Saturday, September 2, 2017

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - இவன் ஆவி கவர்க

திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - இவன் ஆவி கவர்க 


முன் கதைச் சுருக்கம்:

ஒரு வேதியன்  தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் கீழே விழுந்தது. விழுந்த அம்பு, அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய்ந்ததால் அவள் இறந்து போனாள். நீர் கொண்டுவந்த வேதியன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். இவளை யார் கொன்று இருப்பார்கள் என்று சுற்று முற்றும் பார்த்த போது , அங்கு ஒரு வேடன் இருப்பதைக் கண்டு, அவன்தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து அவனை பாண்டிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

வேடனை தண்டிக்க வேண்டும் என்று வேதியன் வேண்டுகிறான்.

தான் கொல்லவே இல்லை என்று வேடன் சாதிக்கிறான்.

அமைச்சர்களும், இதற்கு நூல்களில் ஒரு வழியும் இல்லை. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

பாண்டியன் இறைவனிடம் முறையிட்டான். அப்போது, "இந்த ஊரில் உள்ள வணிகத் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு நீ அந்த வேதியனோடு சென்று பார். உன் குழப்பத்தை தீர்த்து வைப்போம்" என்று அசரீரி சொல்லக் கேட்டு, மன்னனும் வேதியனும் அங்கு சென்றார்கள்.

அப்போது, இறை அருளால், இரண்டு எம தூதர்கள் பேசுவது அவர்களுக்குக் கேட்டது.

இரண்டு பேரில் ஒருவன் கேட்கிறான் "இந்த வீட்டில் உள்ள மணமகனின் வாழ் நாள் முடிந்து விட்டது. அவன் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவனுக்கோ ஒரு நோயும் இல்லை. இவன் உயிரை எப்படி எடுப்பது" என்று கேட்கிறான்.

இது முன் கதைச் சுருக்கம்.

இப்போது

அதற்கு இன்னொரு தூதன் சொல்கிறான்,

"எப்படி ஆல மரத்தில் முன்பே சிக்கியிருந்த அம்பை காற்றால் வீழ்த்தி பார்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ அப்படி, இந்த திருமண ஆரவாரத்தில் வெளியே கட்டியிருக்கும் கன்றை ஈன்ற பசுவை வெருண்டு ஓடச் செய்து , இவனை குத்த வைத்து இவன் உயிரைக் கவர்வோம்"

என்றான்.

பாடல்


ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக் 
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி  இந்தச் 
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற 
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க  என்றான்.


பொருள்


ஆற்று = வழி , வழியில் உள்ள

ஆல் = ஆலமரத்தில்

ஏறு உண்ட = ஏறியிருந்த

கணை = அம்பை

அருகு = அருகில்

ஒதுங்கும் = ஒதுங்கி இருந்த

பார்ப்பனியைக் = பார்பனப் பெண்ணை

காற்றுஆல் = காற்றினால்

வீழ்த்து = விழச் செய்து

எவ்வாறு கவர்ந்தோம் = எப்படி கவர்ந்தோமோ

அப்படி = அப்படி

இந்தச் = இந்த

சாற்று ஆரவாரத்தில் = பெரிய ஆரவாரத்தில்

தாம்பு அறுத்துப் = கட்டியிருக்கும் கயிற்றை அறுத்து

புறம் நின்ற = வெளியே நிற்கும்

ஈற்று ஆவை = கன்றை ஈன்ற பசுவை

வெருள = பயந்து ஓடும்படி

விடுத்து = செய்து

இவன் ஆவி  = இவனுடைய ஆவியை

கவர்க  என்றான் = கவர்ந்து கொள்வோம் என்றான்.


"ஆற்று ஆல் ஏறு உண்ட கணை" என்ற வரியில், ஆற்று என்ற சொல் வருகிறது. 

ஆறு என்றால் வழி. 


ஆற்றுப் படை என்று ஒரு பாடல் வகை உண்டு.  அதாவது, ஒரு தலைவனிடம் நன்மையைப் பெற்ற ஒருவன், மற்றவனை அதே வழியில் சென்று நன்மை அடைய வழி காட்டுவது. 

ஒரு புலவன் அரசனை பாடி பரிசு பெற்றால், மற்ற புலவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்லி அவர்களை  ஆற்றுப் படுத்துவது.

நக்கீரர் முருகன் அருள் பெற்றார். மற்றவர்களும் முருகன் அருள் பெற வழி சொல்லித் தந்த பாடல்களுக்கு  திருமுருகாற்றுப் படை என்று பொருள். 

சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை என்று பாடல்கள் உண்டு. 


கதை எப்படி போகிறது என்று பாருங்கள். 


திருமண வீடு. மணமகன் சாகப் போகிறான். எப்படி இருக்கும் ? ஒரு படபடப்பு  நமக்குள் வருகிறது அல்லவா ? 

வாசிக்கும் நமக்குத் தெரியும்.  அங்குள்ள யாருக்கும் தெரியாது. 

அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம் 

2 comments:

  1. இதன் முடிவு என்னவென்று எழுதவே இல்லையே?

    ReplyDelete