பிரபந்தம் - வினைக்கு நஞ்சு
நம் வீட்டில் எலித் தொல்லை, கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால், நாம் என்ன செய்வோம்.
அவை அண்டாமல் இருக்க எலி பாஷாணம், அல்லது கரப்பான் பூச்சி மருந்து வைப்போம். அவை ஓடி விடும், அல்லது அந்த விஷத்தை தின்று உயிர் விடும்.
நம் தொல்லை தீரும்.
இந்த எலி, கரப்பான் போல நமக்கு ஓயாத தொல்லை தருவது நாம் செய்த பழைய வினைகள்.
அந்த வினைகளை எப்படி விரட்டுவது அல்லது இல்லாமல் ஆக்குவது ? அதற்கு என்று ஏதாவது நஞ்சு இருக்கிறதா என்றால் இருக்கிறது என்கிறது பிரபந்தம்.
"நாராயணா " என்ற நாமமே நம் வல் வினைகளுக்கு எல்லாம் நஞ்சு போன்றது.
வல் வினைகள் நம்மை அண்ட விடாது, அண்டிய வல் வினைகளை களைந்து அவற்றின் மூலம் வரும் துன்பங்களில் இருந்து நமக்கு விடுதலை தரும்.
பாடல்
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.
சீர் பிரித்த பின்
மஞ்சு உலாவும் சோலை வண்டு அறையும் மா நீர் மங்கையார் வாள் கலிகன்றி
செஞ் சொல்லால் எடுத்த தெய்வ நன் மாலை இவை கொண்டு
சிக்கெனத் தொண்டீர்
துஞ்சும் போது அழைமின் துயர் வரில் நினைமின் துயரிலீர் சொல்லலிலும் நன்றாம்
நஞ்சுதான் கண்டீர் நம் உடை வினைக்கு நாராயாணா எனும் நாமம்
பொருள்
மஞ்சு = மேகங்கள்
உலாவும் = உலவுகின்ற
சோலை = சோலை
வண்டு அறையும் = வண்டுகள் ரீங்காரமிடும்
மா நீர் = சிறந்த நீர்
மங்கையார் = திருமங்கை ஆழ்வார்
வாள் = வாளை கையில் கொண்ட
கலிகன்றி = திருமங்கை ஆழ்வார்
செஞ் சொல்லால் = சிறந்த சொற்களால்
எடுத்த = செய்த
தெய்வ = தெய்வத்திற்கு சாத்திய
நன் மாலை = நல்ல மாலை
இவை கொண்டு = இவை கொண்டு
சிக்கெனத் தொண்டீர் = இறுக்கமாக பற்றிக் கொண்டு
துஞ்சும் போது அழைமின் = இறப்பு வரும்போது அழையுங்கள்
துயர் வரில் நினைமின் = துன்பம் வரும்போது நினையுங்கள்
துயரிலீர் சொல்லலிலும் நன்றாம் = துன்பம் வராதபோதும் சொன்னால் நல்லதாம்
நஞ்சுதான் கண்டீர் = விஷம் தான் அறிந்து கொள்ளுங்கள்
நம் உடை வினைக்கு = நம்மை பற்றிக் கொண்டு இருக்கும்
நாராயாணா எனும் நாமம் = நாராயாணா என்ற நாமம்
கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம்.
சிக்கெனைப் தொண்டீர் ....இறுக்கி பிடித்துக் கொள்ள வேண்டுமாம். கைகளால் அல்ல. நாராயணா என்ற நாமம் நமது நாவை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
சொல்லு நா நமச்சிவாயவே என்று சுந்தரர் சொன்ன மாதிரி நாவில் அந்த நாமம் பற்றிக் கொள்ள வேண்டும்.
