Sunday, April 23, 2017

திருக்குறள் - அறமும் அருளும்

திருக்குறள் - அறமும் அருளும் 


அருள் இல்லாதவன் செய்யும் அறம் என்பது தெளிவில்லாதவன் பெற்ற மெய் பொருள் போன்றது என்கிறார் வள்ளுவர்.

பாடல்

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

பொருள்

தெருளாதான் = தெளிவு இல்லாதவன்

மெய்ப்பொருள் = உண்மையான ஞானத்தை

கண்டற்றால் = கண்டது

தேரின் = ஆராய்ந்தால்

அருளாதான் = அருள் இல்லாதவன்

செய்யும் அறம் = செய்யும் அறத்துக்கு ஒப்பானது

சில பேர் நிறைய தானம் தர்மம் செய்வார்கள். அந்த உதவிகளுக்குப் பின்னால் அருள்  மனம் இருக்காது. ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்து தான் அந்த தானம் செய்வார்கள்.

 சரி, செய்து விட்டு போகட்டுமே. அருள் இல்லாவிட்டால் என்ன . உதவி செய்து விட்டுப் போகட்டுமே. எப்படி நினைத்து செய்தாலும் அறம் நல்லது தானே என்று நினைப்போம்.

அது சரி அல்ல.

ஒட்டு வாங்க பணம்  தருகிறார்கள். அந்த பணம் தானம் தான். இலவசம் தான். பணம் பெற்றுக் கொண்டவர்கள் , யார் பணம் தந்தார்களோ அவர்களுக்குத் தான்  ஓட்டு போடுவார்கள் என்று நிச்சயம் இல்லை.  எனவே,அந்த பணம் தானம் தான்.

அது சரியா ?

அப்படி தானமாக பணம் தந்தவன், ஆட்சிக்கு வந்தால் தகாதன  செய்வான்.

சரி, அது போகட்டும். அரசியலை விட்டு  விடுவோம்.

அருள் இல்லாமல் ஒருவன் உதவி செய்தால், மறு உதவி எதிர் பார்க்காவிட்டால் கூட, எப்போதாவது சொல்லி காண்பிப்பான். "உனக்கு அன்று  அப்படி உதவி செய்தேனே " என்று  பலர் முன்னிலையில் சொல்லுவான். நமக்கு தர்ம சங்கடமாக இருக்கும்.

அருள் இல்லாதவன் செய்யும் அறம் ஆபத்தானது.

எவ்வளவு ஆபத்தானது என்றால் ,

தெளிந்த அறிவு இல்லாதவன் பெற்ற மெய் அறிவு போன்றது.

அது என்ன உதாரணம்.

தெளிந்த அறிவு இல்லாதவன் பெற்ற மெய் ஞானத்தால் என்ன ஆபத்து ?

ஏதோ ஓரிரு புத்தகங்களை படித்து விட்டு எல்லாம் அறிந்த மேதாவி போல  சிலர்  எல்லா பிரச்சனைகளுக்கும் வழி சொல்வார்கள். அவர்கள் சொல்வதை கேட்டு  நடந்தால் , அது ஆபத்தில் தான் போய் முடியும்.

ஒன்றும் இல்லை, நீங்கள் இருக்கும் whatsapp group இல் , உங்களுக்கு உடலில் ஏதோ ஒரு  வலி என்று சொல்லிப் பாருங்கள். தலை வலி, கால் வலி என்று சொல்லிப் பாருங்கள். உடனே எத்தனை பேர் எத்தனை மருந்து சொல்கிறார்கள் என்று. மருத்துவம் சம்பந்தமாக ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக  படித்திருப்பார்கள், கேள்வி பட்டிருப்பார்கள். அவ்வளவு தான், எல்லாம் படித்த , அனுபவம் வாய்ந்த மருத்துவர் மாதிரி மருந்து சொல்ல ஆரம்பித்து  விடுவார்கள்.

மருத்துவம் என்று இல்லை. எந்த பிரச்சனை என்றாலும் அதுக்கு வழி சொல்ல கிளம்பி விடுவார்கள்.

தெளிவு இல்லாதவன் என்றால் அரை குறை அறிவு. அரை வேக்காட்டு அறிவு உள்ளவன் என்று அர்த்தம். அது ஆபத்தில் கொண்டு போய் முடியும்.

ஆன்மீகமாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், எந்தத் துறையாக வேண்டுமானாலும்  இருக்கட்டும். அரைகுறை அறிவு ஆபத்துதான்.

அது போல அருள் இல்லாதவன் செய்யும் அறம் , அவனுடைய அருளற்ற தன்மையினால் , முன் செய்த அறம் அழிந்து போகும் அல்லது அழிக்கப்படும்.

கொடுக்கும் போது , இது என் பணம், என் செல்வம் என்று நினைத்துக் கொடுக்காதீர்கள். இந்த அளவுக்கு தானம் செய்ய செல்வத்தைத் தந்த இறைவனை வாழ்த்தி தானம் செய்யுங்கள் என்கிறார்  அருணகிரிநாதர்.

முருகன் எனக்கு  கொடுத்தான்,நான் எல்லா உயிர்களுக்கும் அதை  கொடுக்கிறேன் என்று நினைத்து, முருகனை வாழ்த்தி தானம்  செய்யச்  சொக்கிறார்.

  வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.


அருளை முதலில் மனதில் வையுங்கள், அப்புறம் தானம் செய்யுங்கள்.

தெளிவு பிறக்கும் வரை,  உங்கள்  வெளிப் படுத்தாதீர்கள்.


No comments:

Post a Comment