இராமாயணம் - திருவடி சூட்டுப் படலம் - என் வயின் நேய நெஞ்சினால்
கானகம் போன அண்ணன் இராமனைத் தேடி வருகிறான் பரதன். எப்படியாவது இராமனை சமாதானம் பண்ணி அவனிடம் அரசை ஒப்படைக்க வேண்டும் என்பது பரதனின் எண்ணம். பரதன் தூரத்தில் படையோடு வருவதைக் கண்ட இலக்குவன் ஏதோ பரதன் தங்கள் மேல் படை எடுத்து தான் வருகிறான் என்று தவறாக எண்ணி பரதன் மேல் மிகுந்த கோபத்துடன் போர் தொடுக்க தயாராகிறான்.
இலக்குவனை இராமன் சமாதானப் படுத்துகிறான்.
"இலக்குவா , பரதனை எப்படிப் பட்டவன் என்று நினைக்கிறாய் ? உலகில் எத்தனை வேதங்கள் உள்ளனவோ அவற்றில் சொல்லப் பட்ட மொத்த அறங்களின் தொகுப்பு பரதனின் செயல். நீ அதை நினைக்காமல் பரதன் மேல் கோபம் கொள்ளக் காரணம், பரதன் மேல் உள்ள வெறுப்பால் அல்ல, என் மேல் கொண்ட அளவு கடந்த காதலால்"
என்கிறான்.
பாடல்
‘எனைத்து உள மறை அவை இயம்பற்பாலன,
பனைத் திரள் கரக் கரிப் பரதன் செய்கையே;
அனைத் திறம் அல்லன அல்ல; அன்னது
நினைத்திலை, என் வயின் நேய நெஞ்சினால்.
பொருள்
‘எனைத்து = எத்தனை
உள = உள்ள
மறை = வேதங்கள், அற நூல்கள்
அவை = அவற்றை
இயம்பற்பாலன = சொல்லமுடியாது
பனைத் = பனை மரம் போல
திரள் = திரண்ட
கரக் = கரத்தை உடைய
கரிப் = யானை
பரதன் செய்கையே = பரதனது செய்கைகளே
அனைத் திறம் = அவனது அந்தத் திறம்
அல்லன அல்ல; = மற்றது அல்ல
அன்னது = அதை
நினைத்திலை, = நீ நினைக்கவில்லை
என் வயின் = என்மீதுள்ள
நேய நெஞ்சினால் = நேசம் கொண்ட நெஞ்சினால்
மிக அழகான பாடல்.
பரதனைப் பற்றி இலக்குவன் தவறாக நினைத்து கோபம் கொள்கிறான். இலக்குவன் கோபத்தை தணிக்க வேண்டும். பரதனது நல்ல உள்ளத்தையும் சொல்ல வேண்டும்.
இராமன் மிக அழகாக பேசுகிறான்.
முதலாவது, பரதனின் உயர்ந்த குணம் பற்றி கூறுகிறான். உலகில் உள்ள அனைத்து வேதங்களும் ஒழுக்கம், அறம் என்று எதை கூறுகின்றனவோ , பரதனின் செய்கை அது தான். வேதம் எல்லாம் ஒண்ணும் படிக்க வேண்டாம். பரதன் என்ன செய்கிறானோ, அது தான் வேதம்.
இரண்டாவது, அப்படி என்றால் என்ன அர்த்தம். பரதன் அனைத்து வேதங்களையும் அவற்றின் சாரங்களையும் அறிந்து இருக்கிறான். அது மட்டும் அல்ல, அவை சொன்ன வழியில் நடக்கிறான்.
மூன்றாவது, அப்படிப்பட்ட பரதன் மேல் இலக்குவன் கோபம் கொண்டான். நேரடியாக சொல்ல வேண்டும் என்றால், இலக்குவனுக்கு அதை அறியும் அறிவு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இராமன் அப்படி சொல்லவில்லை. "நீ பரதன் மேல் கோபம் கொண்டாய். அதற்கு காரணம் , பரதனை அறியாததால் அல்ல, என் மேல் கொண்ட அளவு கண்ட காதாலால்" என்று இலக்குவன் மனம் புண் படாமல் அதே சமயம் அவன் நினைப்பது தவறு என்று உணர்த்துகிறான்.
நான்காவது, மிக முக்கியமானது. நாம் யார் மீதாவது அளவு கடந்து அன்பு வைத்தால், அந்த அன்பு உண்மையை மறைக்கும். மற்றவர்கள் மேல் கோபத்தையும் வெறுப்பையும் கூட வளர்க்கும். காலம் காலமாய் மாமியார் மருமகள் சண்டை ஏன் வருகிறது. தாய்க்கு மகன் மேல் உள்ள அளவு கடந்த காதல். மனைவிக்கு கணவன் மேல் உள்ள அளவு கடந்த காதல். இருவருக்கும் ஒருவர் மேல் உள்ள அன்பால் மற்றவர் மேல் கோபமும் வெறுப்பும் வருகிறது. இதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மாமியார் மேலும் தவறு இல்லை. மருமகள் மேலும் தவறு இல்லை. கண்மூடித்தனமான அன்பே இந்த சிக்கலுக்கு காரணம்.
அன்பாகவே இருந்தாலும், அளவு வேண்டும். கோபம் எவ்வளவு தீமை செய்கிறதோ அதே அளவு கண்மூடித்தனாமான அன்பும் தீமை செய்யும்.
ஐந்தாவது, நாட்டின் மேல் கொண்ட அதீத அன்பு, தான் சார்ந்த அரசியல் கோட்பாடுகளின் மேல் கொண்ட தீவிர பற்று, மதத்தின் மேல் கண்மூடித்தனமான பிடிப்பு இவை எல்லாம் மற்றவர்களின் மேல் கோபமும், வெறுப்பும் கொள்ளச் செய்கிறது. அது சரி அல்ல. அன்பு உண்மையை மறைக்கக் கூடாது. இராமன் மட்டும் தடுக்காவிட்டால், பெரிய யுத்தம் நிகழ்ந்து பெருத்த சேதம் விளைந்திருக்கும்.
கண்மூடித்தனமான அன்பினால் எவ்வளவு கொலைகள், சண்டைகள், நிகழ்கின்றன. மதத்தின் மேல் கொண்ட வெறியால் பெற்ற பிள்ளைகளை கூட கௌரவ கொலை என்ற பெயரில் கொலை செய்கிறார்கள் பெற்றோர்கள்.
ஆறாவதாக , இது போன்ற சமயங்களில் இராமன் போன்ற பெரியவர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது நலம். இலக்குவன் , இராமன் சொன்னதை கேட்டான். கோபம் வந்தாலும், இராமன் சொன்னபடி கேட்டு நடந்தான்.
இலக்கியங்கள், நம் அறிவின் எல்லைகளை விரிவாக்க வேண்டும். நம் செயல்களுக்கு பின்னால் உள்ள காரணங்களை நாம் அறிந்து கொள்ள அது உதவும்.
வல்லவர்கள்ளக மட்டும் அல்ல, நல்லவர்களாகவும் மாறுவோம்.
மாற வாழ்த்துக்கள்
எவ்வளவு நயமாக எடுத்துச் சொல்கிறான் இராமன்! நன்றி.
ReplyDeleteஅளவுகடந்த அன்பு கோபத்தையும் வெறுப்பையும் வளர்க்கும்.
ReplyDelete