Saturday, July 1, 2017

திருக்குறள் - செயக் கிடந்தது இல்

திருக்குறள் - செயக் கிடந்தது இல் 


அது ஒரு பெரிய வீடு. வீடெல்லாம் செல்வச் செழிப்பு மின்னுகிறது. அங்கு உள்ள  அனைத்துப்  பொருள்களும் விலை உயர்ந்த பொருள்கள். குளிர் சாதன பெட்டிகள். பெரிய டிவி, என்று எங்கு பார்த்தாலும் செல்வம்.

அந்த வீட்டின் உரிமையாளன் இறந்து கிடக்கிறான். நடு வீட்டில் அவனது உடல் கிடத்தி வைக்கப் பட்டு இருக்கிறது.  அவனால் அந்த பொருள்களையெல்லாம் அனுபவிக்க முடியுமா ? அந்த பொருள்கள் அவனுக்கு ஏதாவது உதவி செய்யுமா ?

இரண்டும் இல்லை அல்லவா ?

சரி, அவன் கிடக்கட்டும் ஒரு புறம்.

நாம் வாழ் நாள் எல்லாம் ஓடி ஆடி பொருள் சேர்க்கிறோம். எல்லா பொருள்களையும் நாம் அன்புபவிக்கப் போகிறோமா ? நாம் அனுபவிக்கப் போவது இல்லை என்றால், எதற்காக வாழ் நாள் எல்லாம் செலவழித்து அவற்றை சேர்க்க வேண்டும் ?

அந்த வீட்டில், செல்வத்தை அனுபவிக்காமல் இறந்து கிடப்பவனுக்கும், நமக்கும் என்ன வித்தியாசம் ?

பாடல்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருL அஃதுண்ணான் 
செத்தான் செயக்கிடந்தது இல்.


பொருள்

வைத்தான்வாய் = வாய் என்றால் பணப் பெட்டியின் வாய். வைத்தான் வாய் , பணத்தை வைத்து இருக்கும் பேட்டி 


சான்ற = நிறைந்த

பெரும்பொருள் = பெரிய அளவிலான செல்வம்

அஃதுண்ணான் = அதை அனுபவிக்காதவன்

செத்தான் = இறந்தவன்

செயக்கிடந்தது இல் = செய்வதற்கு ஒன்றும் இல்லை.


செல்வத்தை சம்பாதிப்பதும், சேர்ப்பதும் மட்டும் அல்ல வாழ்க்கை. சேர்த்த  செல்வத்தை  சிறந்த முறையில் செலவழிக்கவும் தெரிய வேண்டும்.

அந்த வங்கியில் போட்டு வைத்தேன், தங்க நகைகள் வாங்கி இந்த பெட்டகத்தில் வைத்து இருக்கிறேன் , இந்த கம்பெனியின் பங்கில் முதலீடு செய்து இருக்கிறேன்  என்று கடின உழைப்பின் மூலம் ஈட்டிய பொருளை அனுபவிக்காமல் இருப்பவன், பிணத்துக்கு ஒப்பாவான் என்கிறார் வள்ளுவர்.

சரிதானே ?

இறந்தவன் பொருளை அனுபவிப்பது இல்லை. அது போல பொருளை அனுபவிக்கத் தெரியாதவன்  இறந்தவன் போலத்தானே ?

நாம் எவ்வளவுதான் கஷ்டப்பட்டு பொருள் சம்பாதித்தாலும், அந்த செல்வம் நமக்கு நேரடியாக பயன்படாது.

செல்வத்தை சரியான வழியில் பயன் படுத்தி, அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும், உறவினர்களுக்கு , நண்பர்களுக்கு உதவி அவர்களின் உறவை பலப் படுத்திக் கொள்ள வேண்டும்....

இப்படி நல்ல வழிகளில் பணத்தை அனுபவிக்கப் படிக்க வேண்டும்.

எப்படி எல்லாம் அனுபவிப்பது என்று பட்டியல் போடுங்கள்.

அனுபவியுங்கள்


1 comment:

  1. ‘’கூடு விட்டிங்கு ஆவிதான் போனபின் யாரே அனுபவிப்பார் பாவிகாள் அந்தப் பணம்’’ நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete