Sunday, July 2, 2017

இராமாயணம் - அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ?

இராமாயணம் - அவ் உரை மறுக்கும் ஈட்டதோ ?


நாட்டை ஏற்றுக் கொள்ளும்படி பரதன் எவ்வளவோ கேட்டுப் பார்த்து விட்டான் இராமனிடம். இராமன் அசைந்து கொடுப்பதாய் இல்லை. அருகில் இருந்த வசிட்டன், "குல குருவான என் ஆணை, நீ அரசை ஏற்றுக் கொள்ள வேண்டும் " என்று கூறுகிறான்.

வசிட்டனை வணங்கி, இராமன் சொல்லத் தொடங்குகிறான்.

"தாமரை மலரில் தோன்றிய பிரமனின் புதல்வனே (வசிட்டனே ), தாய், தந்தை, குரு போன்றோருக்கு ஒன்றை செய்கிறேன் என்று வாக்கு தந்து விட்டால் அதில் இருந்து மாறுவது சரியா "

என்று வசிட்டனிடம் இராமன் கேட்கிறான்.

பாடல்


சான்றவர் ஆக; தன் குரவர் ஆக; தாய்
போன்றவர் ஆக; மெய்ப் புதல்வர் ஆக; தான் -
தேன் தரு மலருளான் சிறுவ! -“ செய்வேன்” என்று
ஏன்றபின், அவ் உரை மறுக்கும் ஈட்டதோ?

பொருள்

‘சான்றவர் ஆக; = பெரியவர்கள் ஆக

தன் குரவர் ஆக; = தனக்கு மேலே உள்ளவர் (தலைவர், பெரியோர்) ஆகட்டும்

 தாய் போன்றவர் ஆக; = தாய் போன்றவர் ஆக. இராமன் வார்த்தையை பொறுக்கி எடுத்து போடுகிறான். தாய் ஆக என்று சொல்லவில்லை. தாய் போன்றவர் ஆக.

 மெய்ப் புதல்வர் ஆக; = உண்மையான புதல்வர்கள் ஆகட்டும்

தான் = ஒருவன்

தேன் தரு மலருளான் சிறுவ! = தேனைத் தருகின்ற மலரின் மேல் அமர்ந்து இருக்கும் பிரமனின் மகனே (வசிட்டனே )

 “ செய்வேன்” என்று = செய்வேன் என்று

ஏன்றபின், = ஏற்றுக் கொண்ட பின்

 அவ் உரை  = அந்த உரையை

மறுக்கும்  = மறுக்கும், மாறுபடும்

ஈட்டதோ? = செய்யலாமா (செய்யக் கூடாது என்பது தெளிவு)


சரியோ தவறோ, சொன்ன வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பது இராமனின் கொள்கை.

நான் வாக்கு தந்து விட்டேன். என்ன ஆனாலும் சரி, அதை நிறைவேற்றியே தீருவேன் என்று இராமன் கூறுகிறான்.

வாக்கு தரக் கூடாது. தந்து விட்டால், உயிரை கொடுத்தாவது அதை காக்க வேண்டும் என்பது நம் பண்பாட்டின் ஒரு கூறு.

வாக்குக்கு விலை இருக்கும் என்று தான் நமது வாழ்க்கை முறை அமைக்கப் பட்டிருக்கிறது.

திருமண சடங்கில், பெண்ணும் மாப்பிள்ளையும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு "வாழ்விலும் சாவிலும் ஒன்றாக இருப்பேன், சுக துக்கங்களில் சம பங்கு எடுப்பேன் " என்று வாக்குத் தருகிறார்கள்.

பெரிய பதவிகளை ஏற்றுக் கொள்ளும் போது  (MLA , MP , பிரதம மாதிரி, ஜனாதிபதி , தலைமை நீதிபதி ) பதவி பிரமாணமும் , இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்கள்.


சட்டம் போட்டு அதை கட்டுப் படுத்த முடியாது. ஒருவன் தரும் வாக்கு தான் முக்கியம்.

நீதி மன்றத்தில் "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறு எதுவும் இல்லை "  என்று பிரமாணம் செய்கிறார்கள்.

இந்த பிரமாணங்களை எல்லோரும் ஏற்று அதன்படி வாழ்ந்தால் இந்த நாடு எவ்வளவோ  முன்னேறி இருக்கும்.

மனைவியை துன்பத்தில் தவிக்க விடும் கணவன், கணவனை மதிக்காமல் அவன் துன்பத்தில்  பங்கெடுக்காத மனைவி , குடும்பச் சிக்கல்கள் வருகின்றன.  

ஏன் ? ஒருவருக்கு ஒருவர் துணையாய் இருப்போம் என்று தந்த வாக்கை இருவரும் காற்றில்   பறக்க விட்டதால்.

வீடு நாசமாகப் போகிறது.


அரசியல்வாதிகள் நாட்டை சுரண்டுகிறார்கள். இலஞ்சம் தலை விரித்து ஆடுகிறது? ஏன் ?

"பாரபட்சமின்றி நாட்டு மக்களுக்கு உழைப்பேன் " என்ற வாக்கை காற்றில் பறக்க  விட்டதால்.

இன்று நிறைய மருந்தகங்களில் தேவை இல்லாத சோதனைகள் செய்ய வைக்கிறார்கள்,  தேவை இல்லாத மருந்துகள் தருகிறார்கள். மருத்துவ மனைக்கு போவது என்றாலே பயமாக இருக்கிறது .

காரணம் என்ன ?

ஹிப்போக்கரிடிஸ் பிரமாணம் என்ற பிரமாணத்தை மருத்துவர்கள் காற்றில் விடுவதால்.

இத்தனை மணிக்கு வரும் என்றால், அத்தனை மணிக்கு வர வேண்டும். அது ஆகாய விமானமாக இருந்தாலும் சரி, உள்ளூர் பேருந்தாக இருந்தாலும் சரி.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை காப்பாற்றி அதன் வழி நடப்பேன் என்று ஒவ்வொரு குடிமகனும் வாக்குத் தருகிறான். அதன் படி நடந்து விட்டால் நாட்டில் கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் எப்படி நடக்கும் ?


இப்படி, நாடும், வீடும், நாட்டில் உள்ள அனைத்து துறைகளும் சிதைந்து போக  காரணம் , யாருக்கும் தங்கள் தந்த வாக்கை காப்பாற்றும் எண்ணம் இல்லாததால்.

எல்லோரும், தங்கள் வாக்கை காப்பாற்ற தொடங்கிவிட்டால், இந்த உலகம் சொர்க்கமாக மாறும்.

அதை வலியுறுத்த, இராமன் வாழ்ந்து காட்டுகிறான். 

No comments:

Post a Comment