பெற்ற தாய்தனை மகமறந் தாலும்
பிள்ளை யைப்பெறும் தாய்மறந் தாலும்
உற்ற தேகத்தை உயிர்மறந் தாலும்
உயிரை மேவிய உடல்மறந் தாலும்
கற்ற நெஞ்சகம் கலைமறந் தாலும்
கண்கள் நின்றிமைப் பதுமறந் தாலும்
நற்ற வத்தவர் உள்ளிருந் தோங்கும்
நமச்சி வாயத்தை நான்மற வேனே.
என்று வள்ளலார் கூறியது போல , நா , நாராயணா என்ற நாமத்தை மறக்கக் கூடாது.
அது என்ன சிக்கெனைப் பிடித்தல் ?
அந்த காலத்தில் புத்தகங்கள் படிக்க X போல ஒரு மரத்தில் செய்த பலகை இருக்கும். அதன் நடுவில் புத்தகத்தை வைத்துப் படிப்பார்கள். அந்த பலகைக்குப் பெயர் சிக்கு பலகை. புத்தகத்தை எடுத்து விட்டு மூடினால், அது ஒன்றுக்குள் ஒன்று புதைந்து ஒரே கட்டை போல ஆகிவிடும். அப்படி , நாராயாணா என்ற நாமமும், நாவும் ஒன்றோடு ஒன்று பிணைந்து ஒன்றாக ஆகி விடவேண்டும்.
சிக்கெனைப் பிடித்தேன் என்பார் மணிவாசகர்
பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?
சாகும் தருவாயில் சொல்ல வேண்டும், துன்பம் வரும் போது சொல்ல வேண்டும், துன்பம் வராத போதும் சொல்ல வேண்டும்.
என்ன இது ஒண்ணும் புரியலையே. சாகும் போது சொல்வது, துன்பம் வரும்போது சொல்வது , துன்பம் வராத போது சொல்வது என்றால் என்ன ?
பாடலின் வரிகளை கொஞ்சம் இடம் மாற்றி பொருள் கொள்ள வேண்டும்.
எப்போதும் அந்த நாமத்தை சொல்ல வேண்டும்.
முடியவில்லையா, சரி பரவாயில்லை, துன்பம் வரும்போதாவது சொல்லுங்கள்.
அப்போதும் சொல்லவில்லையா, இறக்கும் தருவாயிலாவது சொல்லுங்கள்.
போகும் இடத்துக்கு புண்ணியம் கிடைக்கும்.
தீய வினைகளுக்கு அது விஷம் போன்றது. இறக்கும் தருவாயில் சொன்னால் கூட, அது வாழ்நாளில் செய்த அத்தனை வினைகளும் அழிந்து போகும்.
சாவு எப்போது வரும், எப்படி வரும், அந்த நேரத்தில் நினைவு இருக்குமா ? தெரியாது. எனவே துன்பம் வராமல் சுகமாக இருக்கும் போதே சொல்லி வையுங்கள். அது உங்கள் நாவில் ஏறி அமர்ந்து கொள்ளும்.
வல் வினைகள் ஓயட்டும்.
வாழ்வில் ஒளி தீபம் வீசட்டும்.
நாராயாணா எனும் நாமம் உங்கள் வாழ்விலும் வசந்தத்தை கொண்டு தரட்டும்.
http://interestingtamilpoems.blogspot.in/2016/08/blog-post_68.html
உங்கள் பதிவுகளைச் சிக்கெனப் பிடித்தால் தமிழை வளர்த்துக்கொள்ளலாம்.... உங்கள் நேரத்திற்கும் பதிவுகளுக்கும் மீண்டும் ஒரு நன்றி...
ReplyDeleteபல இடங்களில் இருந்து பாடல்களைக் கொடுத்து, எங்கள் சுவையைப் பன்மடங்காகப் பெருக்கி விட்டாய். நன்றி.
ReplyDelete"கலிகன்றி = திருமங்கை ஆழ்வார்" என்ற விளக்கம் கொஞ்சம் புரியவில்லையே?!
ReplyDelete