள் ஒன்றாகச் சேர்ந்து வந்தாலும், என்னை ஒன்றும் செய்ய முடியாது என்கிறான்.

அது ஆணவத்தின் உச்சம்.

எவ்வளவுக்கு எவ்வளவு ஆணவம் கெட்டிப் பட்டிருக்கிறதோ , அவ்வளவுக்கு அவ்வளவு உண்மை நம் கண்களுக்குத் தெரியாது.



2 comments:

  1. புரியவில்லையே. வாலியின் ஆணவத்தை அழிப்பதற்காக ராமன் மறைந்து நின்று கொன்றானா?எதிரில் வந்தால் வாலிக்கு பலம் கூடும் என்ற காரணத்தை தவிர வேறு என்ன? ராமன்தன்னை மனிதனாக பாவித்து கொண்டுவாலியின் வரத்தை ஒடுக்க வேண்டிய உத்தி என கொள்ளலாம்

    ReplyDelete
  2. எத்தனை முறை பேசப்பட்டாலும், சுவாரஸ்யமான பகுதிதான்... ஒரு புதிய கோணத்தை எதிர் பார்க்கிறேன்....

    ReplyDelete