திருவிளையாடற் புராணம் - பழி அஞ்சின படலம் - என் செய்தும் ?
இதற்கு முந்தைய கதை சுருக்கங்களை முந்திய ப்ளாகுகளில் காணவும்.
இறைவன் ஆணைப்படி மன்னனும், வேதியனும் அந்த திருமண வீட்டில் மறைந்து இருந்து அங்கு நடப்பவற்றை கவனித்து வந்தார்கள். அப்போது எம தூதர்கள் இவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
"இன்றே இந்த மணமகனின் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவன் உடலிலோ ஒரு நோயும் இல்லை. எப்படி இவன் உயிரை கொண்டு செல்வது ? " என்று ஒரு எம தூதன் இன்னொருவனிடம் கேட்டான்.
பாடல்
இன்றே இங்கு இவன் உயிரைத் தருதிர் எனும் இரும் பகட்டுக்
குன்று ஏறும் கோன் உரையால் கொள்வது எவன் பிணி உடம்பின்
ஒன்றேன் உமிலன் ஒரு காரணம் இன்றி உயிர் கொள்வது
அன்றே என் செய்தும் என மற்றவன் ஈது அறைகிற்பான்.
பொருள்
இன்றே = இன்றே
இங்கு = இங்கு
இவன் = இவன்
உயிரைத் தருதிர் = உயிரை எடுத்து வாருங்கள்
எனும் = என்று
இரும் = பெரிய
பகட்டுக் = எருமை
குன்று = மலை போன்ற
ஏறும் கோன் = (மலை போன்ற பெரிய எருமையின் மேல் ) ஏறும் அரசன், நம் தலைவன் = எமன்
உரையால் = ஆணையால்
கொள்வது எவன் = எப்படி இவன் உயிரை கொள்வது ?
பிணி உடம்பின் ஒன்றேன் உமிலன் = உடம்பில் ஒரு நோயும் இல்லை
ஒரு காரணம் இன்றி = ஒரு காரணமும் இல்லாமல்
உயிர் கொள்வது = உயிரை எப்படி கொண்டு செல்வது ?
அன்றே என் செய்தும் = இப்போது என்ன செய்வது ?
என = என்று சொன்ன போது
மற்றவன் ஈது அறைகிற்பான் = இன்னொரு தூதுவன் சொல்லுவான்
நமது இலக்கிய கர்தாக்கள் நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது என்று நம்பினார்கள். இறைவன், விதி, மேல் உலகம், பாவம் , புண்ணியம் என்பதெல்லாம் உண்டு என்று நம்பினார்கள்.
திருவள்ளுவர், கம்பர் தொட்டு பாரதி வரை அனைவரும் இதை நம்பினார்கள்.
நமது வாழ்வில் நடக்கும் பல விஷயங்களுக்கு நமக்கு காரணம் தெரிவதில்லை. ஏன், இப்படி நிகழ்கிறது. நேத்து வரை நல்லாத்தானே இருந்தார், எப்படி திடீரென்று இப்படி ஆகி விட்டது என்று கேட்கும்படி ஆகி விடுகிறது.
நல்லவர்களுக்கு தீமை நிகழ்வதும், தீயவர்களுக்கு நன்மை நிகழ்வதும் புரிந்து கொள்ள முடிவதில்லை.
நமது சக்திக்கு அப்பாற்பட்ட சில விஷயங்கள் இருக்கிறது என்று அவர்கள் நம்பினார்கள்.
இறையருள் இருந்தால் அவற்றை அறிந்து கொள்ள முடியும் என்று இந்தப் பாடல் காட்டிச் செல்கிறது.
"இரும் பகட்டுக் குன்று ஏறும் கோன்"
பகடு என்ற சொல்லுக்கு எருமை, யானை, எருது என்ற பல பொருள் இருக்கிறது. இந்தப் பாடலில் எருமை கடா என்ற பொருள் பொருந்தி வருகிறது.
பகடு நடந்த கூழ் என்று சொல்லும் நாலடியார். அதாவது எருது உழுத நிலத்தில் இருந்து வந்த உணவு என்ற பொருளில்....
துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ;
அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்.
அபிராமியை தொழுதால் , "வெண் பகடு ஊறும் பதம்" கிடைக்கும் என்கிறார் அபிராமி பட்டர். வெண் பகடு என்றால் வெள்ளை யானை, ஐராவதம், அதாவது இந்திரப் பதவி கிடைக்கும் என்கிறார்.
மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன்
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு,
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.
என்பது அபிராமி அந்தாதி.
No comments:
Post a Comment